71 Years of Parasakthi: திராவிடத்தின் போர்வாளாக ஒலித்த வசனங்கள்... 71 ஆண்டுகளை நிறைவு செய்யும் “பராசக்தி” படம்..!
திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த திரைப்படங்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ள “பராசக்தி” படம் வெளியாகி இன்றோடு 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
திராவிட இயக்கத்தை வளர்த்தெடுத்த திரைப்படங்களில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ள “பராசக்தி” படம் வெளியாகி இன்றோடு 71 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.
1950 ஆம் ஆண்டின் தொடக்க காலக்கட்டம் அது. எங்கெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் ஆத்திகத்தின் உள்ளடி வேலைகளை மக்களுக்கு விளக்கி ஆத்திகத்தை தூக்கி பிடித்துக் கொண்டு ஒரு கூட்டம் இருந்தது. அப்படிப்பட்ட இடங்களில் ஒன்றாக தியேட்டர்களும் இருந்தது. அதில் வெளியான படங்களில் ஒன்று தான் தமிழ் திரைப்பட வரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் மிக முக்கியத்துவம் பெற்ற “பராசக்தி”.
1952 ஆம் ஆண்டு அக்டோபர் 17 ஆம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் வசனத்தில் இப்படம் வெளியானது. இதில் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஹீரோவாக அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தை திமுக தொண்டர்கள் கட்சி சார்ந்த திரைப்படமாக பார்க்க தொடங்கி கொண்டாடினர். ‘வாழ்க வாழ்கவே... எங்கள் திராவிட நாடு வாழ்க வாழ்கவே’ என்று வரும் முதல் பாடலே தொண்டர்களின் கீதமாக அமைந்தது.
பராசக்தி படத்தின் மூலக் கதையை எழுதியவர் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த பாவலர் பாலசுந்தரம் எழுதியிருந்தார். இது நாடகமாக தேவி குழுவினரால் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதைப் பார்த்த நேஷனல் பிக்சர்ஸ் நிறுவன தயாரிப்பாளர் பி.ஏ. பெருமாள் முதலியார் படமாக்க விரும்பினார். தொடர்ந்து ஏவிஎம் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை பெருமாள் முதலியார் தயாரித்தார்.
கிருஷ்ணன் - பஞ்சு இயக்குவதாக முடிவு செய்யப்பட்ட நிலையில், வசனம் எழுதும் பொறுப்பு மு.கருணாநிதியிடம் கொடுக்கப்பட்டது. மேலும் எஸ்.எஸ்.ராஜேந்திரன், பண்டரி பாய், வி.கே.ராமசாமி, டி.கே.ராமச்சந்திரன் என பல பிரபலங்களும் இணைந்தனர். இந்த படம் கொஞ்சம் படமாக்கப்பட்ட பிறகு ஏ.வி.மெய்யப்பச்செட்டியார் பார்த்துள்ளார். அவருக்கு சிவாஜி நடிப்பில் திருப்தி ஏற்படவில்லை. வி.கே.ராமசாமியை ஹீரோவாக போடலாம் என சொன்ன அவரது முடிவை அறிஞர் அண்ணா தடுக்க, சிவாஜியே நடிக்க காரணமானார்.
உண்மையில் பராசக்தி படம் ஜெயிக்க முழு முதற்காரணம் கலைஞர் கருணாநிதி. அவரது பட்டை தீட்டப்பட்ட வசனங்கள் ஒவ்வொன்றும் இன்றைக்கும் சினிமாவே கதி என கிடப்பவர்களுக்கு மனப்பாடம். போலி நாத்திகர்களை வெளுத்து வாங்குவது தொடங்கி சமூக அவலங்களை தட்டிக் கேட்பது வரை ஒவ்வொன்றும் மணி மகுடத்தில் பதிக்கப்படும் வைர கற்கள் போல இருந்தது.
அதேபோல் பராசக்தியின் மகிமையே அந்த கிளைமேக்ஸ் காட்சி தான். நீதிமன்றத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் சமூகத்தில் குற்றம் செய்யும் ஒவ்வொருவருக்கும் சவுக்கடி தான். இந்த படத்தை நாம் சாதாரணமாக கடந்து போய் விட முடியாது. நாடகங்களுக்கு, திரைப்படங்களுக்கும் எத்தகைய சக்தி இருக்கிறது என்பதை அரசியல் கட்சிகள் எப்போதும் தெளிவாக அறிந்து கொண்டுள்ளது. அன்றைக்கு திமுக மக்களிடையே தங்களை கொண்டு சேர்க்க பராசக்தி படத்தை பயன்படுத்தியதோ, அப்போது எதிர்கட்சியாக பாவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய சோதனைகளை இப்படத்திற்காக திமுகவிற்கு ஏற்படுத்தியது என்பது வரலாறு.
1952 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இப்படம் பல தலைமுறைகளை கடந்தாலும் இன்றும் மின்னும் வைரமாகவே உள்ளது. சுதர்சனத்தின் இசையில் ஓ ரசிக்கும் சீமானே, கா..கா..கா, புது பெண்ணின் மனதை தொட்டு போன்ற பாடல்கள் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்தது. உண்மையில் யாருமே எதிர்பாராத வெற்றியை மக்கள் பராசக்தி வழங்கியிருந்தார்கள். அது பசுமரத்தாணி போல மக்கள் மனதில் பதிந்து விட்டது என்பதே உண்மை...!