டிமாண்ட் இல்ல..எகிறிய பட்ஜெட்...ஓடிடி பஞ்சாயத்து...சூர்யாவின் கருப்பு ரிலீஸ் தாமதத்திற்கு இதான் காரணம்
Karuppu Release Date : ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி தொடர்ந்து தள்ளிப்போவதற்கு இதான் காரணம்

ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கருப்பு திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வந்தது. பொங்கலுக்கு வெளியாக இருக்கும் விஜயின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்களில் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படாமல் இருப்பது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கருப்பு படத்தின் ரிலீஸ் 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. உண்மையில் கருப்பு படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்ய தாமதமாவதற்கான காரணங்கள் என்னவென்று பார்க்கலாம்.
எகிறிய பட்ஜெட்
கருப்பு படம் அளவான ஒரு பட்ஜெட்டில் தொடங்கப்பட்டாலும், அடுத்தடுத்த கட்டத்தில் படத்தின் பட்ஜெட் பல மடங்கு அதிகரித்துள்ளதே கருப்பு படத்தின் ரிலீஸ் தேதியில் தாமதம் ஏற்படுவதற்கு முதல் காரணம். ஓடிடி விற்பனையை நம்பியே படத்திற்கு தயாரிப்பு நிறுவனம் ஆடம்பரமாக செலவு செய்துள்ளது. தற்போது கங்குவா படத்திற்கு அடுத்தபடியாக சூர்யா நடிப்பில் பெரிய பட்ஜெட் படமாக கருப்பு உருவாகியுள்ளது.
12 ஆண்டுகள் வெற்றி காணாத சூர்யா
கடந்த 12 ஆண்டுகளில் சூர்யாவுக்கு திரையரங்கில் வெற்றிப்படங்களே அமையவில்லை என்பது மற்றொரு முக்கிய காரணம். கங்குவா , அஞ்சான் தவிர சூர்யா நடித்த மற்ற படங்கள் தயாரிப்பாளர்களுக்கு லாபகரமாகவே அமைந்திருக்கின்றன. மாஸ் தொடங்கி தானா சேர்ந்த கூட்டம் ஆகிய படங்கள் திரையரங்க விற்பனையில் லாபகரமாகவே அமைந்தன. அதேபோல் என்.ஜி.கே , காப்பான் , ரெட்ரோ ஆகிய படங்கள் ஓடிடியில் லாபகரமான தொகைக்கு விற்கப்பட்டன.
டிமாண்ட் இல்லாத கருப்பு
கருப்பு படத்தை முன்னதாக தீபாவளிக்கு வெளியிட பட தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர்ஸ் திட்டமிட்டது. ஆனால் 2025 ஆண்டில் ஓடிடி தளங்கள் ஏற்கனவே பல படங்களை வெளியிட திட்டமிட்டிருந்ததால் கருப்பு படத்தை வாங்க மறுத்துவிட்டன. திரையரங்கம் மற்றும் ஓடிடி இரண்டிலும் கருப்பு படத்திற்கு பெரியளவில் எதிர்பார்ப்பு இல்லை . இதனால் விருப்பமே இல்லையென்றாலும் கருப்பு படத்தின் ரிலீஸை ஒத்திவைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தயாரிப்பு நிறுவனம் சென்றுள்ளது. ஓடிடியில் பெரிய தொகைக்கு படம் விற்பனையானால் மட்டுமே படத்தை சொந்த செலவில் தயாரிப்பு நிறுவனம் நேரடியாக வெளியிட முடியும்
திணறும் தயாரிப்பு நிறுவனம்
கருப்பு படத்தின் தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்ச்சர்ஸ் அடுத்தடுத்து பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகிறது. கார்த்தி நடிக்கும் மார்ஷல் படத்தை தற்போது தயாரித்து வருகிறது. அடுத்தபடியாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 படத்தையும் ரூ 200 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க இருக்கிறது. இந்த படங்களுக்கான நிதியை திரட்ட ஏற்கனவே திணறி வரும் நிலையில் கருப்பு படத்தில் பெரியளவில் ரிஸ்க் எடுத்தால் அது அடுத்தடுத்த படங்களை பாதிக்கும் என்பதால் பொறுமையாக படத்தின் ரிலீஸ் தேதியை முடிவு செய்கிறது.
சம்பளத்தை விட்டுக்கொடுக்காத சூர்யா
சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. இதனை ஈடு செய்ய படத்திற்கு பேசிய தனது சம்பளத்தை விட்டுக்கொடுத்தார் சூர்யா. ஆனால் இந்த முறை சூர்யா தனது சம்பளத்தில் எந்த வித சமரசமும் செய்ய தயாராக இல்லை. அடுத்தபடியாக மலையால இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கும் படத்தை தானே தயாரிக்க இருக்கிறார். மேலும் கைதி 2 படத்திற்கு இன்னும் அவர் டேட்ஸ் கொடுக்கவில்லை. வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க இருக்கும் வாடிவாசல் படத்திற்கு அவர் முன்பே முன்பணம் வாங்கிவிட்டார்.
கரணம் தப்பினால் மரணம்
ஒரு தவறான முடிவு எடுக்கும் பட்சத்தில் கங்குவா படத்தில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நிலைமையே கருப்பு பட தயாரிப்பாளருக்கும் ஏற்படும். இதனால் முடிந்த அளவிற்கு லாபகரமான ஒரு தொகைக்கு படத்தை ஓடிடி நிறுவனத்திடம் விற்பனை செய்த பின்னரே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்





















