Animal Movie: மிருகங்களுக்காக எடுக்கப்பட்ட மிருகத்தனமான படம்: அனிமல் பட இயக்குநரை விளாசிய பாடகர் ஸ்ரீனிவாஸ்!
ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார் பாடகர் ஸ்ரீநிவாஸ்.

அனிமல்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடித்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான படம் அனிமல். திரையரங்கில் வெளியானது முதல் பல்வேறுகட்ட விமர்சனங்கள் இந்தப் படத்திற்கு எழுந்து வந்தன. ஆணாதிக்கம், பெண் வெறுப்புடைய கருத்துக்கள் அடங்கிய காட்சிகள் இப்படத்தில் நிறைந்து வழிவதாக விமர்சகர்கள் கூறினார்கள்.
இதற்கு பதிலளிக்கும் வகையில், படத்தின் க்ராஃப்ட் எதைப் பற்றியும் பேசாமல் முன்முடிவுகளோடு படத்தை விமர்சிப்பது முட்டாள்தனமானது என்று விமர்சகர்களை இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா கடுமையாகத் திட்டியிருந்தார். விமர்சனங்கள் ஒரு பக்கம் எழுந்தாலும் வெகுஜன ரசிகர்களால் அனிமல் படம் கொண்டாடப்பட்டு படம் 900 கோடிகளை வசூல் செய்தது. அனிமல் படம் சமீபத்தில் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பு மக்களிடம் இருந்து படத்துக்கு விமர்சனங்கள் வலுத்து வருகின்றன.
படத்தை விமர்சித்த பிரபலங்கள்
அனிமல் படத்தைப் பார்த்த ஓளிப்பதிவாளர் சித்தார்த்தா நூனி அனிமல் படம் சமூகத்தில் மனநோயாளிகளையே உருவாக்கும் என்று கூறியிருந்தார். நடிகை ராதிகா சரத்குமார் பார்த்தால் வாந்தி வரும் படியான ஒரு படம் என்று பெயர் குறிப்பிடாமல் தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னதாகப் பதிவிட்டிருந்தார். சமீபத்தில் ஆர்.ஜே பாலாஜி நேர்காணல் ஒன்றில் அனிமல் படத்தை பார்க்க மாட்டேன், பெண்களை அவமானப்படுத்தும் இந்த மாதிரியான ஒரு படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதை பார்த்தால் தானும் அப்படியான ஒரு படத்தை தனக்கே தெரியாமல் எடுத்துவிடுவேன் என்றும் கூறியிருந்தார்.
இத்தனை விமர்சனங்களுக்கு மத்தியில் அனிமல் படத்திற்கு தங்களது ஆதரவை தெரிவித்த பிரபலங்களும் இருக்கிறார்கள். இயக்குநர் ராம் கோபால் வர்மா மற்றும் அனுராக் கஷ்யப் அனிமல் படம் இந்திய சினிமாவில் மிகப்பெரிய கேம் சேஞ்சர் என்று படத்தை பாராட்டியிருந்தார்கள். நடிகை த்ரிஷா அனிமல் படத்தைப் பார்த்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்துக்கு ஹார்ட் எமோஜி விட்டிருந்தார். இதற்கு வந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அவர் அந்தப் பதிவை நீக்கினார்.
மிருகங்களுக்காக எடுக்கப்பட்ட படம்
Animal is for the animal,by the animal and for the animal. And I don’t mean any offense to real animals
— Srinivas singer (@singersrinivas) January 28, 2024
இந்நிலையில், தற்போது பாடகர் ஸ்ரீநிவாஸ் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துப் பதிவிட்டுள்ளார். “மிருகங்களுக்காக மிருகங்களால் எடுக்கப்பட்ட படம் அனிமல்” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த பதிவில் “நிஜ மிருகங்களை அவமானப்படுத்தவில்லை” என்றும் குற்ப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

