Actress Samantha: எதிர்பார்க்கக்கூடாது.. பகவத் கீதையை குறிப்பிட்டு தயாரிப்பாளருக்கு பதிலடி கொடுத்த சமந்தா..
பிரபல நடிகை சமந்தாவின் கேரியர் முடிந்து விட்டதாக தெலுங்கு சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் சிட்டி பாபு தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல நடிகை சமந்தாவின் கேரியர் முடிந்து விட்டதாக தெலுங்கு சினிமாவின் முக்கிய தயாரிப்பாளர் சிட்டி பாபு தெரிவித்த நிலையில், நடிகை சமந்தா பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உள்ள சமந்தா, தனது காதல் கணவர் நாக சைதன்யாவுடனான மணமுறிவுக்கு பிறகு படங்களில் நடிப்பதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக தனி ஹீரோயின் சப்ஜெட்டுகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கடந்தாண்டு அவர் நடிப்பில் ஹரிஹரிஷ் இயக்கிய யசோதா படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இதனையடுத்து கடந்த ஏப்ரல் 14 ஆம் தேதி குணசேகர் இயக்கிய சாகுந்தலம் படம் வெளியானது. இந்த படத்தில் சமந்தா, தேவ் மோகன், அதிதி பாலன், சச்சின் கெதெக்கர், கௌதமி, மோகன்பாபு,பிரகாஷ்ராஜ், மதுபாலா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபீஸில் பெரும் தோல்வியை தழுவியுள்ளது. காளிதாசர் எழுதிய புராணக் கதையான அபிஞான சாகுந்தலத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் முதல் நாளில் 3.2 கோடி ரூபாயும், இரண்டாம் நாளில் 1.85 கோடிகளும், மூன்றாம் நாளில் 1.65 கோடிகளும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியானது.
சாகுந்தலம் படத்துக்கான ப்ரொமோஷன் பணிகளில் சமந்தா உள்ளிட்ட படக்குழுவினர் கடந்த சில வாரங்களாகவே முழுவீச்சில் ஈடுபட்டிருந்த நிலையில், படத்தின் ரிசல்ட் நெகட்டிவ் ஆக அமைந்ததால் படக்குழுவினர் கவலையில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு, “முன்னணி ஹீரோயினாக நடிகை சமந்தாவின் கேரியர் முடிந்துவிட்டதாகவும், அவர் தனது படத்தை விளம்பரப்படுத்த மலிவான தந்திரங்களைச் செய்கிறார்” எனவும் சாடியுள்ளார்.
இதுதொடர்பாக நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ள சிட்டிபாபு, “விவாகரத்துக்குப் பிறகு சமந்தா புஷ்பா படத்தில் ஊ ஆண்டவா பாடலில் நடித்தார். ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்தை இழந்ததாலேயே தனது வாழ்வாதாரத்திற்காக அவர் அதனை செய்தார். இப்படியே தனக்கு வரும் வாய்ப்புகளை எல்லாம் சமந்தா செய்து வருகிறார். கதாநாயகியாக அவரது கேரியர் முடிந்துவிட்டதால் மீண்டும் ஸ்டார் ஹீரோயினாக சமந்தா வர முடியாது” என தெரிவித்துள்ளார்.
மேலும், யசோதா பட புரமோஷன்களின் போது, சமந்தா கண் கலங்கி பேசி படத்தை வெற்றி பெற முயற்சி செய்தார். அதேபோல் சாகுந்தலம் படத்தில் நடிப்பதற்கு முன்னால், தான் இறப்பதற்கு முன் அந்த கேரக்டரில் நடிக்கத் திட்டமிட்டிருந்ததாகச் சொல்லி அனுதாபத்தைப் பெற முயன்றார். ஆனால் ஒவ்வொரு முறையும் சென்டிமென்ட் வேலை செய்யாது. கேரக்டர் நன்றாக இருந்தால் தான் மக்கள் ரசிப்பார்கள். அவர் செய்பவை அனைத்தும் மலிவான செயல்கள்” என சிட்டிபாபு விமர்சித்துள்ளார்.
இதனிடையே தற்போது சமந்தா வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், பகவத் கீதையின் வரிகளை பகிர்ந்துள்ளார். அதற்கு, “உங்களுக்கு வேலை செய்ய மட்டுமே உரிமை உண்டு. ஆனால் அதன் பலனைப் பெற இல்லை. ஒரு செயலின் பலன்கள் உங்கள் நோக்கமாக இருக்க வேண்டாம், உங்கள் நோக்கம் செயலற்றதாக இருக்க வேண்டாம்” என தெரிவித்துள்ளார். இது சாகுந்தலம் படத்தின் தோல்விக்கும், தயாரிப்பாளர் சிட்டிபாபுவுக்கான பதிலடியாக உள்ளது என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.