HBD H.Vinoth: வினோத கதைக்களங்கள்.. யோசிக்க வைக்கும் வசனங்கள்.. இயக்குநர் எச்.வினோத் பிறந்தநாள் இன்று..!
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் இயக்குநர்களில் ஒருவராக திகழும் எச்.வினோத் இன்று தனது 42 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்
சதுரங்க வேட்டை , தீரன், துணிவு உள்ளிட்டப் படங்களை இயக்கிய இயக்குநர் எச்.வினோத் இன்று தனது 42 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
கமர்ஷியல் படங்களில் சமூக கருத்துக்கள்
எந்த விதமான பெரிய அடையாளமும் இல்லாமல் முதல் படமாக எச்.வினோத் இயக்கிய சதுரங்க வேட்டை படம் பரவலான ரசிகர்களின் ஏற்பைப் பெற்றது. மக்களின் நம்பிக்கை, அவர்களின் பயம், நடுவில் இருக்கும் போட்டி பொறாமை, இவற்றை பயன்படுத்தி மனிதர்கள் ஒருவரை ஒருவர் எப்படி சுரண்டுகிறார்கள் என்பதே சதுரங்க வேட்டை படத்தின் கதை . ஊழல், கொள்ளை பற்றிய படங்கள் என்றாலே நாம் பொதுவாக படங்களில் பார்ப்பது ரூ.500 கோடி, ரூ.1000 கோடி வகையிலான கதை மாதிரிகளை தான். ஆனால் சதுரங்க வேட்டைப் படத்தில் நாம் பார்த்தது ஆயிரம் ரூபாயில் இருந்து லட்சங்கள் வரை நம் அன்றாட வாழ்வில் ஏமாற்றும், நம்மை சுற்றி பல்வேறு வேஷங்கள் போட்டுத் திரியும் திருடர்களை தான். மேலோட்டமாக பார்ப்பதற்கு சுவாரஸ்யமான ஒரு படமாக தெரிந்தாலும் மறைபொருளாய் இன்றளவும் இந்தப் படத்தில் ஒரு சமூக விமர்சனம் இருக்கிறது.
மனிதர்களை மனிதர்கள் சுரண்டுவதே அவரது கதைக்களம்
இதனைத் தொடர்ந்து தீரன், வலிமை, துணிவு (நேர்கொண்ட பார்வை தவிர்த்து) இயக்குநர் வினோத் இயக்கிய மூன்று படங்களும் கொள்ளையடிப்பதை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படங்கள். ஒவ்வொரு நடிகர்களின் ஸ்டார் வேல்யூவிற்கு ஏற்றபடி இந்த கதைகளத்தை பெரிதாக்கிச் செல்கிறார். மற்ற படங்களைப் போல் இந்தப் படங்கள் வெறும் கொள்ளை தொடர்பான திரைப்படங்களாக மட்டுமே இல்லாமல் இவற்றுக்கு பின்னால் ஒரு சமூக விமர்சனத்தையும் சேர்த்தே வைக்கிறார் வினோத்.
உதாரணமாக துணிவு படத்தில் க்ரெடிட் கார்ட் கொடுப்பதன் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களை எப்படி கடன்பட்டவர்களாவே வைக்க நினைக்கிறது என்கிற கருத்துதான் அந்தப் படத்தின் கதை. பேராசைகளால் ஒருவரை ஒருவர் ஏமாற்றக்கூடிய மனிதர்களின் இயல்பால் வினோத் வசீகரிக்கப் படுகிறார் என்று சொல்லலாம். தனது சுயலாபத்திற்காக ஒருவரை ஏமாற்றும் ஒருவன் வேறொரு மனிதனால் ஏமாற்றப்படுகிறான் என்பதை தனது படங்களில் தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறார்.
பலவே பலவீனம்
பஞ்ச் டயலாக் போல் இல்லாமல் அர்த்தம் பொதிந்த வசனங்களை வைப்பதில் அதிக சிரத்தை எடுத்து கொள்கிறார். கமர்ஷியல் சினிமாவில் தனக்கு இருக்கக் கூடிய சாத்தியங்கள் என்ன என்ன என்பதை ஆராய்ந்து தெரிந்துகொள்ளும் முயற்சியில் தற்போது எச்.வினோத் இருக்கிறார் என்று சொல்லலாம். அதற்கான தெளிவும் ஆளுமையும் அவருக்கு இருக்கிறது என்று நாம் அவரது பேட்டிகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் ஒரு நல்ல படைப்பாளுமையின் பலமே அவரது பலவீனமாவதை மிகப்பெரிய ஸ்டார் அஜித் குமாரை வைத்து அவர் இயக்கிய மூன்று படங்களைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம் . அடுத்ததாக உலக நாயகன் கமல்ஹாசனுடன் இணைந்திருக்கும் எச்.வினோத் தன்னுடைய முழு படைப்பாளுமையை வெளிக்காட்டுவார் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம். அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்..!
மேலும் படிக்க: 9 Years of Amara Kaviyam: கண்மூடித்தனமாக காதல்.. ஷாக் கொடுத்த கிளைமேக்ஸ்.. ‘அமர காவியம்’ ரிலீசாகி 9 வருஷமாச்சு..!