(Source: ECI/ABP News/ABP Majha)
Rajinikanth: நீ குழியை பறிச்சு வச்சா.. இவன் மலையில் ஏறி நிப்பான்.. சூப்பர் ஸ்டார் சம்பளம் ரூபாய் 200 கோடி..
ரஜினிக்கு பெரிய ஹிட் படமாக அமைந்தது ஜெயிலர். இப்படத்தின் வெற்றி ரஜினியின் மார்கெட்டை உயர்த்தியதுடன், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தமிழ் சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
Super Star Rajinikanth: தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்றால் அது நான்தான் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்துக் காட்டியுள்ளார் ரஜினிகாந்த். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் என்றால் அது ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர்தான். இவர்களில் முதலில் ரூ.100 கோடி சம்பளம் பெற்றவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். இவருக்குப் பின்னர்தான் கமல், விஜய் மற்றும் அஜித் ஆகியோர் 100 கோடி ரூபாய் சம்பளம் பெற்றனர்.
ஜெயிலர் படத்திற்கு முன்னர் ரஜினியின் ஒரு சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதனால் படத்தின் வசூலும் சுமாராக இருந்ததால், அதன் பின்னர் ரஜினி கமிட் ஆன படங்களில் சம்பளம் குறைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இந்த காலகட்டத்தில் கமல் விக்ரம் படத்திற்கு ரூபாய் 150 கோடி சம்பளம் பெற்றதாக செய்திகள் கோலிவுட் வட்டாரத்தை ஆக்கிரமித்தது. அதேபோல் விஜய்தான் தற்போது நடித்து முடித்துள்ள லியோ படத்திற்கும் அடுத்து நடிக்கவுள்ள வெங்கட் பிரபு படத்திலும் ரூபாய் 125 கோடி சம்பளம் என கூறப்படுகிறது.
இதனால் விஜய் மற்றும் கமல் ரசிகர்கள் ரஜினியை சமூக வலைதளங்கள் தொடங்கி போஸ்டர்கள் வரை வன்மங்களைக் கொட்டிக்கொண்டு இருந்தனர். இந்நிலையில் ரஜினிக்கு பெரிய ஹிட் படமாக அமைந்தது ஜெயிலர். இப்படத்தின் வெற்றி ரஜினியின் மார்க்கெட்டை உயர்த்தியதுடன், ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் தமிழ் சினிமா பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. அதிலும், நடிகர் ரஜினிகாந்துக்கு உயர் ரக சொகுசு காரான BMW X7 காரை கலாநிதி மாறன் வழங்கிய நிலையில், இயக்குநர் நெல்சனுக்கு உயர் ரக போர்ஷே காரை வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார்.
ரஜினிகாந்தை நேரில் சந்தித்து கலாநிதி மாறன் காசோலை பரிசாக வழங்கிய நிலையில், அதைத்தொடர்ந்து ரஜினிக்கு பல மாடல் கார்களை கலாநிதி மாறன் காண்பித்ததாகவும், அவற்றில் BMW X7 காரை ரஜினி தேர்ந்தெடுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கார் ரூ.1.26 கோடிகள் மதிப்புள்ளது எனக் கூறப்படுகிறது. ஜெயிலர் திரைப்படம் இதுவரை ரூ.525 கோடிகளை வசூலித்துள்ளதாக சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் வெளியான நிலையில், 21 நாள்களைக் கடந்து இப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
தற்போது 600 கோடிகள் வசூலை ஜெயிலர் திரைப்படம் நெருங்கிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. படம் தொடங்கப்பட்டபோது ரஜினிக்கு ரூபாய் 100 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும், தற்போது லாபத்தில் இருந்து ரூபாய் 100 கோடி கலாநிதி மாறன் வழங்கியுள்ளதால் ரஜினியின் சம்பளம் ரூபாய் 200 கோடியாக உயர்ந்துள்ளது.