Tamannah Bhatia : சூப்பர் ஸ்டார்களுக்கு ரத்தம். எங்களுக்கு தக்காளி சட்னியா? தமன்னா கேட்ட கேள்வி என்ன தெரியுமா?
நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்ததற்காக தன்மீது வைக்கப்படும் விமர்சங்கள் குறித்த தனது காத்திரமான கேள்விகளை முன்வைத்துள்ளார் தமன்னா
அண்மையில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் படத்தில் நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்ததற்காக சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார் நடிகை தமன்னா. இந்நிலையில் இந்த விமர்சனங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார் தமன்னா.
திரைப்படங்களில் முத்தக்காட்சிகளில் அல்லது நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்பது கடந்த 18 ஆண்டுகளாக தமன்னா கடைபிடித்து வரும் கொள்கை . அண்மையில் லஸ்ட் ஸ்டோரீஸ் படத்திற்காக தனது இந்த கொள்கையை உடைத்தார் தமன்னா. மேலும் தன்னுடைய தனிப்பட்ட நம்பிக்கைகள் ஒரு நடிகராக தன்னை பின்னுக்கு இழுக்கக்கூடாது என்பதால்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் கூறியிருந்தார் தமன்னா.
லஸ்ட் ஸ்டோரீஸ்
கடந்த ஜூன் 29 ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் ஆந்தாலஜியில் தனது காதலனான விஜய் வர்மாவுடன் நெருக்கமான காதல் காட்சி ஒன்றில் நடித்திருந்தார் தமன்னா. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டார் தமன்னா. ”இந்த மாதிரியான காட்சிகளில் நடிப்பதற்கு இவருக்கு அப்படி என்ன இக்கட்டான நிலைமை ஏற்பட்டுவிட்டது” என்பதான விமர்சனங்கள் இணையதளத்தில் முன்வைக்கப்பட்டன
கீழ்த்தரமான செயல்களை செய்யும் நடிகர்கள் சூப்பர்ஸ்டார்களாக கொண்டாடப்படுகிறார்கள்
இது குறித்து பேட்டி ஒன்றில் பதிலளித்த தமன்னா. ”ஒரு நடிகையாக நான் என்னுடைய செளகரியத்தை விட்டு வெளியே வந்து ஏதாவது புதிதாக முயற்சி செய்ய முடிவுசெய்தேன். நான் நினைத்திருந்தால் மிக சாதாரணமான கமர்ஷியல் திரைப்படங்களில் நடித்துக்கொண்டு இருந்திருக்கலாம். ஆனால் இத்தனை காலத்திற்குப் பிறகு நான் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் என்னுடைய தொடக்க காலத்திலும் அதே கிளாமரான நடிகையாகத்தான் இருந்தேன். என்னுடையத் தேர்வினால்தான் நான் அப்போது இந்த மாதிரியான காட்சிகளில் நடிக்க வேண்டாம் என்று தேர்வு செய்தேன். இப்போதும் என்னுடைய விருப்பத்தினால்தான் நான் நடித்து வருகிறேன். படங்களில் ஆண் நடிகர்கள் எத்தனையோ கீழ்த்தரமான வன்முறைகளால் நிறைந்த கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். அவர்கள் எல்லாம் சூப்பர்ஸ்டார்களாக கொண்டாடப்படுகிறார்கள் ஆனால் அதுவே ஒரு பெண் ஒரு உடலுறவுக் காட்சியில் நடித்தால் உடனே அவரை வசைபாடுகிறார்கள். ஒரு நடிகை நெருக்கமான காதல் காட்சிகளில் நடித்தார் என்றால், அவர் ஏன் தனிப்பட்ட முறையில் தாக்கப் படுகிறார். 2023 ஆம் ஆண்டிலும் ஒரு பெண் நடிகருக்கு இது நடக்கிறது என்பதை என்னால் நம்பமுடியவில்லை. “ என்று தமன்னா கூறியுள்ளார்.
தமன்னா
தமன்னா நடிப்பில் அண்மையில் இரண்டு இணைய தொடர்கள் வெளியாகி இருக்கின்றன அமேசான் பிரைமில் வெளியான ஜீ கர்தா மற்றும் நெட்ஃப்ளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ். தற்போது சூப்பர்ஸ்டார் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்துள்ளார் தமன்னா.