Vela Ramamoorthy: ஓவர் வில்லத்தனமா இருக்கு.. எதிர்நீச்சல் சீரியல் பற்றி நடிகர் வேல ராமமூர்த்தி கருத்து!
மாரிமுத்துவுக்கும் எனக்கும் கொம்பன் படத்தில் இருந்து பழக்கம் தொடங்கியது. 7,8 படங்கள் இணைந்து நடித்துள்ளோம். கடைசியாக வீராயி மக்கள் என்ற படத்தில் அண்ணன், தம்பியாக நடித்திருந்தோம்.
மறைந்த இயக்குநர் மாரிமுத்துவுடன் அண்ணன், தம்பியாக தான் பழகினேன் என எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மதயானை கூட்டம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் வேல ராமமூர்த்தி. தொடர்ந்து ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். இதற்கு முன்னாள் இந்த கேரக்டரில் மறைந்த இயக்குநர் மாரிமுத்து நடித்து வந்தார். அவரின் மறைவுக்கு பிறகு வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார்.
இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், மாரிமுத்துவுக்கும் தனக்கும் இடையேயான உறவு பற்றி வெளிப்படையாக பேசினார். அதில், “மாரிமுத்துவுக்கும் எனக்கும் கொம்பன் படத்தில் இருந்து பழக்கம் தொடங்கியது. 7,8 படங்கள் இணைந்து நடித்துள்ளோம். கடைசியாக வீராயி மக்கள் என்ற படத்தில் அண்ணன், தம்பியாக நடித்திருந்தோம். அது ஒரு சின்ன பட்ஜெட் படம் என்பதால் ஒரே ஹோட்டலில் தான் தங்கினோம், ஒரே காரில் தான் ஷூட்டிங் சென்று வந்தோம். 7, 8 நாட்கள் அந்த படத்தில் நடித்தோம். இப்படி நாங்கள் ஒன்றாக இருந்த நிலையில், நான் காரைக்குடியில் ஷூட்டிங்கிற்காக சென்று விட்டேன்.
செப்டம்பர் 8 ஆம் தேதி மாரிமுத்து இறந்து விட்டதாக தகவல் வருகிறது. என்னோட உதவியாளர் போனில் தகவலை காட்டியதும் எனக்கு ஷூட்டிங்கில் நடிக்கவே வரவில்லை. மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. ஒரு நடிகனாக மட்டுமல்லாமல் அற்புதமான கலைஞராக மாரிமுத்து திகழ்ந்தார். என்னை விட 17 வயது கம்மியானவர். அவர் வாழ்ந்திருக்க வேண்டும்.
நான் மாரிமுத்து எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததை ஒரு எபிசோடு கூட பார்த்தது இல்லை. அவர் என்னிடம் பேசும்போதெல்லாம் எதிர்நீச்சல் என சொல்லிக் கொண்டேயிருப்பார். ஷூட்டிங் செல்லும் இடமெல்லாம் கிராமத்து மக்கள் செல்ஃபி எடுத்துக் கொள்வார்கள். குழந்தைகளை எல்லாம் அழைத்து எதிர்நீச்சல் சீரியல் பார்க்குறியா இல்லையா என செல்லமாக அதட்டுவார். நான் மாரிமுத்து பெரிய பில்ட் அப் கொடுக்கிறார் என நினைத்தேன். ஆனால் அந்த அளவுக்கு அந்த சீரியல் பிரபலமாக இருப்பதை பின்னால் தான் உணர்ந்தேன்.
நான் அந்த சீரியலில் முதல் காட்சியில் வேட்டியை தூக்கிக்கொண்டு ஓடி போலீஸ் நெஞ்சில் மிதிப்பது போல காட்சி இருக்கும். ஆனால் மாரிமுத்து வேட்டியை கொஞ்சம் கூட தூக்கி நடிக்க மாட்டாராம். கால் ஒல்லியாக இருப்பதால் காட்ட மாட்டேன் என்பாராம். நான் வந்த பிறகு கதையில் ஓவர் வில்லத்தனம் வைத்துவிட்டார்கள் என நினைக்கிறேன். நான் என் ஸ்டைலில் தான் நடிப்பேன் என சொல்லிவிட்டேன். இந்த சீரியலில் நான் நடிப்பது மிகப்பெரிய சவால் தான்” என வேல ராமமூர்த்தி தெரிவித்துள்ளார்.