Lee Jihan : கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் லீ ஜிஹான் மரணம்...ரசிகர்கள் அதிர்ச்சி
24 வயதே ஆன லீயின் மரணத்தை அவரின் பணிகளை மேற்கொண்ட 935 என்டர்டெயின்மென்ட் ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது.
தென்கொரியாவில் ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென் கொரியாவின் தலைநகர் சியோலில் கடந்த அக்டோபர் 29 ஆம் தேதி ஹாலோவீன் கொண்டாட்டத்தில் ஈடுபட அங்குள்ள சந்தை ஒன்றில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்ததாக சொல்லப்படுகிறது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக பலர் மயங்கி சரிந்தனர். இந்த எதிர்பாராத சம்பவத்தில் 151 பேர் இறந்த நிலையில் 82 பேர் காயமடைந்தனர். உலக மக்களிடையே இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
விபத்து நடந்த இடத்தில் சுமார் 140 அவசர வாகனங்களில், 300 வீரர்கள் மீட்புப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில் ஜனாதிபதி யூன் சுக்-யோல் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் நிர்வாகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சகம் தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக உதவிகள் வழங்க அனைத்து அமைச்சர்களும் களமிறங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாட்டங்கள் நடைபெறாத நிலையில் இந்தாண்டு நடைபெற்றதில் இப்படி ஒரு சோக சம்பவம் நிகழ்ந்து விட்டது.
View this post on Instagram
இந்நிலையில் இந்த கூட்ட நெரிசலில் சிக்கி தென் கொரிய நடிகரும் பாடகருமான லீ ஜிஹான் உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 24 வயதே ஆன லீயின் மரணத்தை அவரின் பணிகளை மேற்கொண்ட 935 என்டர்டெயின்மென்ட் ஏஜென்சி உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் விலைமதிப்பற்ற குடும்ப உறுப்பினரான நடிகர் லீ ஜிஹான் வானத்தில் ஒரு நட்சத்திரமாக மாறி நம்மை விட்டு வெளியேறினார். அவரின் திடீர் மறைவால் ஆழ்ந்த துயரத்தில் இருக்கும் லீயின் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அனைவரிடமும் இனிமையாக பேசுபவராகவும் , அன்பான நண்பராகவும், எப்பொழுதும் சிரித்துக்கொண்டே நம்மை வாழ்த்திய நடிகரான ஜிஹானை இனி பார்க்க முடியாது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரியப் பாடும் போட்டியான புரொடக்யூஸ் 101 இல் பங்கேற்ற பிறகு அனைவரிடத்திலும் பிரபலமான லீ ஜிஹான் நாம் ஹியூன் டே என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். அவரது மரணம் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.