HBD Napoleon : தமிழ் சினிமா டூ ஹாலிவுட் ... எட்டுப்பட்டி ராசாவாக திகழும் நெப்போலியன் பிறந்ததினம் இன்று..!
Napoleon Birthday : திரை துறையிலும் அரசியலிலும் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்த நெப்போலியன் பிறந்தநாள் இன்று.
தமிழ் சினிமாவின் உயர்ந்த மனிதராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன். பாரதிராஜாவின் கண்டுபிடிப்புகளில் ஒருவரனாக நெப்போலியன் 'புது நெல்லு புது நாத்து' திரைப்படம் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து ஏராளமான வெற்றிப்படங்களில் நடித்ததுடன் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். திரைத்துறை மட்டுமின்றி அரசியலிலும் சிறப்பான பங்களிப்பை கொடுத்த மல்டி டெலெண்டெட் பர்சனலிட்டியின் 60வது பிறந்தநாள் இன்று.
சினிமா பிரவேசம் :
திருச்சியில் பிறந்து வளர்ந்த நெப்போலியன் இயற்பெயர் குமரேசன் துரைசாமி. குடும்பத்தின் 5வது பிள்ளையாக பிறந்த இவருக்கு இளம் வயது முதலே நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது தான் அவரை அத்தனை யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்த வழிவகுத்தது. நெப்போலியன் நடிப்பில் எஜமான், ஊர் மரியாதை, சீவலப்பேரி பாண்டி, பங்காளி, எட்டுப்பட்டி ராசா, ஐயா, சுயம்வரம், தசாவதாரம் என எண்ணற்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். எட்டுப்பட்டி ராசா படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகருக்கான தமிழ்நாடு அரசின் சிறப்பு விருதை பெற்றார்.
அரசியலில் கால்தடம் :
திரை துறையில் தனது சாதனைகளை சிறப்பாக செய்து வந்த நெப்போலியன் 2001ஆம் ஆண்டு அரசியல் மீது இருந்த ஈடுபாட்டால் தி.மு.க கட்சியின் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ பதவியை பெற்றார். தொடர்ந்து 2006 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்றார். பின்னர் 2009 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சராக இருந்தார். பின்னர் தி.மு.க கட்சியில் இருந்து 2014 ஆம் ஆண்டு விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.
தற்போது நெப்போலியனை தனது மனைவி மற்றும் இரு மகன்களுடன் அமெரிக்க மாகாணத்தில் உள்ள டெக்ஸாஸ் பகுதியில் வாழ்ந்து வருகிறார். அங்கே ஜீவன் டெக்னலாஜிஸ் என்ற நிறுவனம் மற்றும் ஜீவன் பவுண்டேஷன் என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றையும் நடத்தி வருகிறார். இருப்பினும் தயாரிப்பாளர்களின் தொடர் வற்புறுத்தலின் காரணமாக கிடாரி, முத்தராமலிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். மேலும் சாம் லோகன் கலேகி இயக்கத்தில் சூப்பர் நேச்சுரல் ஹாலிவுட் த்ரில்லர் படத்தில் நடித்து இருந்தார் நடிகர் நெப்போலியன். தமிழ் சினிமாவும், ரசிகர்களும் சரி என்றைக்கு நெப்போலியனை மறக்க மாட்டார்கள் என்பது நிச்சயம். அவருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்..!