12 years of Naan Ee : ஈ விஸ்வரூபம் எடுத்தா என்ன நடக்கும் தெரியுமா? எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' வெளியான நாள் இன்று
12 years of Naan Ee : ஒரு மனிதன் ஈயாக மறுபிறவி எடுத்து தன்னுடைய எதிரியை பழிவாங்கும் முயற்சியை அசாதாரணமாக சாத்தியமாகிய எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' வெளியான நாள் இன்று .
நம்பமுடியாத கதையை கூட சொல்வது போல சொன்னால் அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைக்கலாம். அது தான் சினிமாவின் பலம். அப்படி சாத்தியமில்லாத ஒரு திரைக்கதையை வெள்ளித்திரையில் காட்சிப்படுத்தி அதை மக்களை நம்பும்படியாகவும் செய்து காட்டி இருந்தார் எஸ்.எஸ். ராஜமௌலி.
2012ம் ஆண்டு இதே நாளில் வெளியான 'நான் ஈ' படம் மூலம் ஒரு ஈ தன்னுடைய மரணத்திற்கு காரணமாக இருந்த மனிதனை விரட்டியடித்து பழிவாங்குகிறது என்ற கதையை மாயாஜால டெக்னிக் எல்லாம் பயன்படுத்தி நிகழ்த்திக் காட்டி இருந்தார். இப்படம் வெளியாகி இன்றுடன் 12 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
நானி, சமந்தா, தேவதர்ஷினி, சுதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த 'நான் ஈ' படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும் வணிக ரீதியாக மாபெரும் வெற்றியையும் பெற்றது. தமிழ் ரசிகர்கள் மத்தியில் எஸ்.எஸ். ராஜமௌலி பிரபலமாக காரணமாக அமைந்த படமும் இது தான்.
சமந்தா மீது ஈர்க்கப்பட்ட பணக்காரன் சுதீப் அவளையே சுற்றி சுற்றி வரும் காதலன் நானியை கொன்று விடுகிறான். இறந்துபோன காதலன் ஈ ரூபத்தில் மறுபிறவி எடுத்து காதலி சமந்தாவுக்கு அடையாளம் காட்டி அவளின் உதவியுடன் சுதீப்பை பழிவாங்கும். இது தான் படத்தின் ஒட்டுமொத்த திரைக்கதை. அதை எவ்வளவு ஸ்வாரஸ்யமான பார்வையாளர்களின் கவனத்தை திசை திருப்பாமல் ஈர்க்க முடியுமோ அத்தனை விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் கதையை நகர்த்தி இருந்தார். ஈ கொலைகாரனை பழிவாங்க எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் படு மாஸாக நம்பகத்தன்மையுடன் அமைக்கப்பட்டு இருந்தது.
கிராஃபிக்ஸ் பயன்பாடு அதிகமாகவே இருந்தாலும் அவை எந்த இடத்திலும் மிகைப்படுத்தி காட்டப்படாமல் தொழில்நுட்பத்தோடு ஒன்றிணைந்து அமைக்கப்பட்டு இருந்தது.
ஹீரோ, வில்லன் என அனைவருமே தெலுங்கு நடிகர்களாக இருந்தாலும் தமிழ் ரசிகர்கள் படத்தை கொண்டாடி தீர்த்தனர். இதன் மூலம் ஒரு படத்தின் வெற்றிக்கு திரைக்கதை தான் என்றுமே ஹீரோ என்பதையும் மறுபடியும் நிரூபித்து காட்டிய ஒரு திரைப்படம் நான் ஈ. அதே போல அழகு பெட்டகமாக இருந்த நடிகை சமந்தாவின் ஆரம்ப காலகட்டத்தில் வெளியான இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் அவரின் அடையாளத்தை ஆழமாக பதிக்க உறுதுணையாய் இருந்தது.
இது சாத்தியமில்லாத கதை என தெரிந்தும் ரசிகர்களை முழுக்க மூழ்க உற்சாகப்படுத்திய இந்த நான் ஈ திரைப்படம் எத்தனை ஆண்டுகளை கடந்தாலும் பசுமையான நினைவலைகளை கண் முன்னே கொண்டு வரும். எஸ்.எஸ். ராஜமௌலியின் 'நான் ஈ' படம் தான் அவரின் பிரமாண்டமான 'பாகுபலி' திரைப்படம் உருவாக அடித்தளமாக அமைந்தது.