Ayalaan : கார்த்தி, தனுஷை தொடர்ந்து தீபாவளி ரிலீஸில் களம் காணும் சிவகார்த்திகேயன்.. மகிழ்ச்சியில் “அயலான்” ரசிகர்கள்..!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் பேமிலி ஆடியன்ஸை கவர்ந்த நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு டான், பிரின்ஸ் ஆகிய படங்கள் வெளியானது. இதில் பிரின்ஸ் படம் படுதோல்வியடைந்ததால் தனது அடுத்தப் படங்களான மாவீரன், அயலான் ஆகிய படங்களை ரசிகர்களை கவரும் வண்ணம் கொடுக்க வேண்டும் என்பதில் சிவகார்த்திகேயன் உறுதியாக இருக்கிறார்.
இதில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான நேற்று இன்று நாளை படத்தின் இயக்குநர் ரவிக்குமார் தான் “அயலான்” படத்தை இயக்குகிறார். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் நடித்துள்ள அயலான் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். முன்னதாக படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், முதல் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதற்கிடையில், கதைப்படி வேற்றுக்கிரக வாசிகள் இடம் பெறும் காட்சிகள் இடம் பெறுகிறது. இதற்காக கிராபிக்ஸ் பணிகள் தரமானதாக உருவாக்கி வருவதில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது. மேலும் பணப் பிரச்சினை, கொரோனா ஊரடங்கு ஆகியவை காரணமாக படப்பிடிப்பு தாமதமாகி கொண்டே வருகிறது.
கடந்தாண்டு டிசம்பருக்கு படம் வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில், மீண்டும் பணப்பிரச்சினை ஏற்பட்டு சிவகார்த்திகேயன் தலையிட்டு தீர்த்து வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. சொல்லப்போனால் டாக்டர், டான் படங்களுக்கு முன்பாகவே கமிட் ஆன படம் என்பதால் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் அயலான் படம் இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை #Ayalaan ஹேஸ்டேக் போட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். இந்த படத்துக்கு முன்னதாக மடோனா அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் “மாவீரன்” படம் வெளியாகி விடும் என்பதால் இந்தாண்டு சிவா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்த படத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடிக்கிறார்.
தீபாவளிக்கு மோதும் படங்கள்
2023 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ஏற்கனவே கார்த்தி நடிக்கும் ஜப்பான் படம் வெளியாகும் என கூறப்படுகிறது. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இப்படத்தில் அனு இம்மானுவேல் ஹீரோயினாக நடிக்கிறார். கார்த்தியின் 25வது படமாக இப்படம் உருவாகி வருகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
அதேசமயம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், நடிகை பிரியங்கா மோகன் நடிக்கும் கேப்டன் மில்லர் படமும் வெளியாக வாய்ப்புள்ளது என கூறப்படுவதால் ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Yentamma Song: வேட்டி கட்டிய சல்மான் கான்... கடுமையாக விமர்சித்த கிரிக்கெட் வீரர்.. என்ன நடந்தது?