Maheshinte Prathikaaram: இத்தனை நாளா தெரியாம போச்சே..ஃபஹத் ஃபாசில் படத்திற்கு பின் இருக்கும் நிஜக்கதை!
ஃபகத் ஃபாசில் நடித்து மலையாளத்தில் வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் படம் இன்றுடன் 7 ஆண்டுகளை கடந்துள்ளது
மலையாளத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தில் நடிகர் ஃபஹத் ஃபாசிலின் கதாபாத்திரம் தம்பன் புருஷன் என்கிற நிஜ மனிதரை தழுவி உருவாக்கப் பட்டது என்பது பலருக்கும் தெரியாது.அதனைப் பற்றி காணலாம்.
மகேஷிண்டே பிரதிகாரம்
மலையாளத்தில் 2016 ஆம் ஆண்டு வெளியான படம் மகேஷிண்டே பிரதிகாரம். ஃபஹத் ஃபாசில் இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தார். ஷியாம் புஷ்கரன் இந்தப் படத்திற்கு திரைக்கதை எழுதி திலீஷ் போத்தன் இயக்கினார். மலையாளத்தில் மிகப்பெரிய வெற்றிபெற்ற இப்படம் தமிழில் உதயநிதி ஸ்டாலின் நடிக்க நிமிர் என்று ரீமேக் செய்யப் பட்டது.
கேரளாவின் இடுக்கி மாவட்டம் கோட்டையத்தில் ஒரு சிறிய ஃபோட்டோ ஸ்டுடியோ வைத்திருப்பவர் மகேஷ். மிக எளிமையான சுபாவம் கொண்ட மகேஷ் ஒரு சின்ன சண்டையை விலக்கச் செல்கிறார் . அப்போது ஒருவன் ஊர் முன்னிலையில் மகேஷை அடித்து அவமானப்படுத்துகிறான். மறுபடியும் அதேபோல் ஊர் முன்னால் அந்த நபரை திருப்பி அடிக்காமல் தான் செருப்பு அணிய மாட்டேன் என்று மகேஷ் சபதம் எடுத்துக் கொள்கிறார். அவர் இந்த சபதத்தை நிறைவேற்றினாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை. மலையாளம் மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப் பட்ட இப்படம் தம்பன் புருஷன் என்கிற மனிதரின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப் பட்டது.. இப்படத்தை விட தம்பன் புருஷனின் நிஜ வாழ்க்கை இன்னும் நிறைய சுவாரஸ்யங்களால் நிறைந்தது.
மிருகங்களுடன் பேசுவார்
இப்படத்திற்கு திரைக்கதை எழுதிய ஷியாம் புஷ்கரனின் பக்கத்து வீட்டுக்காரர் தான் தம்பன் புருஷன். ஷியாம் புஷ்கரன் சிறிய வயதாக இருக்கும்போது அவரிடம் தம்பன் தனது சாகசக் கதைகளை எல்லாம் சொல்வாராம். படத்தின் வருவது போல் மிக அடக்கமான சுபாவம் கொண்ட ஒரு மனிதர் இல்லையாம் தம்பன். இன்னும் சொல்லப் போனால் அவர் ஊர் மக்களிடம் மிக பிரபலமான ஒருவராகவே இருந்து வந்திருக்கிறார்.
இரண்டு நபர்களுக்கு இடையிலான மோதலை விளக்கச் சென்ற தம்பன் ஒருவனால் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார். மீண்டும் அந்த நபரை அதே இடத்தில் வைத்து அடிக்காமல் தான் செருப்பு அணியப் போவதில்லை என்று சபதம் எடுத்துள்ளார் தம்பன் , ஆனால் அந்த நபர் வேலைக்காக செளதி சென்றுவிட்டாராம். அவர் மீண்டும் திரும்பி வருவது வரை மூன்று ஆண்டுகள் தனது சபதத்தை அவர் கடைபிடித்துள்ளார். அதே இடத்தில் வைத்து அந்த நபரை அடித்த பின்னரே செருப்பு அணிந்துகொண்டாராம்.
தம்பன் குறித்து அவரது மனைவி நிறைய கதைகளை தெரிவித்துள்ளார். நாய் , ஓணான், மலைப்பாம்பு என எல்லா விலங்குகளின் மீதும் அவர் பிரியம் கொண்டவர் தம்பன். ஒருமுறை ஊருக்குள் ஒரு பெரிய மலைப்பாம்பு வர அதை பிடித்து தனது வீட்டிற்கு கொண்டு வந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு அந்த மலைப்பாம்பு 21 முட்டைகள் இட்டதாம். தனது வளர்ப்பு விலங்குகளை ஒருபோது சங்கிலியிலோ அல்லது கூட்டிலோ அவர் அடைத்தது இல்லையாம். அந்த விலங்குகள் சுதந்திரமாக நடமாடித் திரியும் சிலது திரும்பி வரும் சிலது வராது என்று தம்பனின் மனைவி தெரிவித்துள்ளார்.
இதுஎல்லாவற்றுக்கும் மேல் தனக்கு விலங்குகளில் பாஷைத் தெரியும் என்று தம்பன் சொல்லிக்கொள்வாராம். ஒருமுறை ஒரு கோயில் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது அங்கு ஒரு கடையில் வைக்கப் பட்டிருந்த விலங்குகளை மிக ஆர்வமாக பார்த்துள்ளார் தம்பன். அவர்மீது எரிச்சலடைந்த வியாபாரி அவரை திட்டியுள்ளார். தம்பன் அந்த விலங்குகளைப் பார்த்து ஏதோ கையசைத்து சில நோடிகள் பேசிவிட்டு திரும்பி நடக்கத் தொடங்கினார். அந்த விலங்குகள் எல்லாம் அவரை பின்தொடர தொடங்கி விட்டனவாம். அந்த வியாபாரி தம்பனின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்கும்வரை தம்பன் அந்த விலங்குகளை திரும்பி அனுப்பவில்லையாம்.
துரதிஷ்டவசமாக தனது வாழ்க்கையை வைத்து உருவான மகேஷிண்டே பிரதிகாரம் படத்தை அவர் கடைசிவரையில் பார்க்கவில்லை. கட்டுப்பாட்டை இழந்த ஒரு கண்டெயினர் லாரி அவரது வீட்டில் சென்று மோத அந்த விபத்தில் உயிரிழந்தார் தம்பன் புருஷன்.