The Kerala Story Review: வெறுப்பு பிரச்சாரமா? உண்மை கதையா? தி கேரளா ஸ்டோரி விமர்சனம்!
The Kerala Story Movie Review in Tamil: திரைக்கு வருவதற்கு முன்னரே கடும் விவாதங்களைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. அதன் விமர்சனத்தைப் பார்க்கலாம்!

Sudipto Sen
Adah Sharma, Siddhi Idnani, Devadarshini, Yogita Bihani, Sonia Balani.
பிரதமர் மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் என அரசியல் தலைவர்கள் தொடங்கி நெட்டிசன்கள் வரை, திரைக்கு வருவதற்கு முன்னரே கடும் விவாதங்களைக் கிளப்பிய ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் இன்று (மே.05) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
ஆவணப்பட இயக்குநர் சுதிப்தோ சென் முதன்முறையாக இயக்கியுள்ள முழு நீள திரைப்படமான தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சித்தி இத்னானி, சோனியா பாலானி, தேவதர்ஷினி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
30,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட பெண்களுக்கான குரல் எனக்கூறி பின் கடும் எதிர்ப்புகள் காரணமாக எண்ணிக்கை மூன்றாக சுருங்கினாலும், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது எனும் தலைப்புடனேயே திரைப்படம் தொடங்குகிறது.
ஆனால் தி கேரளா ஸ்டோரி உண்மையில் கேரளாவின் கதை தானா?
ஷாலினி உன்னிகிருஷ்ணன், கீதாஞ்சலி எனும் இரண்டு இந்து பெண்கள், நீமா எனும் ஒரு கிறிஸ்தவ பெண் இந்த மூவரும் மேற்படிப்புக்காக இணையும் நர்சிங் கல்லூரி விடுதியில் ஆசிஃபா எனும் இஸ்லாமிய பெண் உடன் தங்கள் அறையைப் பகிர்ந்து கொள்கின்றனர். இவர்களில் தந்தை இல்லாமல் தாய் அரவணைப்பில் வளரும் அப்பாவி இந்து பெண் ஷாலினி, இடதுசாரி மற்றும் பகுத்தறிவு பேசும் தந்தையின் மகளான கீதாஞ்சலி இருவரிடமும் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய ஆசிஃபா இஸ்லாமை திட்டமிட்டு விதைத்து அவர்களை இஸ்லாமிய பாதைக்கு கொண்டு வருகிறார்.
தொடர்ந்து ஆசிஃபாவின் உறவுக்கார ஆண்கள் எனும் போர்வையில் இருக்கும் தீவிரவாத இயக்கத்தவருடன் இப்பெண்கள் நெருங்கிப் பழக, விளைவு ஷாலினி கருவுறுகிறார். அதனைத் தொடர்ந்து இஸ்லாமுக்கு அவர் மதமாற்றம் செய்யப்பட்டு, பின் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தவரை மணந்து கொள்ள நிர்பந்திக்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டு சிரியாவுக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் என்ன மாதிரியான சித்திரவதைகளை அனுபவித்தார், ஐஎஸ்ஐஎஸ் இயக்க தீவிரவாதிகளிடமிருந்து மீண்டு வந்தாரா என்பது மீதிக்கதை!
படைப்பு சுதந்திரம் என்ற பெயரில் தங்கள் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் போக்கு பாலிவுட், டோலிவுட் என இந்திய சினிமாக்களில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. கடவுளின் சொந்த பூமி என வர்ணிக்கப்படும் கேரளா மீது பாலிவுட் இயக்குநர் சுதிப்தோ சென் கொண்ட அக்கறையின் வெளிப்பாடாக (?!) கேரளாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் வெளிவந்துள்ளது. ஆனால் முன்னர் வெளியான பிரச்சார தொனி படங்கள் தாண்டி இதில் முன்னெடுக்கப்பட்டுள்ளது சகித்துக்கொள்ள முடியாத உச்சக்கட்ட வெறுப்பு பிரச்சாரம்!
உணவு உண்பது முதல் தூங்கச் செல்வது வரை தோழி என்ற பெயரில் இஸ்லாமிய போதனை செய்யும் மாணவி, கிறிஸ்தவ பெண்ணை விவரமானவராகக் காண்பித்து அப்பாவி இந்து பெண்கள் மட்டும் பலிகடாவாவதாகக் காண்பிப்பது, காட்சிகளில் பின்னணியில் இடம்பெறும் போஸ்டர்கள் (உதாரணம் - தேசியம் என்பது ஹராம். முஸ்லிம் என்பது உங்கள் அடையாளம்) என ஃப்ரேம் பை ஃப்ரேம் வெறுப்பு பிரச்சாரம் படம் முழுவதும் விரவிக் கிடக்கிறது.
3 பாதிக்கப்பட்ட பெண்களின் கதை என எதிர்ப்புகள் காரணமாக சுருக்கிக் கொண்டாலும், படத்தில் 30 ஆயிரம் பெண்கள், 50 ஆயிரம் பெண்கள் என வாட்ஸ்ப் ஃபார்வேட் மெசேஜ்கள் போல் ஆதாரமற்ற புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிக்கிறார்கள்.
ஆதாரங்கள் இல்லாததற்கான காரணம் குறித்து படம் முடிகையில் டிஸ்க்ளைமர் வழங்கவும் செய்கிறார்கள். தீவிரவாதத்தைத் தோலுரித்துக் காட்டுவதாகக் கூறி திரையரங்கில் படம் பார்த்துக் கொண்டிருப்பவர்களின் மீது காட்சிக்கு காட்சி தீவிரவாதத்தை ஏவுகிறார்கள், பார்வையாளர்களுக்கு போதனை செய்கிறார்கள்!
ஐஎஸ்ஐஎஎஸ் பற்றிய, தீவிரவாதத்தைப் பற்றிய பிரதிபலிப்பு மட்டுமே; இஸ்லாமையோ, அனைத்து இஸ்லாமியர்களையுமோ பிரதிபலிக்கவில்லை என சூசகமாகக் கூறினாலும், படம் முழுவதும் இயக்குநரின் தனிப்பட்ட அஜெண்டாவும், இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமுமே மண்டிக் கிடக்கின்றன.
இது தவிர, கடவுள்கள் பற்றி தனக்கு சொல்லிக்கொடுக்காத கடவுள் நம்பிக்கையற்ற, இடதுசாரி சித்தாந்தம் கொண்ட தந்தையை பாதிக்கப்பட்ட பெண் சாடுவது, கேரள மாநிலம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் கூடாரமாக மாறக்கூடும் என அம்மாநிலத்தின் மீதும், மாற்று கொள்கை கொண்டவர்கள் மீறும் தாக்குதல்கள் படம் நெடுக தொடர்கிறது.
கல்வியறிவில் நாட்டின் முன்னோடி மாநிலமாகத் திகழும் கேரளா, டைம் பாமின் மீது அமர்ந்துள்ளது, கேரளா அவ்வளவுதான் என்பன போன்ற வசனங்கள் உச்சபட்ச வேடிக்கை. கேரளா, கேரளா எனப் பேசுவதோடு சரி. ஃப்ரேமில் எங்கும் கேரளாவைக் காணவில்லை!
இத்தனை வெறுப்பு பிரச்சார வசனங்களையும் பேசி, ஆழமான நடிப்பை வழங்கி படத்தைத் தாங்குகிறார்கள் நடிகைகள் அதா சர்மாவும் தேவதர்ஷினியும் . விரேஷ் ஸ்ரீவல்சா - பிசாக் ஜோதியின் இசை கவனமீர்க்கவில்லை.
ஒட்டுமொத்த இஸ்லாமியர்களையும் குறிப்பிடவில்லை எனக் கூறி இயக்குநர் தப்பிக்கலாம், ஆனால் உடன் பழகும் இஸ்லாமியர்களையே மாற்று மதத்தினரை சந்தேகிக்க வைக்கும் அளவுக்கு வெறுப்பு காட்சிக்கு காட்சி தூவப்படுகிறது. இன்ஸ்டன்ட் விளைவாக திரையரங்குகளிலேயே இந்தக் குரல்கள் அதிகம் எழுகின்றன. கைத்தட்டல்களும் அள்ளுகின்றன.
கலைத்தன்மை கொஞ்சமுமற்ற, வெறுப்பு பிரச்சாரத்தை முழுமூச்சாகக் கேட்டு மன அழுத்தத்துக்கு ஆளாக விரும்புபவர்கள், ஆதாரமற்ற வாட்ஸப் ஃபார்வேர்ட் தகவல்களை நம்ப விரும்புபவர்கள், யூட்யூபர்கள் சொல்லும் புள்ளிவிவரங்களை அச்சு பிசகாமல் நம்பி உணர்ச்சிவசப்படுபவர்கள் நிச்சயம் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்தை திரையரங்குகளுக்குச் சென்று கண்டுகளித்து அனுதாபம் கொள்ளலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

