HBD Rajinikanth: ஓ மை காட்! ரஜினி பிறந்தநாளில் ட்ரீப்ள் ட்ரீட் - என்னென்ன தெரியுமா?
ரஜினிகாந்தின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அவரது திரைப்படங்களின் அப்டேட் வெளியாக உள்ளது.
இந்திய திரையுலகின் உச்சநட்சத்திரமாக உலா வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாரான இவருக்கு வரும் 12ம் தேதி 74 வயது பிறந்தநாள் ஆகும். அவரது பிறந்தநாளை ரசிகர்கள் ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம் ஆகும்.
தற்போது ரஜினிகாந்த் கூலி படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் நெல்சன் இயக்கத்தில் ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார்.
ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு அவரது பிறந்தநாளில் விருந்தளிக்கும் விதமாக 3 ட்ரீட் காத்திருக்கிறது.
தளபதி ரீ ரிலீஸ்:
ரஜினிகாந்த் திரை வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத, அவரது ரசிகர்களால் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றிப்படம் தளபதி. மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த நடித்த ஒரே படம் தளபதி ஆகும். பஞ்ச் டயலாக், ஸ்டைல் என தனது படங்களில் மாஸ் காட்டி வந்த ரஜினிகாந்த், ஒரு சாதாரண நபராக தனது திரை வாழ்வின் உச்சத்தில் இருந்தபோது நடித்த படம் தளபதி. முற்றிலும் மாறுபட்ட நடிப்பை ரஜினிகாந்த் வழங்கியிருந்த இந்த படத்தில் அவரது நண்பனாக மம்மூட்டி நடித்திருந்தார். இந்த படம் 1991ம் ஆண்டு ரிலீசாகி மாபெரும் வெற்றி பெற்றது. ரஜினியின் இந்த படம் வரும் 12ம் தேதி மீண்டும் ரிலீசாகிறது. ரஜினி ரசிகர்கள் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
கூலி அப்டேட்:
ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கூலி. லோகேஜ் கனகராஜ் இந்த படத்தை இயக்குவதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கூலி படத்தின் டைட்டில் ப்ரமோ வெளியாகி ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. சத்யராஜ், நாகர்ஜூனா, உபேந்திரா ஆகியோருடன் இணைந்து பாலிவுட் பிரபலம் அமீர்கானும் நடிக்க உள்ளார். ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கூலி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது. கூலி படத்தின் பாடலோ அல்லது கூலி படத்தின் முக்கிய அறிவிப்போ வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயிலர் 2 அறிவிப்பு:
ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ஜெயிலர். தொடர்ந்து சரிவைச் சந்தித்து வந்த ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜெயிலர். நெல்சன் இயக்கிய இந்த படம் அந்தாண்டு வெளியான படத்திலே மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படமாக அமைந்தது. இந்த நிலையில், ஜெயிலர் படத்தின் அடுத்த பாகம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியது. நெல்சனும் இதை உறுதிப்படுத்திய நிலையில், ரஜினிகாந்த் பிறந்தநாளில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயிலர் 2ம் பாகத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரஜினிகாந்தின் பிறந்த நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினி பிறந்தநாளில் தளபதி ரீ ரிலீஸ், கூலி அப்டேட், ஜெயில் 2 ப்ரமோ வெளியாக இருப்பது அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது.