Venkat Prabhu: அடுத்த படம் நம்ம வீட்டு பிள்ளையோட... சிவகார்த்திகேயன் உடன் இணையும் வெங்கட் பிரபு
தி கோட் படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியாக நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்கவிருப்பதாக இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்
வெங்கட் பிரபு
சென்னை 28 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் வெங்கட் பிரபு . தொடர்ந்து கோவா , சரோஜா உள்ளிட்ட படங்களின் வழி தனக்கென ஒரு தனித்துவமான பாணியை உருவாக்கி ரசிகர்களை கவர்ந்தார். சிறிய பட்ஜெட்டில் சின்ன சின்ன நடிகர்களை வைத்து காமெடி ஜானரில் படங்களை இயக்கிவந்த வெங்கட் பிரபு தன்னால் பெரிய ஸ்டார்களை வைத்து மாஸான படங்களையும் கொடுக்க முடியும் என நிரூபித்தது மங்காத்தா படம். அஜித்தின் மொத்த கரியரில் மங்காத்தா படம் இன்றும் தனித்து நிற்கிறது. தற்போது விஜயை வைத்து தி கோட் படத்தை இயக்கியுள்ளார்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் தி கோட். எ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, லைலா, மோகன், மீனாக்ஷி செளதரி, வைபவ் , பிரேம்ஜி , ஜெயராம் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. தி கோட் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளை படக்குழு துவங்கியுள்ளது. முதற்கட்டமாக இயக்குநர் வெங்கட் பிரபு மலேசியா சென்றுள்ளார். அங்கு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் தனது அடுத்த படம் குறித்த அப்டேட்ஸ் கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் உடன் இணையும் வெங்கட் பிரபு
தி கோட் படத்தைத் தொடர்ந்து அடுத்தபடியான நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கவிருப்பதாக வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். தற்போது சிவகார்த்திகேயனுக்கு நிறைய கமிட்மெண்ட்கள் இருப்பதாகவும் அது எல்லாம் முடிந்தபிறகு இருவரது கூட்டணியில் படத்தின் வேலைகள் தொடங்க இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மகிச்சியடைந்துள்ளார்கள்.
"My next film is with #Sivakarthikeyan. But SK has some prior commitments, once he complete those commitments, the movie will go on floors 🤩🔥"
— AmuthaBharathi (@CinemaWithAB) August 25, 2024
- VenkatPrabhu pic.twitter.com/hXDnoF46mX
அமரன் & எஸ்.கே 23
தற்போது சிவகார்த்திகேயன் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்.கே 23 படத்தில் நடித்து வருகிறார். ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் ருக்மினி வசந்த் நாயகியாக நடிக்கிறார். வித்யுத் ஜம்வால், விக்ராந்த் , பிஜூ மேனன் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இது தவிர்த்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படம் ரிலீஸூக்கு தயாராகி வருகிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.