Kuruvi Movie: விஜய் காட்சியில் லாஜிக் இல்லையா? - குருவி படத்தின் இன்டர்வெல் சீனில் நடந்தது என்ன?
வித்யாசாகர் இசையமைத்த குருவி படம் பக்கா ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் பல காட்சிகள் லாஜிக்கே இல்லாமல் எடுக்கப்பட்டதாக தற்போது வரை கிண்டல் செய்யப்பட்டு வருகிறது.
விஜய் நடித்த குருவி படத்தில் சிஜி-யில் செய்யப்பட்ட தவறால் அப்படம் கடுமையாக விமர்சிக்கப்பட்டதாக ஸ்டண்ட் மாஸ்டர் ராக்கி ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள விஜய் கடந்த 2008 ஆம் ஆண்டு “குருவி” என்ற படத்தில் நடித்தார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் இப்படத்தின் மூலமாக தான் படத்தயாரிப்பில் களம் கண்டது. கில்லி படத்துக்கு பின் தரணி விஜய்யை வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார். குருவி படத்தில் திரிஷா, சரண்யா, மணிவண்ணன், சுமன், பவன், நிவேதா தாமஸ், இளவரசு, ஆசிஷ் வித்யார்த்தி, விவேக் என பலரும் நடித்திருந்தனர்.
வித்யாசாகர் இசையமைத்த குருவி படம் பக்கா ஆக்ஷன் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் பல காட்சிகள் லாஜிக்கே இல்லாமல் எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தற்போது வரை கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக விஜய்யின் அறிமுக காட்சி அவர் குடிநீருக்கான தொட்டியில் இருந்து வெளியே வருவார். ஆனால் அவர் கொஞ்சம் கூட நனைந்திருக்க மாட்டார்.
இதேபோல் படத்தின் இடைவேளை காட்சிக்கு முன்னதாக பில்டிங் ஒன்றின் மீது இருந்து ஓடிக்கொண்டிருக்கும் மின்சார ரயிலுக்குள் விஜய் தாவி செல்வது போல காட்சி இருக்கும். கொஞ்சம் கூட இந்த காட்சியில் லாஜிக் இல்லை என கடுமையாக விமர்சித்தார்கள். விஜய் ரசிகர்கள் கூட இத்தகைய காட்சிகளை கொஞ்சம் கூட ஏற்கவில்லை. இதனிடையே குருவி படம் வெளியாகி 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அப்படத்தில் சண்டை பயிற்சியாளர் ராக்கி ராஜேஷ் இடைவேளை காட்சியில் நடந்த தவறு பற்றி பேசியுள்ளார்.
குருவி படத்தில் நாங்க எடுத்த நினைத்தது வேறு. முதலில் ரயில்வே ஸ்டேஷன், அந்த பில்டிங் இடையேயான கேமரா ஆங்கிள்களை எல்லாம் எடுத்து விட்டோம். இதனைத் தொடர்ந்து ஸ்டூடியோவில் செட் போட்டோம். அதில் கிரீன்மேட் போட்டு விஜய் சார் குதிச்சு போகிற மாதிரி காட்சிகளை எடுத்தோம். ஆனால் சிஜி துறையில் அந்த காட்சிகளை கொஞ்சம் நீளமாக்கி விட்டார்கள். நாங்கள் பில்டிங்கிற்கும், ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே 10 அடி தான் இருக்க வேண்டும். அதற்கு மேல் சென்றால் லாஜிக் இல்லாமல் போய் விடும் என சொன்னேன். இயக்குநரும் அதைத்தான் சொன்னார். ஆனால் சிஜி துறையில் பணியாற்றியவர்கள் எப்படி புரிந்து கொண்டார்கள் என தெரியவில்லை. அந்த காட்சிகளை சரியாக இணைக்க முடியவில்லையா அல்லது என்ன பிரச்சினை என தெரியவில்லை. அதனால் அதை அப்படியே ஒரிஜினலாக வைத்து விட்டார்கள். சரி விடுங்க மாஸ்டர் படத்தில் இது ஒன்று தான் மைனஸ் ஆக இருக்கும் என அப்பவே இயக்குநர் தரணி சொன்னார்.