பள்ளியில் நடந்த அடிதடி.. மீண்டும் சண்டைக்கு கூப்பிட்ட கனட பிரதமர்.. சாண்ட்லர் நினைவலைகள்
மேத்யூ பெர்ரி மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், அவரை பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது.
பிரண்ட்ஸ் சீரிஸில் சாண்ட்லர் கதாபாத்திரத்தில் நடத்து ரசிகர்களை கவர்ந்த மேத்யூ பெர்ரி உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்களை மட்டும் இன்றி ஹாலிவுட் திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்க மட்டும் இன்றி ஐரோப்பா, ஆசியா என கண்டம் தாண்டி பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ள பிரண்ட்ஸ் சீரிஸின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியவர் மேத்யூ பெர்ரி.
ஆறு கதாபாத்திரங்கள் இருந்தாலும், அதில் தனது நகைச்சுவை உணர்வுகளால் அனைவரையும் கவர்ந்தவர் மேத்யூ பெர்ரி. குறிப்பாக, பிரண்ட்ஸ் தொடரில் ஜோயி ட்ரிபியானி கதாபாத்திரத்துடன் சாண்ட்லர் கதாபாத்திரம் செய்யும் சேட்டைகள், காலம கடந்தும் ரசிக்க வைக்கும் அளவுக்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
ஜஸ்டின் ட்ரூடோவுடன் அதிரடியில் ஈடுபட்ட பெர்ரி:
மேத்யூ பெர்ரி மரணம் அடைந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வரும் நிலையில், அவரை பற்றி பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கிறது. குறிப்பாக, சிறுவயதில் கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மேத்யூ பெர்ரி தாக்கிய சம்பவம் பலரும் அறிந்திராத செய்தி.
இருவரும் தொடக்கப்பள்ளியில் ஒரே வகுப்பில் படித்துள்ளனர். ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை பிரதமராக பதவி வகித்த போது, அவருக்கு ஊடக செயலாலராக பணியாற்றிவர் பெர்ரியின் தாயார் சுசான் மாரிசன். சிறுவயதில் நண்பர் ஒருவருடன் சேர்ந்து ஜஸ்டின் ட்ரூடோவை தாக்கியதாக சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பெர்ரி தெரிவித்திருந்தார்.
"ஐந்தாவது வகுப்பு படிக்கும்போது, நாங்கள் இருவரும் சேர்ந்து அவரை (ஜஸ்டின் ட்ரூடோ) அடித்தோம். அவர் சிறப்பாக விளையாடுவார். ஆனால், நாங்கள் அப்படி இல்லை. எனவே, அவர் மீது பொறாமை. பள்ளியில் நாங்கள் அடிக்கக்கூடிய ஒரே நபர் அவர்தான் என்று நினைக்கிறேன்.
மீண்டும் சண்டைக்கு அழைத்த கனட பிரதமர்:
இதைப் பற்றி நான் பெருமை பேசவில்லை. அது மோசமான சம்பவம். நான் முட்டாள் குழந்தையாக இருந்துள்ளேன். நான் அவரை அடிக்க விரும்பவில்லை. அவர் பிரதமராக இவ்வளவு பெரிய உயரத்துக்குச் சென்றதற்கு நான் முக்கியப் பங்காற்றினேன் என்று நினைக்கிறேன். இதைவிட உயர்ந்து பிரதமராகப் போகிறேன் என்று அவர் அன்று சொன்னார் என்று நினைக்கிறேன்" என நேர்காணலில் பெர்ரி தெரிவித்தார்.
இந்த நேர்காணல் வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளத்தில் கிண்டலாக பதிவிட்ட ஜஸ்டின் ட்ரூடோ, "நான் இது பற்றி யோசித்து கொண்டிருக்கிறேன். உனக்கு ஒன்று தெரியுமா? சாண்ட்லரை அடிக்க யார்தான் விரும்பமாட்டார். மீண்டும் சண்டைக்கு வருகிறாயா?" என குறிப்பிட்டிருந்தார்.
இச்சூழலில், தனது பள்ளி தோழன் பெர்ரிக்கு ட்ரூடோ வெளியிட்ட இரங்கல் பதிவில், "மேத்யூ பெர்ரியின் மறைவு அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பள்ளி காலத்தில் நாங்கள் விளையாடிய விளையாட்டுகளை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன. உலகெங்கிலும் உள்ள மக்கள் அவர் தந்த மகிழ்ச்சியை ஒருபோதும் மறக்கப் போவதில்லை என்பது எனக்குத் தெரியும். சிரிக்க வைத்ததற்கு நன்றி, மேத்யூ. நீ எப்போதும் நேசிக்கப்படுவாய்" என குறிப்பிட்டுள்ளார்.
ALSO READ | Kerala Blast: கேரளாவில் கிறிஸ்தவர்கள் ஜெபக்கூட்டத்தில் டிபன் பாக்ஸ் குண்டுவெடிப்பு.. ஒருவர் உயிரிழப்பு