Kakkan Movie: 'கக்கன்' படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்க வேண்டும் - கக்கன் பேத்தியும் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி பேட்டி
தாத்தாவின் படம் காமராஜர் ஐயா காட்சிகள் மற்றும் ஆங்கிலேயர்களை எதிர்க்கும் காட்சிகள் திரைப்படத்தில் நெஞ்சை தொடும் வகையில் அமைந்தது.
சுதந்திரப் போராட்ட வீரரும், தமிழகத்தில் முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த பொழுது அமைச்சராக பதவி வகித்த கக்கன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் நேற்று தமிழகம் முழுவதும் வெளியானது. இந்த நிலையில் சேலம் மாநகர் ஐந்து ரோடு பகுதியில் உள்ள தனியார் மாலில் கக்கன் திரைப்படத்தை காண கக்கன் பேத்தியும், சேலம் சரக காவல்துறை டிஐஜிமான ராஜேஸ்வரி மற்றும் டிஐஜி அலுவலகத்தில் பணியாற்றும் காவல்துறையினருடன் திரைப்படம் பார்த்தனர்.
திரைப்படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த கக்கன் பேத்தி டிஐஜி ராஜேஸ்வரி, “கக்கன் திரைப்படம் எனது தாத்தாவின் படம் அவருடைய உண்மையான வாழ்க்கை வரலாறு அப்படியே உருவாக்கப்பட்டுள்ளது. ரொம்ப நன்றாக உள்ளது. பாடல்கள் அருமையாக உள்ளது அவருடைய வாழ்க்கை முழுவதும் கொண்டு நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை திரைப்படமாக கொண்டு வந்துள்ளனர். படம் ஆரம்பம் முதல் முடிவு வரை மிகவும் நன்றாக உள்ளது. முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களுடன் தாத்தா உள்ள காலங்களை உருவாக்கி உள்ளார்கள்.
படத்தின் முடிவில் அவர் உயிரிழக்கும் காட்சி மிகவும் மனதை தொடும் வகையில் இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அணைகள் கட்டப்படுகின்ற பொழுது கக்கன் ஐயா குரல் கொடுத்த காட்சியும் நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் இருந்தது. இந்த திரைப்படத்தை பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் பார்க்க வேண்டும். படத்தை பார்த்தால் அரசியல் குறித்தும், அவரைப் பற்றி இன்றைய தலைமுறைக்கு அறிந்து கொள்வதற்கு இந்த திரைப்படத்தை பார்த்தால் அரசியல் குறித்து அவர்களுக்கு தெரியும். படத்தின் முன்னோட்ட காட்சிகள் வெளியிடும் பொழுது தான் தமிழக முதல்வரை பார்த்தேன் அதன் பிறகு பார்க்கவில்லை” என்று கூறினார்.