Junior Balaiah: காலையிலேயே துயரம்.. பிரபல நடிகர் ஜூனியர் பாலையா காலமானார்.. ரசிகர்கள் இரங்கல்
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரது மறைவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகனான ஜூனியர் பாலையா 1975 ஆம் ஆண்டு மேல்நாட்டு மருமகள் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். தொடந்து கரக்காட்டகாரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். 70 வயதான அவர் சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்தார். இதனிடையே இன்று அதிகாலை மூச்சுத்திணறல் காரணமாக ஜூனியர் பாலையா உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது மறைவுக்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஜூனியர் பாலையா சினிமா வாழ்க்கை
ஜூனியர் பாலையாவின் இயற்பெயர் ரகு. ஆனால் ரசிகர்களிடத்தில் ஜூனியர் பாலையாவாகவே பிரபலமானார். சிவாஜியுடன் தியாகம் படத்திலும், கமலுடன் வாழ்வே மாயம் படத்திலும் நடித்திருந்தார். இப்படியாக படிப்படியாக சினிமாவில் வளர தொடங்கிய அவர், சின்ன கேரக்டராக இருந்தாலும் தனது நகைச்சுவை திறமையால் சிறப்பாக மாற்றியிருப்பார். ஜூனியர் பாலையாவுக்கு திருப்பு முனையாக அமைந்த படம் என்றால் அது கோபுர வாசலிலே படம் தான். இந்த படத்தில் கார்த்தியின் நண்பர்களில் ஒருவராக நடித்திருப்பார்.
இதன் பின்னர் கரகாட்டக்காரன் அவரின் நடிப்பு தனித்து தெரிந்தது. அடுத்தாக வெளியான சுந்தரகாண்டம் படத்தில் ‘சண்முக மணி’ கேரக்டரில் நடித்து அனைவரிடத்தில் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஜூனியர் பாலையாவின் நகைச்சுவை திறமையை இயக்குநர், நடிகர் பாக்யராஜ் சரியாக பயன்படுத்திக் கொண்டார். அம்மா வந்தாச்சு, ராசுக்குட்டி, வீட்ல விஷேசங்க உள்ளிட்ட படங்களில் சிறந்த கேரக்டர்களை அவருக்கு வழங்கினார். 90ஸ் கிட்ஸ் ரசிகர்களுக்கு நன்கு பிரபலமான ஜூனியர் பாலையா, 2கே கிட்ஸ்களுக்கு சாட்டை படம் மூலம் நன்கு அறிமுகமாகியிருந்தார். தொடந்து அஜித் நடித்த நேர்கொண்ட பார்வையிலும் நல்ல வேடத்தில் நடித்திருந்தார். இப்படி தனக்கு எந்த கேரக்டர் கொடுத்தாலும் அதில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஜூனியர் பாலையாவின் மறைவு தமிழ் திரையுலகினருக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு தான் என ரசிககர்கள் தெரிவித்துள்ளனர்.