HBD chinmayi: 'ஒரு தெய்வம் தந்த பூவே' தேன் குரல் தேவதை பாடகி சின்மயி பிறந்தநாள் இன்று..!
தமிழ் சினிமாவின் பிரபல பின்னணி பாடகி சின்மயின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த பாடகர்களில் ஒருவரான சின்மயி இன்று ( செப்டம்பர் 10) தன் பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
தெய்வம் தந்த பூவே:
சிறு வயதிலேயே சின்மயி கர்நாடக சங்கீதம் இந்துஸ்தானி இசை ஆகியவற்றை பயின்று, பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றியும் பெற்றுள்ளார். அனைத்திந்திய வானொலியால் நடத்தப்பட்ட கஸல் போட்டியில் தங்கப்பதக்கமும் இந்துஸ்தானி இசைப் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றார் சின்மயி.
மணிரத்னம் தயாரித்து இயக்கிய 'கன்னத்தில் முத்தமிட்டால்' படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 'ஒரு தெய்வம் தந்த பூவே' என்னும் சவாலான பாடல் சின்மயி பாடிய முதல் திரைப்படப் பாடல். இந்தப் பாடலின் தெலுங்குப் பதிப்பான 'ஈ தேவி வரமு நீவோ' என்ற பாடலையும் சின்மயி பாடினார். முதல் பாடலிலேயே தமிழ். தெலுங்கு திரை இசை ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார் சின்மயி. சற்றுக் கடினமான அந்தப் பாடலை மிக இயல்பாகவும் இனிமையாகவும், உயிரோட்டத்துடனும் பாடி அசத்தி இருப்பார். இதைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், என தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் தொடர்ந்து பாடிவந்தார்.
தமிழில் தேவா, யுவன் ஷங்கர் ராஜா, வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ், டி.இமான் உள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்கள் சின்மயியைப் பாடவைத்தனர். சோகப் பாடல், ஜாலியான பாடல், மெலோடி என அனைத்து வகையான பாடல்களுக்கும் அதற்கேற்றவாரு பாடி அசத்தினார். இதனால் அவருக்குப் பல வெற்றிப் பாடல்கள் அமைந்தன.
பாலிவுட்டிலும் அசத்தல்:
2008-ல் வெளியான 'மங்கள் பாண்டே தி ரைசிங்' படத்தில் ரஹ்மான் இசையில் 'ஹோலி ரே' பாடலைப் பாடியதன் மூலம் பாலிவுட்டில் தடம் பதித்தார் சின்மயி. மணிரத்னத்தின் 'குரு' படத்தில் இடம்பெற்ற 'தேரே பீனா', 'மையா மையா' பாடல்கள் சின்மயியை தேசிய அளவில் புகழ் பெறச் செய்தது. இவற்றின் தமிழ், தெலுங்கு வடிவங்களையும் இவரே பாடினார் அவையும் வெற்றியடைந்தது. 18 ஆண்டுகளில் ஆயிரம் பாடல்களுக்கும் அதிகமாக பாடிவிட்டார்.
சிறந்த பாடகருக்கான தமிழக அரசின் விருதை மூன்று முறையும் ஆந்திர அரசின் நந்தி விருதை நான்கு முறையும் தென்னிந்திய ஃபிலிம்ஃபேர் விருதை ஐந்து முறையும் வென்றார்.'யே மாயே செஸாவே' படத்தில் சமந்தாவுக்கு பின்னணிக் குரல் கொடுத்ததற்காகச் சிறந்த பின்னணிக் குரல் கலைஞருக்கான தேசிய விருதை வென்றார். மராத்திய மொழியில் 'சாய்ரத்' படத்துக்கு இவர் பாடிய பாடலுக்காக மராத்திய ஃபிலிம்ஃபேர் விருதை வென்றார்.
மேலும் படிக்க