Indian 2: ஆண்டவர் ஆட்டம் ஆரம்பம்! இந்தியன் 2-க்காக டப்பிங் பேசிய கமல்ஹாசன்!
Indian 2: இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள இந்தியன் - 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகள் குறித்த வீடியோவை லைகா புரொடெக்ஷன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்தியன் - 2
தந்தை - மகன் என இரட்டை கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்து ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதன் இரண்டாம் பாகம் கடந்த 2019ம் ஆண்டு முதல் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. இதில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா உட்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். கிராபிக்ஸ் பணிகள் அமெரிக்காவில் நடைபெற்றது.
கடந்த மாதம் ‘சேனாபதி’ கமல் தோற்றத்தில் வெளியான போஸ்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் வெளிவந்து 27 ஆண்டுகளுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, சென்னை, பீகார் வனப்பகுதிகள் ஆகிய இடங்களில் நடைபெற்றது. படக்குழுவினர் தைவானில் படப்பிடிப்பு நடத்திய காட்சிகள் இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வந்தது. இந்தப் படத்தில் கமலுக்கு ஏழு வில்லன்கள் இருப்பார்கள் என தகவல்கள் வெளியானது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் இந்தியன் 2 படம் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. வெளியீட்டுக்கு முன்பே இந்தப் படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் ரூ.220 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
டப்பிங் பணியில் கமல்
லைகா நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோவில் கமல்ஹாசன், இயக்குநர் ஷங்கர் இருவரும் டப்பிங் ஸ்டூடியோவில் இருக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. கமல்ஹாசன் சேனாபதி கதாபாத்திரத்திற்கான டப்பிங் செய்யும் வீடியோ ரசிகர்களை உற்சாகத்தி ஆழ்த்தியுள்ளது. இந்தியன் - 2 திரைப்படம் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கமல்- 233வது படம்
சதுரங்க வேட்டை, தீரன், வலிமை துணிவு உள்ளிட்டப் படங்களைத் தொடர்ந்து எச்.வினோத் உலகநாயகன் கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார். இந்தியன் 2 படத்தை அடுத்து நடிகர் கமல்ஹாசன் எச்.வினோத் இயக்கத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தற்போது இந்தப் படத்தின் படப்பிடிற்கான வேலைகளுக்கான தொடக்க பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்தப் படத்திற்கான நடிகர் கமல்ஹாசன் துப்பாக்கி பயிற்சிகள் மேற்கொள்ளும் வீடியோக்கள் ராஜ்கமல் நிறுவனம் கன்ஸ் & கட்ஸ் என்கிற தலைப்பில் வெளியானது. வீடியோவில் பல ரகமான துப்பாக்கிகளை பயன்படுத்தி கமல்ஹாசன் பயிற்சி எடுத்தினார். விக்ரம் படத்தை போல் இந்தப் படமும் துப்பாக்கி தோட்டா என மிரட்டும் ஆக்ஷன் காட்சிகளால் நிறைந்திருக்கும் ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கமலின் ரசிகர்கள் இதனாலும் குஷியில் உள்ளனர்.
கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘தசாவதாரம் திரைப்படத்தில் 10 வித்தியாசமான கெட்டப்களில் வரும் கமல், கிருஷ்ணவேணி பாட்டி கதாபாத்திரத்தில் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். இந்நிலையில், தற்போது 15 ஆண்டுகளுக்கு பிறகு ‘இந்தியன் 2’ படத்துக்காக அவர் மீண்டும் பெண் வேடமிட்டு நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தின் முக்கியமான காட்சி ஒன்றுக்காக சிறிது நேரமே நீடிக்கும் பெண் தோற்றத்தில் கமல் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. ‘கல்கி 2989 ஏடி’, வினோத்துடன் 'KH 233', மணிரத்னமுடன் 'KH 234' ஆகிய திரைப்படங்கள் என அவரின் பிஸி லிஸ்ட்.