(Source: ECI/ABP News/ABP Majha)
The Kerala Story Collection: அடேங்கப்பா..! எதிர்ப்புகள் இருந்தும் இவ்ளோ கலெக்ஷனா? தி கேரளா ஸ்டோரி முதல் நாள் வசூல் என்ன?
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” படம் பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வெளியான “தி கேரளா ஸ்டோரி” படம் பாக்ஸ் ஆபீஸில் முதல் நாளில் நல்ல வசூலைப் பெற்றுள்ளது.
எதிர்ப்புகளைப் பெற்ற “தி கேரளா ஸ்டோரி”
சுதிப்தோ சென் இயக்கத்தில் இந்தியில் உருவாகியுள்ள படம் “தி கேரளா ஸ்டோரி”. விபுல் அம்ருத்லால் ஷா தயாரித்துள்ள இப்படத்தில் அதா ஷர்மா , பிரணவ் மிஷ்ரா , யோகிதா பிஹானி , சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி, தேவதர்ஷினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியானது. அதில் கேரளாவைச் சேர்ந்த சுமார் 32 ஆயிரம் இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்பட்டு இஸ்லாமிய நாடான ஈராக் மற்றும் சிரியாவில் ISIS அமைப்பில் சேருவது போல திரைக்கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக காட்டப்பட்டிருந்தது. இது உண்மைக் கதைகளை அடிப்படையாகக் கொண்டது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எதிர்ப்புகள் எழுந்ததால் இந்த எண்ணிக்கை பின்னர் 3 ஆக மாற்றப்பட்டது.
இதனால் கேரள அரசு இப்படத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பலரும் இப்படத்தை சமூக வலைத்தளங்களில் விமர்சித்தனர். இப்படத்திற்கு தடை கேட்டு உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்டவற்றில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் படத்துக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், தமிழ்நாட்டில் தி கேரளா ஸ்டோரி திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களுக்கு போலீஸ் பாதுகாப்பளிக்க டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.
அதிருப்தியடைந்த ரசிகர்கள்
தொடர்ந்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் படம் வெளியான தியேட்டர்களை முற்றுகையிட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. எதிர்ப்புகளுக்கு மத்தியில் நேற்று படமும் வெளியானது. தமிழ்,இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உருவாகியிருந்தாலும் தமிழ்நாட்டில் இப்படம் இந்தி மொழியில் மட்டும் தான் வெளியானது. இதனால் இந்தி தெரியாமல் தியேட்டருக்கு சென்ற தமிழ் ரசிகர்கள் அதிருப்தியடைந்தனர். காரணம் சப் டைட்டிலும் இந்தியில் இடம் பெற்றிருந்தது.
இப்படியான நிலையில் தி கேரளா ஸ்டோரி படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி இந்தியாவில் இப்படம் முதல்நாளில் ரூ.8 கோடி வசூல் செய்துள்ளது. இது நடப்பாண்டில் 2023 ஆம் ஆண்டின் அதிகம் வசூலித்த முதல் ஐந்து திரைப்படங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அதேசமயம் தி கேரளா ஸ்டோரியுடன் வெளியான ஆங்கில படமான கார்டியன்ஸ் ஆஃப் கேலக்ஸி 3 படத்தை விட ஒரு கோடி அதிகமாகும்.
இதற்கு காரணம் கடுமையான எதிர்ப்புகள் எழுந்த நிலையில், அப்படி என்ன அந்த படத்தில் இருக்கிறது என்பதை அறிய ரசிகர்கள் காட்டிய ஆர்வம் தான் என சினிமா ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: The Kerala Story Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை கதையா? தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!