’கருப்பா...குட்டையா...புருவம் திருத்தாம!’ - கேரள சினிமா க்ளிஷேக்களை உடைக்கும் நிமிஷா சஜயன்!
நிமிஷாவின் சோஷியல் மீடியா பக்கத்தில் ஆண் பதிவர் ஒருவர், ‘ஒரு ஹீரோயினுடைய சிரிப்பு பாத்ததும் அப்படியே அதை கடிக்கனும் சாப்பிடனும் போல இருக்கனும்’ எனப் பதிவிட்டிருந்தார்.
’தி கிரேட் இந்தியன் கிச்சனி’ல் தனது அசால்ட்டான நடிப்பால் அனைவரையும் உலுக்கியெடுத்தவர் நிமிஷா சஜயன். அவரைத்தான் தற்போது பகடி செய்துவருகிறது கேரள ஆன்லைன் ஆண்கள் சமூகத்தின் ஒரு குரூப். மேக்கப் எதுவும் விரும்பாதவர் ’நிமிஷா ஹீரோயின் மெட்டீரியலே இல்லை’ எனத் தொடர்ச்சியாக அவரை ட்ரால் செய்பவர்களில் அண்மையில் ஒருவர் புதுரகமாகப் பகடி செய்துள்ளார்.
’ஹீரோயின் சிரிச்சா அப்படியே அத அள்ளி சாப்பிடற மாதிரி இருக்கனும்’ என அண்மையில் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து முத்து ஒன்றை உதிர்த்துள்ளார் ட்ரால் ஒருவர். இதற்கு பிரபல மலையாள யூட்யூப் பதிவர் காயத்ரி தனது வீடியோவில் பதிலடி கொடுத்துள்ளார்.
நிமிஷாவின் சோஷியல் மீடியா பக்கத்தில் ஆண் பதிவர் ஒருவர், ‘ஒரு ஹீரோயினுடைய சிரிப்பு பாத்ததும் அப்படியே அதை கடிக்கனும் சாப்பிடனும் போல இருக்கனும்’ எனப் பதிவிட்டிருந்தார். இப்படியொரு ஆசை இருப்பவரை நாம் ஏமாற்றலாமா? எனக் கூறி அவர் எதிர்பார்ப்பது போன்ற ஹீரோயின் ஒருவரை தனது யூட்யூப் பக்கத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார் காயத்ரி. ஒரு ப்ளேட் நிறைய சாலட் வைத்து அதனை முகம் வடிவத்தில் டிசைன் செய்து, ‘நீங்கள் கடிக்கத் தகுதியான முகம் இதுதான்’ என உச்சகட்ட பகடி செய்துள்ளார்.
சினிமா ஹீரோயின்களுக்கு என்று இவர்கள் வரையறை செய்யும் சூப்பர் ஸ்லிம் உடல், ஃபேர் லவ்லி மாடல்கள் ரக சருமம் என சட்டத்துக்குள் அடங்காதவர் நிமிஷா. அதனாலேயே அவரை சைட் ரோலுக்குதான் சரிபட்டுவருவார் என தொடர்ச்சியாக பலர் அட்வைஸ் செய்து வருகிறார்கள். ஆனால் சினிமாவில் ஆண்களுக்கு இதுபோன்ற கமெண்ட்கள் வருவதில்லை.. 60 வயதிலும் யூத் கெட்டப் மேக்கப் போட்டுக்கொண்டு 20 வயது மதிக்கத்தக்க பெண்களுடன் நடனமாடும் ’ஹீரோக்களுக்கு’ இன்றும் கட்-அவுட் வைத்து ஆராதிக்கிறது ரசிக சிகாமணிகள் சமூகம்.
’இயக்குநர்கள் இதுபோன்ற ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை தாங்கள் படம் எடுக்கும்போது கவனத்தில் கொள்ளவேண்டும்’ எனக் கலாய்த்துள்ளார் யூட்யூப் பதிவர் காயத்ரி. மலையாள சினிமாவின் முதல் பெண் நடிகர் பி.கே.ரோஸி அவர் தலித் என்பதற்காகவும் பெண் என்பதற்காகவும் பரிகாசம் செய்யப்பட்டவர். பி.கே.ரோஸி தொடங்கி இன்றுவரை சினிமாவில் பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படியாக முன்னேறவில்லை. சினிமாவில் பெண் நடிகர்கள் என்றால் ‘கண்ணுக்குக் குளிர்ச்சியாக’தான் இருக்கவேண்டும் என எதிர்பார்க்கிறது இந்த ஆதிக்கப்புத்தி சமூகம். ஆண்கள் என்றால் நடிக்க வருபவர்கள் பெண்கள் என்றால் உடல்காட்ட வருபவர்கள் என்கிற தகுதி வரையறை சினிமாவில் எப்போது மாறும்?
நடிகை நவ்யாவை எல்லாம் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லையா என பெருந்தன்மை காட்டும் கூட்டமும் சினிமாவில் இருக்கிறது. ஒருவேளைத் தப்பித்தவறி கறுத்த சரும நடிகைகள் சினிமாவில் நுழைந்தால் அவர்களை வில்லன்களாகவும் அல்லது பாவப்பட்டவர்கள் எனக் காண்பிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறார்கள்.
நிறம் எல்லாம் ஒரு பிரச்னையே இல்ல என கெத்தாக மேலே ஏறி வரும் பெண்களை அவர்களது நிறத்தைக் கொண்டே ஒடுக்குவதை இந்த சினிமாத்துறை சிறப்பாகவே செய்துவருகிறது. நிமிஷாவுக்கு எப்போதும் முகம் வியர்த்துக்கொண்டே இருப்பதையெல்லாம் தனக்குப் பெரிய கவலையாகப் பதிவிட்டிருந்தார் பதிவர் ஒருவர். மனுஷங்களுக்கு வியர்வை இயல்புதானேங்க!
கேரளப்பெண்கள் என்றாலே ‘ஓமனப்பெண்ணே’ லெவலுக்கு மட்டுமே மனதில் கற்பனைகட்டி வைத்திருப்பவர்களுக்கு இடையே கேரளாவின் அறியப்படாத முகங்களுக்கு அடையாளமாக இருக்கிறார் இந்த அசால்ட் நடிப்புக்குச் சொந்தக்காரி நிமிஷா. நிமிஷாவை ஒரு குரூப் பரிகாசம் செய்ததாலும், எதார்த்த நடிப்பாலும், அழகாலும் மனதை கொள்ளைக்கொண்டவர் என அவருக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உண்டு என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை.
ஒரு சில குரூப் சோஷியல் மீடியாவில் நிமிஷாவை பகடி செய்வதாக உளறிக்கொண்டு இருந்தாலும், மாலிக், தி கிரேட் இந்தியன் கிச்சன் என இவரது அசுரத்தனமான நடிப்புக்கும் தனது இன்ஸ்டா பக்கங்களில் இவர் வரைந்து பதிவேற்றும் வண்ண ஓவியங்களுக்கும் கோடானு கோடி ரசிகர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.