Kasethan Kadavulada | ரீமேக் ஆகிறது மாபெரும் வெற்றிபெற்ற "காசேதான் கடவுளடா"
1972ம் ஆண்டு தமிழில் மாபெரும் வெற்றி பெற்ற 'காசேதான் கடவுளடா' திரைப்படத்தை மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி ஆகியோரை வைத்து இயக்குனர் ஆர்.கண்ணன் ரீமேக் செய்ய இருக்கிறார்.
“ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை” போன்ற குடும்ப பாங்கான திரைப்படங்களை, தொடந்து தந்து வரும் இயக்குநர் ஆர்.கண்ணன். அவரது திரைப்படங்கள், சமூக கருத்துக்களோடு, அனைத்துவகை ரசிகர்களும், ரசித்து பார்க்கும்படி இருக்கும். இவர் தற்போது தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தை பெற்ற “காசேதான் கடவுளடா” படத்தை ரீமேக் செய்யவுள்ளார். தமிழ் மொழியில் வெளியான க்ளாசிக் திரைப்படமான, “காசேதான் கடவுளடா” படத்தில் தமிழ்த்திரையுலகின் புகழ்பெற்ற மூத்த நடிகர்களான முத்துராமன், தேங்காய் சீனிவாசன், மனோரமா மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருந்தனர்.
தற்போது மீண்டும் உருவாகும் இப்படத்தின் மறு உருவாக்க வடிவத்தில் முத்துராமன் கதாப்பாத்திரத்தில் மிர்ச்சி சிவாவும், தேங்காய் சீனிவாசன் பாத்திரத்தில் யோகிபாபுவும், ஆச்சி மனோரமா பாத்திரத்தில் நடிகை ஊர்வசியும் நடிக்கவுள்ளார்கள். நடிகர் கருணாகரன் உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். படத்தின் நாயகி வேடத்தில் நடிக்க முன்னணி கதாநாயகிகளிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த படம் குறித்து இயக்குநர் ஆர்.கண்ணன் கூறியதாவது, "இந்த கோவிட் பெருந்தொற்று காலம், அனைவரது மனதிலும் பெரும் அழுத்தத்தை தந்திருக்கிறது. திரைப்படங்கள் மட்டுமே அந்த அழுத்தத்தை போக்கும் மருந்தாக இருந்து வருகிறது. ஓ.டி.டி. தளங்களில் சில படங்கள் வெளிவந்து, நல்ல விமர்சனங்களையும் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. ஆனால் அவற்றில் பெரும்பாலானவை க்ரைம், ஹாரர் திரில்லர், மர்ம வகை படங்களாகவே இருக்கின்றன. இதனால் மக்களிடம், வயிறு குலுங்க சிரித்து மகிழும் படங்களுக்கான, ஏக்கம் தொடர்ந்து இருந்து வருகிறது.
தமிழில் வெகுசில படங்களான “காதலிக்க நேரமில்லை", "காசேதான் கடவுளடா” மற்றும் சில ரொமான்ஸ் காமெடி படங்கள் மட்டுமே காலம் கடந்து, எப்போது பார்த்தாலும், வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் அளவிற்கும், மனதிற்கு நிறைவு தரும் படைப்புகளாகவும் இருக்கின்றன. அந்த வகையில் “காசேதான் கடவுளடா” திரைப்படம் எக்காலத்திற்கும் பொருந்தும் ஒரு கச்சிதமான படைப்பு.
எனவே இப்படத்தின் மறு உருவாக்கத்திற்கான முறையான அனுமதியை பெற்று, தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ற வகையில் ரீமேக் செய்யவுள்ளோம். மிர்ச்சி சிவா, யோகிபாபு, ஊர்வசி மேடம், கருணாகரன் போன்ற அற்புத திறமை வாய்ந்த எங்கள் குழுவினர், இப்படத்தை மீண்டும் ஒரு அழகான படைப்பாக மாற்றுவார்கள் என மிக ஆழமாக நம்புகிறேன். “ ஜெயம் கொண்டான், கண்டேன் காதலை” போன்ற குடும்பங்கள் கொண்டாடும் படம்போல இப்படமும் அமையும்" என்றார்.
மேலும், 1972 ல் வெளியாகி வெற்றி பெற்ற “காசேதான் கடவுளடா” படத்தை தற்போதைய மாடர்ன் உலகிற்கு ஏற்றபடி மாற்றுவதில் உள்ள சவால்கள் குறித்து கேட்டபோது, "உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அப்படம் வெளியானபோதே, அப்போதைய காலத்தை தாண்டிய முதிர்ச்சி மிகுந்த படைப்பாகத்தான் இருந்தது. எடுத்துக்காட்டாக அப்படத்தில், ஏ.டி.எம். அறிமுகம் ஆகாத அந்த காலத்தில் ஒரு காட்சியில், பூட்டை திறக்க 4 இலக்கு கடவு எண் தேவைப்படும். இப்படி காலத்தை விஞ்சிய படைப்பாகவே அப்படம் இருந்தது.
ஆதலால் இப்படத்தை இப்போதைய காலகட்டத்திற்கு மாற்றுவதென்பது, அத்தனை கடினமான பணி ஒன்றும் இல்லை. இதிலிருக்கும் மிகப்பெரிய சவால், மிக அற்புதமாக உருவாக்கப்பட்டிருந்த அப்படத்திற்கு, நியாயம் செய்யும் வகையில், தற்போதைய படைப்பை உருவாக்க வேண்டும் என்பது தான். எங்கள் குழுவினர் முன்னிருக்கும் மிகப்பெரிய சவால் அதுதான். அதனால், நாங்கள் மிக ஆவலுடன் அப்பணிகளை மேற்கொள்ள காத்திருக்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பை வரும் ஜூலை 15 அன்று துவங்கி, ஒரே கட்ட படப்பிடிப்பாக 35 நாட்கள் தொடர்ந்து நடத்தவுள்ளோம். படத்தில் பங்குபெறவுள்ள, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்." இவ்வாறு அவர் கூறினார்.
இத்திரைப்படத்தினை இயக்குநர் ஆர்.கண்ணனின் மசாலா பிக்ஸ் நிறுவனம் எம்.கே.ஆர்.பி. புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் அதர்வா முரளி, அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்திருக்கும் “தள்ளிப் போகதே” திரைப்படம் சென்சார் பணிகள் முடிக்கப்பட்டு, வரும் ஆக்ஸ்ட் மாதம், உலகளவில் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இயக்குநர் ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் மற்றொரு படைப்பான “தி கிரேட் இண்டியன் கிச்சன்” திரைப்படம் ராகுல், ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்க, படப்பிடிப்பு பணிகள் முடிக்கப்பட்டு, படத்தின் இறுதி கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
“காசேதான் கடவுளடா” படத்தின் மறு உருவாக்கத்தில் பங்குபெறவுள்ள, மற்ற நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப குழுவினர் குறித்து, தயாரிப்பாளரும், இயக்குநருமாகிய ஆர்.கண்ணன் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது