Thalaivar 169: ரஜினி படத்தை இயக்குவது உறுதி - குழப்பத்துக்கு எண்ட் கார்டு போட்ட நெல்சன் ட்வீட்!
பீஸ்ட் படத்தின் விமர்சனத்தால் ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கை நழுவி போய்விட்டதாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்தின் 169வது படத்தை இயக்குனர் நெல்சன் இயக்குவாரா என்று கேள்விகள் எழுந்த நிலையில், ரஜினிகாந்தின் புதிய படத்தை நெல்சன் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தனது டுவிட்டர் பக்கத்தில் நெல்சன் தலைவர் 169 படத்தை இயக்குவதை தனது பயோ-வில் அப்டேட்டாக செய்து குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த பீஸ்ட் திரைப்படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. இது விஜயின் படம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் இயக்குநர் நெல்சனின் படம் என்ற எதிர்பார்ப்பு மறுபக்கம் அதிகமாகவே இருந்தது. அதற்கு காரணம் அவரின் முந்தைய படங்கள். அதுவும் சமீபத்தில் வெளியான டாக்டர் திரைப்படம் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. டார்க் காமெடி என்ற ஒரு வித்தையை இறக்கி மொத்தமாக ரசிகர்களை கொள்ளையடித்தார் நெல்சன். அதற்கு முந்தைய கோலமாவு கோகிலாவும் வேற லெவல் காமெடிதான். நல்ல திரைக்கதை, கதையோடு பயணிக்கும் காமெடி என கலகலவென முடியும் நெல்சன் படம்.
இதையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு ஒரு பக்கம் நெல்சல் மறுபக்கம் விஜய் என கனவுக்கோட்டை கட்டி வந்தனர் சினிமா ரசிகர்கள். ஆனால் கோட்டையை முதல் ஷோவிலேயே தகர்த்தெறிந்தார் நெல்சன். விஜயின் தீவிர ரசிகர்கள் கூட சத்தமே இல்லாமல் தியேட்டரை விட்டு வெளியே சென்றனர். எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு அதிகமாக இருந்ததோ அதே வேகத்தில் முதல் நாளே சரிந்தது பீஸ்ட். படம் சரியில்லை என்ற குறையோடு மட்டுமல்லாமல் இஸ்லாமிய வெறுப்புகளை கக்கியது இன்னமும் கோபமூட்டியது. அடுத்த நாள் கேஜிஎப் ரிலீஸ் ஆக பீஸ்ட் இன்னமும் அதள பாதாளத்துக்கு சென்றது வேறு கதை. காத்திருந்து இப்படி ஆகிவிட்டதே என விஜய் ரசிகர்கள் ஒரு பக்கம் நொந்துகொண்டிருக்க மறுபக்கம் ரஜினி ரசிகர்களுக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது.
மீம்ஸ்கள் ரஜினியை நோக்கி பாய்ந்தன. வேண்டாம் தலைவா விபரீதம் என பலரும் கருத்து பதிவிட்டனர். ஒரு படத்தின் தோல்வியை வைத்தே அடுத்த படத்தின் வெற்றியை தீர்மானிப்பது சரியல்ல என்றும், தோல்வி கொடுத்த எத்தனையோ இயக்குநர்கள் அடுத்தபடத்தில் ப்ளாக்பஸ்டர் ஹிட் அடித்தும் இருக்கிறார்கள் என நெல்சனுக்கு ஆதரவு குரல்கள் கிளம்பின.
அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகவில்லை என்றாலும் பீஸ்ட் படத்தை ரஜினி பார்த்ததாகவே நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டு சொல்லின. முழு படத்தையும் பார்த்த ரஜினி நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ எதுவுமே சொல்லவில்லை என்றும் அமைதியை மட்டுமே கொடுத்துவிட்டு எழுந்து சென்றுவிட்டதாகவும் கூறப்பட்டது.
நெல்சனுக்கு பீஸ்ட் ஒரு மிகப்பெரிய மைனஸை உண்டாக்கினாலும், ரஜினிகாந்த்தின் அடுத்த படத்தை இயக்க உள்ளது நெல்சன் தன்னுடைய டுவிட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். திரைத்துறையில் எந்த படம் வெற்றி பெறும், தோல்வியடையும் என்பதை ரசிகர்கள் தீர்மானிப்பார்கள் என்பதால் ரஜினிகாந்த் நெல்சன் மீது முழு நம்பிக்கையுடன் அடுத்த படத்தை இயக்க வாய்ப்பு அளித்துள்ளதற்கு ரஜினிகாந்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.