நவம்பர் மாதம் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகும் 4 படங்கள்
November Month Rerelease : சேரனின் ஆட்டோகிராஃப் முதல் சூர்யாவின் அஞ்சான் வரை நவம்பர் மாதம் 4 தமிழ் திரைப்படங்கள் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கின்றன

இந்த ஆண்டு விஜயின் குஷி , பிரபாஸின் பாகுபலி ஆகிய படங்களி திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகின. அந்த வகையில் நவம்பர் மாதம் 4 தமிழ் படங்கள் திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆகவிருக்கின்றன. அவை எந்த படங்கள் என்று பார்க்கலாம் .
நாயகன்
மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்து 1987 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் நாயகன் . உலகளவில் கிளாசிக் திரைப்படமாக பேசப்படும் காட்ஃபாதன் படத்தின் சாயலில் இப்படத்தை உருவாக்கினார் மணிரத்னம். ஆனால் இந்திய சினிமா ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் மையக் கதையை வடிவமைத்தார். சரண்யா பொன்வண்ணன் , நாசர் , டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் இப்படத்த்ல் நடித்துள்ளார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார். தற்போது 38 ஆண்டுகள் கழித்து நாயகன் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது . நவம்பர் 6 ஆம் தேதி சென்னையில் உள்ள குறிப்பிட்ட திரையரங்குகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.
ஃப்ரண்ட்ஸ்
மறைந்த இயக்குநர் சித்திக் இயக்கத்தில் விஜய் , சூர்யா இணைந்து நடித்து சூப்பர் ஹிட் வெற்றிபெற்ற திரைப்பட ஃப்ரண்ட்ஸ். வடிவேலு , தேவயானி , ராதாரவி , மதன்பாப் , ரமேஷ் கண்ணா சார்லீ உள்ளிட்ட பல்வேறு நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான இப்படம் 24 ஆண்டுகள் கடந்தும் இன்றுவரை மக்களால் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. வடிவேலுவின் சலிக்காத காமெடி காட்சிகள் , இளையராஜாவின் இசையில் அமைந்த பாடல்கள் , சூர்யா விஜய் நட்பு என நட்பைப் பற்றிய ஒரு கிளாசிக் படமாக தமிழ் சினிமாவில் நிலைத்துள்ளது இப்படம். தற்போது வரும் நவம்பர் 21 ஆம் தேதி ஃப்ரண்ட்ஸ் திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அண்மையில் விஜய் நடித்த குஷி திரைப்படம் ரீரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத் தக்கது.
ஆட்டோகிராப்
இயக்குநர் சேரன் தயாரித்து இயக்கி நடித்து 2004 ஆம் ஆண்டு வெளியாகி இளைஞர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை செலுத்திய படம் ஆட்டோகிராப் . சினேகா, கோபிகா , மல்லிகா , கனிகா உள்ளிட்ட நடிகைகள் இப்படத்தில் நடித்திருந்தனர் . ஒரு ஆண் தனது வாழ்க்கையின் வெவ்வேறு பருவங்களில் ஏற்பட்ட காதல் அனுபவங்களை சொல்லும் படம் ஆட்டோகிராப். இளம் தலைமுறையினரிடம் மட்டுமில்லாமல் ஃபேமிலி ஆடியன்ஸிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இந்த படம் 3 தேசிய விருதுகளையும் வென்றது. வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது
அஞ்சான்
லின்குசாமி இயக்கத்தில் சூர்யா சமந்தா நடித்து கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அஞ்சான். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பு பெரியளவில் எதிர்பார்க்கப்பட்டு வெளியான பின் ரசிகர்களால் கடுமாக ட்ரோல் செய்யப்பட்டது அஞ்சான். தற்போது படத்தின் ரீ எடிட் செய்யப்பட்டு மீண்டும் திரையரங்குகளில் நவம்பர் 28 ஆம் தேதி வெளியாகிறது





















