Squid Game:எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்படும் முதல் வேற்றுமொழி தொடர்... கலக்கும் ஸ்குவிட் கேம்!
Squid Game: ஊரடங்கு காலத்தில் நெட்ஃப்ளிக்ஸில் கடந்த ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்து பேசுபொருளான ஸ்குவிட் கேம் தொடர் எம்மி விருதுகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான எம்மி விருதுகளில், ஆங்கிலம் அல்லாத முதல் வேற்று மொழி தொடராக ’ஸ்குவிட் கேம்’ (Squid Game) தொடர் பரிந்துரைக்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.
75ஆவது எம்மி விருது விழா
திரைப்படங்களுக்கு ஆஸ்கார் போல், தொலைக்காட்சித் தொடர்களுக்கு வழங்கப்படும் உலகின் உயரிய விருது எம்மி. இதன் 75ஆவது எம்மி விருதுகள் வழங்கும் விழா விரைவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், முன்னதாக இந்நிகழ்ச்சியில் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள தொடர்களின் பட்டியல் வெளியானது.
பொதுவாக சிறந்த கதையம்சத்துடன் ,நேர்த்தியாகவும், திரைப்படங்களுக்கு இணையான முக்கியத்துவத்துடன் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி உலக ரசிகர்களைக் கவர்ந்து வரும் ஆங்கிலத் தொடர்களே பரிந்துரைக்கப்படுவது வழக்கம்.
13 பிரிவுகளில் பரிந்துரை
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் நெட்ஃப்ளிக்ஸில் கடந்த ஆண்டு வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்து பேசுபொருளான ஸ்குவிட் கேம் தொடர் எம்மி விருதுகளுக்கு தற்போது பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சிறந்த டிராமாவுக்கான பிரிவு உள்பட மொத்தம் 13 பிரிவுகளில் ஸ்குவிட் கேம் தொடர் பரிந்துரைக்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் தள்ளியுள்ளது.
முன்னதாக இதேபோல் ஸ்குவிட் கேம் தொடரில் நடித்து பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்த 77 வயது நடிகர் ஓ யாங் ஷூ கோல்டன் க்ளோப் விருதைப் பெற்று அசத்தினார்.
பட்டி தொட்டியெல்லாம் ஹிட்
கடுமையான பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் 456 பேர், 45.6 பில்லியன் பரிசுத் தொகையை வெல்ல விளையாடும் ஒரு வித்தியாசமான விளையாட்டைச் சுற்றி ஸ்குவிட் கேமின் திரைக்கதை நகர்கிறது.
பலராலும் நிராகரிக்கப்பட்ட பிறகே ஸ்குவிட் கேம் இறுதியாக வெப் சீரிசாக நெட்ப்ளிக்ஸ் இணையதளத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
அதீத வன்முறைக் காட்சிகள் இத்தொடரில் இடம்பெற்றிருந்தாலும், அட்டகாசமான கதையாலும், தேர்ந்த நடிகர்கள், அவர்களுக்கான கதாபாத்திரங்கள், திரைக்கதை எனப் பல சிறப்பம்சங்களால் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டது `ஸ்குவிட் கேம்’ தொடர்.
விரைவில் அடுத்த பாகம்
மொத்தம் 9 எபிசோடுகள் கொண்ட இந்தத் தொடர் வெளியான முதல் நான்கு வாரங்களில் 1.65 பில்லியன் பார்வையாளர்களால் கண்டுகளிக்கப்பட்டு பெரும் சாதனை படைத்தது. மேலும் நெட்ஃப்ளிக்ஸ் தளம் இந்தியாவில் பெருவாரியான பார்வையாளர்களைப் பெற்று இந்திய சந்தையில் வலுவாகக் காலூன்ற ஸ்குவிட் கேம் தொடரே அடித்தளமிட்டதாகத் தகவல்கள் முன்னதாக வெளிவந்தன.
முன்னதாக இத்தொடரின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளதை டீசர் மூலம் நெட்ஃப்ளிக்ஸ் தொடர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.