”வாழ்ந்து இருக்கீங்க சசி.. சூப்பர் சொன்ன சூப்பர் ஸ்டார்!” நெகிழ்ந்து போன சசிக்குமார்
டூரிஸ்ட் ஃபெமிலி திரைப்படத்தை பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சசிகுமாரை பாராட்டியுள்ளார்

டூரிஸ்ட் ஃபேமிலி
சமீபத்தில் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி டிராமா திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப்படத்தில் சசிகுமார் , சிம்ரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யோகி பாபு , எம்.எஸ் பாஸ்கர் , மிதுன் ஜெய் , பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழகத்தில் குடிபெயரும் ஈழத் தமிழ் குடும்பத்தை மையமாக வைத்து காமெடி டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் கடந்த மே 1 ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.
ஃபிளாக்பஸ்டர்:
இப்படம் வெளியானதில் இருந்து வசூல் மற்றும் விமர்சன ரீதியான நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் வரும் நடிகர்கள் ஒவ்வொருவரும் அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்ததாக பல்வேறு தரப்பட்ட மக்களுக்கு இப்படத்திறு நேர்மறையான விமர்சனத்தை பெற்றது.
நடிகர் சசிகுமாரின் சினிமா கேரியரில் அதிக வசூல் செய்த படமாக இந்த படம் அமைந்துள்ளது. படத்தின் பட்ஜெட்டைவிட படத்தின் வசூல் அதிகமாக இருந்ததாக பாராட்டபட்டது.
சூப்பர் ஸ்டார் ரஜினி பாராட்டு:
இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினி சசிக்குமார் தொலைபேசியில் பாராட்டியுள்ளார், இது குறித்து சசிகுமார் தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அவர் பதிவிட்டுள்ள பதிவில் ‘படம் சூப்பர்’ என யார் சொன்னாலுமே மனம் சொக்கிப் போகும். சூப்பர் ஸ்டாரே படம் சூப்பர் எனச் சொன்னால், சந்தோசத்திற்குச் சொல்லவா வேண்டும். ‘அயோத்தி’, ‘நந்தன்’ படம் பார்த்து பாராட்டிய ரஜினி சார் ஹாட்ரிக் பரவசமாக ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படம் பார்த்து, “சூப்ப்ப்பர் சசிகுமார்…” என அழுத்திச் சொன்னார்.
“தர்மதாஸாகவே வாழ்ந்திருக்கீங்க.. சொல்ல வார்த்தையே இல்ல, அந்தளவுக்கு வாழ்ந்துட்டீங்க. பல சீன்களில் கலங்கடிச்சிட்டீங்க. சமீப காலமா உங்களோட கதைத் தேர்வு வியக்க வைக்குது சசிகுமார்…” என ரஜினி சார் சொல்லச் சொல்ல நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை. படத்தின் ஒவ்வொரு காட்சியையும் மனதில் நிறுத்தி, அத்தனை பேரின் பங்களிப்பையும் வாழ்த்தி ரஜினி சார் சொன்ன ஒவ்வொரு வார்த்தைகளும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படக் குழுவுக்கு கிடைத்த பொக்கிஷ பட்டயம். தட்டிக் கொடுத்து உற்சாகமூட்டும் உங்களின் தங்கமான மனசுக்கு மிக்க நன்றி ரஜினி சார்… என்று சசிகுமார் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.






















