7 Seater SUV: 7 சீட்டர்னா நாங்க தான்.. சட்டையை கிழித்து சண்டை - எர்டிகா Vs ஸ்கார்ப்பியோ, குறுக்கே பொலேரோ
7 Seater SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையில் அசத்திய 7 சீட்டர் கார் மாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

7 Seater SUV: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கடந்த டிசம்பர் மாதம் விற்பனையில் அசத்திய 7 சீட்டர் கார் மாடல்களில் எர்டிகா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.
7 சீட்டர் கார் விற்பனை
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் அண்மைக்காலமாக 7 சீட்டர் கார் மாடல்களுக்கான தேவை மற்றும் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த டிசம்பர் மாதமும் அதற்கு விதிவிலக்கில்லை. மாருதி சுசூகி, மஹிந்திரா மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்கள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதே நேரத்தில் ஒரு சில மாடல்கள் ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. XUV 7XO முதல் பத்து இடங்களுக்குள் முதன்முறையாக நுழைந்துள்ளது. நாட்டிலேயே அதிகம் விற்பனையாகும் 7 சீட்டர் என்ற பெருமையை மாருதி சுசுகி எர்டிகா தக்க வைத்துக் கொண்டது.
எர்டிகாவின் சம்பவம்..
டிசம்பர் 2025 இல் 16,586 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்த MPV ஆண்டுக்கு ஆண்டு ஒப்பிடுகையில் 3 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதன் நிலையான செயல்திறன், நல்ல எரிபொருள் சிக்கனம், குறிப்பிட்ட மாடல் மற்றும் வாகனத் தொகுதிப் பிரிவுகளில் ப்ராண்டின் நம்பகத்தன்மை ஆகியவற்றால் பூர்த்தி செய்யப்பட்ட எர்டிகாவின் வலுவான மதிப்பு ஆகியவை இதற்கு காரணங்களாக கூறப்படுகிறது.

டஃப் கொடுக்கும் மஹிந்த்ரா
மஹிந்திரா அதன் வலுவான மாடல்களுடன் 7 சீட்டர் விற்பனையில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.. ஸ்கார்பியோ N மற்றும் ஸ்கார்பியோ கிளாசிக் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விற்பனை பல ஆண்டுகளாக தொடர்ந்து சுவாரஸ்யமாக இருக்கும் நிலையில், டிசம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது 30 சதவிகிதம் அதிகரித்து 15,885 யூனிட் விற்பனையுடன் ஸ்கார்பியோ இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. மறுபுறம் துறைசார் வல்லுநர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக பொலேரோ மாடலின் ஆண்டுக்கு ஆண்டு விற்பனை 79 சதவிகிதம் அதிகரித்து கடந்த டிசம்பரில் 10,611 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன. டொயோட்டா இன்னோவா வரிசை ஜப்பானிய ப்ராண்ட் விற்பனையில் ஆதிக்கம் செலுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.

விற்பனையில் மிரட்டும் 7 சீட்டர்கள்
| வ.எண் | 7 சீட்டர் கார் மாடல்கள் (YoY) | டிசம்பர் 2025 விற்பனை | டிசம்பர் 2024 விற்பனை |
|---|---|---|---|
| 1 | மாருதி சுசூகி எர்டிகா (3%) | 16,586 | 16,056 |
| 2 | மஹிந்திரா ஸ்கார்பியோ (30%) | 15,885 | 12,195 |
| 3 | மஹிந்திரா பொலேரோ (79%) | 10,611 | 5,921 |
| 4 | டொயோட்டா இன்னோவா (2%) | 9,90 | 9,700 |
| 5 | கியா கேரன்ஸ் (40%) | 3,681 | 2,626 |
| 6 | டொயோட்டா ஃபார்ச்சூனர் (34%) | 2,961 | 2,206 |
| 7 | மாருதி சுசூகி XL6 (10%) | 2,744 | 2,487 |
| 8 | ரெனால்ட் ட்ரைபர் (40%) | 2,324 | 1,659 |
| 9 | டாடா சஃபாரி (4%) | 1,446 | 1,385 |
| 10 | மஹிந்திரா XUV 7X0 (-32%) | 971 | – |
மாருதி சுசூகி எர்டிகா விவரங்கள்
7 சீட்டர் பிரிவில் ஆதிக்கம் செலுத்தும் எர்டிகா மாடலின் விலையானது 8.80 லட்சம் ரூபாயில் தொடங்கி 12.94 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. மொத்தம் 9 வேரியண்ட்களில் இந்த கார் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிபொருள் ஆப்ஷன்களுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் வசதியையும் கொண்டுள்ளது. எரிபொருள் மற்றும் கியர்பாக்ஸ் அடிப்படையில் எர்டிகா 20 முதல் 26 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்குகிறது. கடந்த 2024ம் ஆண்டில் நடத்தப்பட்ட பாதுகாப்பு பரிசோதனையில் எர்டிகா வெறும் ஒரே ஒரு ஸ்டாரை மட்டுமே பெற்றது குறிப்பிடத்தக்கது.






















