Top 5 Cinema News: பீஸ்ட் ஃபீவர்.. ரஹ்மானுக்கு ஆதரவாக சிம்பு.. டாப் 5 சினிமா செய்திகள்!
Top 5 Tamil Cinema News Highlights: இன்றைய தினத்தின் முக்கிய 5 சினிமா செய்திகள் இதுதான்...
பீஸ்ட்..
தமிழகம் முழுவதும் பீஸ்ட் பீவர் தொற்றிக்கொண்டுள்ளது. நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கியுள்ளார். படத்துக்கான முன்பதிவு தீவிரமாக போய்க்கொண்டுள்ளது. பல்வேறு திரையரங்குகளில் முன்பதிவு முடிந்துவிட்ட நிலையில் எப்போது விடியும் பீஸ்ட் திரைப்படத்தை பார்க்கலாம் என என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கிறார். பேனர்கள், தோரணங்கள் என பல திரையரங்குகள் திருவிழாகோலம் பூண்டுள்ளது. இதற்கிடையே, கரூரில் பீஸ்டுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. விநியோகஸ்தர்கள் அதிக விலை கூறுவதால் எங்கள் சங்கத்தின் மூலம் தொகை கொடுத்து திரைப்படத்தை வாங்க முடியவில்லை. ஆகவே, கரூர் மாநகரில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியிட போவதில்லை என கரூர் திரையரங்க உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். அதே நிலையில் கரூர் மாவட்டத்தில் அதிகாரபூர்வமாக இயங்கும் கரூர் சினிமா என்ற ட்விட்டர் பக்கத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ தகவலையும் பதிவிட்டுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் கரூர் மாநகரில் இயக்கப்படவில்லை வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்ற பதிவு இடம்பெற்றுள்ளது.
ஏகே 61..
ஏகே 61 படத்தின் அடுத்த ஒரு தகவலாக நாயகி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. இளம் நாயகி ரகுல் ப்ரீத் சிங் 'ஏகே 61'நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யாவுடன் என் ஜி கேவில் நடித்த ரகுல், இந்தியன் 2, அயலான் ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் அடுத்து அஜித் திரைப்படத்திலும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. வினோத் இயக்கத்தில் வெளியான தீரன் அதிகாரம் திரைப்படத்தில் ரகுல் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக படத்தில் அதிதி ராவ் ஹைதாரி நடிப்பதாகவும் கூறப்பட்டது. அவரும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கலாம் என தெரிகிறது. அதுமட்டுமின்றி, தபு, யோகி பாபு பிரகாஷ் ராஜ் மற்றும் கவின் ஆகியோர் முக்கிய நடிகர்கள் என்றும் கூறப்படுகிறது.
தமிழால் இணைவோம்..
நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் தமிழால் இணைவோம் என ட்வீட் செய்து புதிய ட்ரெண்டிங்கை தொடங்கியுள்ளனர். ரஹ்மான் விவகாரத்தில் அவருக்கு எதிர்ப்புகள் சிலர் தெரிவிக்கும் நிலையில் சினிமாத்துறையில் இருந்து ஆதரவை தொடங்கியுள்ளனர் சிம்புவும், அனிருத்தும். முன்னதாக, தமிழ் தொடர்பான ரஹ்மான் கருத்துக்கு பாஜக நிர்வாகியும் நடிகையுமான காய்தரி ரகுராம் பதில் தெரிவித்தார். அதில், “ஏஆர்.ரஹ்மான் கூறுவதை முழுக்க நான் ஆதரிக்கிறேன். அவர் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் பெருமையாக எல்லா புகழும் இறைவனுக்கே என்று கூறினார். அதேபோல் இனிமேல் இந்தி படங்களில் பாடல் செய்யும் போது அதை தமிழில் செய்ய வேண்டும். அதன்மூலம் இந்தி மக்கள் தமிழ் கற்று கொள்வார்கள். அது தானே இணைப்பின் தொடக்கம். வெறுமென சொல்வதுடன் இருக்க கூடாது. ஊருக்கு மட்டும் உபதேசம் செய்யக்கூடாது. நாமும் அதை செய்ய வேண்டும்.ஜெய் ஹோ என்ற இந்தி பாடலுக்காக அவர் ஆஸ்கார் விருதை வென்றார். அப்போது நான் இந்தப் பாடலை தமிழில் செய்யவில்லை என்பதால் எனக்கு இந்த விருது தேவையில்லை என்று கூறினாரா?” எனத் தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டா சிக்கலில் ஷாலு ஷம்மு..
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்க சிலர் முயற்சி செய்வதாக நடிகை ஷாலு ஷம்மு புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டேடஸ் ஒன்றை வைத்துள்ளார். அதில் ஒருவர் இவருடைய ஒப்பணையாளரின் கணக்கை பயன்படுத்தி கணக்கை முடக்க முயற்சி செய்தது தொடர்பான படங்களை பதிவிட்டுள்ளார்.
மீண்டும் காஷ்மீர் ஃபைல்ஸ்..
வரலாற்றில் மறைக்கப்பட்ட இரண்டு உண்மை சம்பவங்களை மையப்படுத்தி, இரண்டு திரைப்படங்களை தயாரிப்பதற்காக 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' பட தயாரிப்பு நிறுவனமான அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் எனும் நிறுவனமும், ஐ அம் புத்தா புரொடக்சன்ஸ் எனும் தயாரிப்பு நிறுவனமும் ஒன்றிணைகின்றன. தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படம் வெளியான பிறகு இந்தியா முழுவதும் விவாதத்திற்குரிய பேசுபொருளாக மாறியது. உண்மைக்கு புறம்பாக பல காட்சிகள் இருப்பதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்த படைப்புகள் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. வரப்போகும் படைப்புகள் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.