K.E. Gnanavelraja : சூர்யாவிடம் உண்மையை மறைத்துவிட்டோம்! ராஜமௌலிக்குத்தான் அனைத்து பெருமையும்... உண்மையை உடைத்த ஞானவேல்
எஸ்.எஸ். ராஜமௌலியின் தயாரிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் தான் தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு லட்சிய திட்டங்களை தயாரிப்பதற்கான வழியை காட்டியது - ஞானவேல் ராஜா புகழாரம்
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தற்போது நடிகர் சூர்யாவை வைத்து தயாரித்து வரும் திரைப்படம் 'சூர்யா 42'. தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ள இப்படம் மாபெரும் பட்ஜெட்டில் உருவாக உள்ளது என்பதை சமீபத்தில் அவர் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
எஸ்.எஸ். ராஜமௌலியின் தயாரிப்பில் வெளியான பாகுபலி திரைப்படம் தான் எனக்கு இந்த யோசனையை கொடுத்தது. தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு லட்சிய திட்டங்களை தயாரிப்பதற்கான வழியை அவர் தான் காட்டியுள்ளார் என எஸ்.எஸ். ராஜமௌலியை பெருமைப்படுத்தினார்.
மூன்று மடங்கு பட்ஜெட்டில் சூர்யா 42 :
தற்காலிகமாக சூர்யா 42 என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை சிறுத்தை சிவா இயக்க அதில் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள் நடிகர் சூர்யா மற்றும் திஷா பதானி. 200 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகும் இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இப்படத்தின் உண்மையான பட்ஜெட் என்ன என்பது படத்தின் நடிகர் சூர்யாவிற்கே தெரியாது என்றும் அதை அவரிடம் மறைத்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார் ஞானவேல் ராஜா.
இயக்குநர் சிறுத்தை சிவா சூர்யா 42 படத்தின் மோஷன் போஸ்டரை பார்த்த பிறகு நான் ஒரு சாதாரண திரைப்படத்தை தயாரிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன். இதுவரையில் சூர்யா தயாரித்த படங்களின் பட்ஜெட்டை விட மூன்று மடங்கு அதிக பட்ஜெட்டில் இது உருவாகியுள்ளது.
இது அவருக்கு தெரிந்தால் அவர் அதிர்ச்சியடைவார். தயாரிப்பாளருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ரிஸ்க் எடுக்க தயங்குவர் சூர்யா. அதிலும் அது ஞானவேல் என்றால் கூடுதல் கவனமாக இருப்பார். நாங்கள் விஷுவலாக ஏதாவது செய்ய விரும்புகிறோம் என்பதை புரிந்துகொண்டாலும் உண்மையான பட்ஜெட்டை அவரது குழு அவரிடம் இருந்து மறைத்துவிட்டது.
எஸ்.எஸ். ராஜமௌலிக்குத்தான் பெருமை சேரும் :
புஷ்பா, சூர்யா 42 அல்லது வேறு ஏதாவது தென்னிந்திய திரைப்படம், பாலிவுட் திரையுலகில் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தினால் அந்த பெருமை அனைத்தும் ராஜமௌலி சாரையே சேரும். அவர் பாகுபலி திரைப்படத்தை அப்படி பிரமாண்டமாக எடுக்காமல் இருந்திருந்தால் மும்பையில் நாம் ஒன்றுமே செய்ய முடியாது. எனவே சூர்யா 42 படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்க முக்கியமான காரணம் எஸ்.எஸ். ராஜமௌலி. அவர் ஜன்னலை திறக்கவில்லை என்றால் எங்களால் இதை செய்ய முடியாது" என்றார்.
சூர்யா 42 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடப்படும் என்றும் படத்தின் டீசர், மே மாதம் வெளியாகும் என்பதையும் தெரிவித்தார் ஞானவேல்.