"5 ஆண்டுகள் தடை! ரோகிணி தலைமையில் குழு" பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் நடிகர் சங்கம் அதிரடி
பாலியல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் வரை திரைத்துறையில் பணியாற்றத் தடை என்று நடிகர் சங்கம் எச்சரித்துள்ளது.
மலையாள திரையுலகில் நடந்த பாலியல் அத்துமீறல்கள் தென்னிந்திய திரையுலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. மலையாள திரையுலகை அதிர வைத்துள்ள இந்த பாலியல் குற்றச்சாட்டில் பிரபல நடிகர்கள் முகேஷ், சித்திக், ஜெயசூர்யா உள்ளிட்ட பிரபலங்கள் சிக்கியிருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
5 ஆண்டுகள் தடை:
இந்த விவகாரம் தொடர்பாக மற்ற திரையுலகினரும் ஹேமா கமிட்டி போல அமைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவில் பாலியல் புகாரில் சிக்கும் நடிகர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டுகள் திரைத்துறையில் பணியாாற்றத் தடை என்று எச்சரித்துள்ளனர். இதை தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பரிந்துரை செய்துள்ளனர். இதைத் தீர்மானமாக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளிக்கவும், சட்ட நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தெரிவித்துள்ளனர். பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக நடிகை ரோகிணி தலைமையில் விசாகா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு எண்கள், மின்னஞ்சல்:
பாதிக்கப்பட்டவர்கள் தங்களது புகார்களை அளிக்க சிறப்பு எண்களும், மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் நேரடியாக ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும் ரோகிணி தலைமையிலான குழு மூலமாக வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் திரைக்கலைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பற்றி அவதூறாக கருத்துக்களைத் தெரிவித்தால் சைபர் கிரைமில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும் நடிகர் சங்கம் துணை நிற்கும் என்றும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். இந்த தீர்மானங்கள் செயற்குழுவிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நடிகர் சங்க செயலாளர் விஷால் இந்த விவகாரத்தில் 5 ஆண்டுகள் வரை தடை விதிக்கப்படும் என்று எச்சரித்திருந்த நிலையில், தற்போது நடிகர் சங்கத்தின் சார்பில் அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் தக்க தண்டனையைப் பெற்றுத்தர வேண்டும் என்று பலரும் வலியுறுத்தியுள்ளனர்.