Suhasini : சப்பாத்தி குருமா, பருப்பு உசிலியா? பொம்பளைக்கு தயிர் சாதம் போதும்... சுஹாசினி சொன்ன ஷாக் சம்பவம்
சார் இருக்கும்போது சமைத்தால் போதும். நாம பொம்பளைங்க தானே, தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு தூங்கலாம் - சுஹாசினியின் அனுபவம்
80களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை சுஹாசினி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். பழம்பெரும் நடிகர் சாருஹாசன் மூத்த மகளான இவர் 1988ம் ஆண்டு தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான மணிரத்னத்தை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளர் பெயர் நந்தன்.
ஒரு நடிகையாக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். ஒரு சில திரைப்படங்களில் துணை ஒளிப்பதிவாளராகவும் இருந்துள்ளார் சுஹாசினி. தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர நடிகையாக நடித்து வருகிறார்.
ஒரு முறை நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் பேசிய சுஹாசினி தனது இல்லத்தில் நடந்த ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு குறித்து பகிர்ந்தார். ஸ்வாரஸ்யமான தகவலாக இருந்தாலும் அதற்கு பின்னால் இருக்கும் அடக்குமுறையை பற்றி விவரித்தார். "மணிரத்தினதோடு திருமணம் முடிந்த பிறகு ஒரு அழகான கூட்டு குடும்பத்தில் வாழ்ந்து வந்தோம். மணிரத்தின் அண்ணன் தனியாக செல்ல நான் எனது கணவர் மற்றும் மகனும் அங்கு வசித்து வருகிறோம். எங்கள் வீட்டில் சமையல் செய்வதற்காக வயதான அம்மா ஒருவர் எங்களுடன் இருக்கிறார். நானும் அந்த அம்மாவும் சேர்ந்து சமைப்போம். ஒரு நாள் நான் சமையல் அம்மாவிடம் வாங்க நாம டேஸ்டியா ஏதாவது சமைக்கலாம். சப்பாத்தி குருமா, பருப்பு உசிலி இப்படி ஏதாவது செய்து சாப்பிடலாம். நான் உங்களுக்கு உதவியாக இருக்கிறேன் என்றேன். உடனே அவங்க அதெல்லாம் வேண்டாம் மா என்றார்.
வேண்டாமா அப்போ என்ன சாப்பிடுவது என்றேன். தயிர் சாதம் சாப்பிட்டு விட்டு தூங்கலாம் என்றார். ஏன் என்று கேட்டதற்கு சார் தான் ஊர்ல இல்லையே அப்புறம் எதற்காக சமைக்க வேண்டும். சார் ஊர்ல இல்லையா? அப்போ நாம சாப்பிட வேண்டாமா? என்றேன். அதற்கு சமையல் அம்மா, சார் இருக்கும் போது சமைத்தால் போதும். நாம பொம்பளைங்க தானே, தயிர் சாதம் போதும் என்றார். என்னுடைய ஆசையை ஒரே நிமிடத்தில் அடித்து போட்டு விட்டார். நீ பொம்பள தானே உனக்கு எதற்கு வாய்க்கு ருசியா சாப்பாடு?” என்ற டோன் வரும்போது அதிர்ந்து போனேன் என்றார்.