(Source: ECI/ABP News/ABP Majha)
இதுதான் நிஜமான கேரளா ஸ்டோரி.. மதநல்லிணக்க வீடியோ பகிர்ந்த ஏ.ஆர் ரஹ்மான்
கேரளாவைப் பற்றிய வெறுப்பு பிரச்சாரங்களுக்கு பதிலடி தரும் வகையில், கேரளாவில் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நிகழ்ந்த திருமணத்தைப் பற்றிய வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
கேரள மசூதியில் இந்து முறைப்படி நிகழ்ந்த திருமண வீடியோவைப் பகிர்ந்து தி கேரளா ஸ்டோரி படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சர்ச்சையைக் கிளப்பும் தி கேரளா ஸ்டோரி
கேரளாவில் இந்து மற்றும் கிறிஸ்துவ பெண்கள் கட்டாய இஸ்லாமிய மதத்துக்கு மாற்றம் செய்யப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்க்கப்படுவது போன்ற கதைக்களத்துடன் ‘தி கேரளா ஸ்டோரி’ எனும் படத்தின் ட்ரெய்லர் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி வெளியானது.
நடிகைகள் அதா ஷர்மா, சித்தி இத்னானி, யோகிதா பிஹானி, சோனியா பாலானி ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ள நிலையில், உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. சுதிப்தோ சென் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
பினராயி விஜயன் எதிர்ப்பு
கடந்த 10 ஆண்டுகளில் 30 ஆயிரம் பெண்கள் இதுபோல் மதமாற்றம் செய்யப்பட்டு காணாமல் போனதாக ட்ரெய்லரில் குறிப்பிடப்பட்ட நிலையில், இது திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரம் என்றும், இது போன்ற லவ் ஜிஹாத் பிரச்னைகள் கேரளாவில் இல்லை என்றும் கூறி எதிர்ப்புகள் கிளம்பின.
கேரளாவைப் பற்றிய பொய்யான கருத்துகளையும் பிரிவினைவாத கருத்துகளையும் இப்படம் விதைப்பதாக கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடுமையாக விமர்சித்த நிலையில், கேரள அரசு சார்பில் இந்தப் படத்துக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக உளவுத்துறை எச்சரிக்கை
ஆனால் முன்னதாக இந்தப் படத்துக்கு தடை கோரிய வழக்கை விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தை நாடுமாறும் தெரிவித்திருந்தது.
பல்வேறு கட்சி அரசியல் கட்சித் தலைவர்கள் தொடங்கி சமூக வலைதளவாசிகள் வரை பலரும் இந்தப் படத்துக்கு எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில், இந்தப் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டால் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சமூகத்திடமிருந்து எதிர்ப்புகள் கிளம்பும் என தமிழக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்!
இந்நிலையில் கேரளாவைப் பற்றிய வெறுப்பு பிரச்சாரங்களுக்கு பதிலடி தரும் வகையில், கேரளாவில் மசூதி ஒன்றில் இந்து முறைப்படி நிகழ்ந்த திருமணத்தைப் பற்றிய வீடியோவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார்.
“மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும் குணமாக்குவதாகவும் இருக்க வேண்டும்” எனும் கேப்ஷனுடன் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Bravo 🙌🏽 love for humanity has to be unconditional and healing ❤️🩹 https://t.co/X9xYVMxyiF
— A.R.Rahman (@arrahman) May 4, 2023
முன்னதாக டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தத் திரைப்படத்தின் சிறப்புக் காட்சியை பாஜக மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) நேற்று முன் தினம் நடத்தியது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.