Sidhu Moose Wala: நியூயார்க் டைம்ஸ் ஸ்கொயரில் ஒலித்தது சித்து மூஸ் வாலா பாடல்... கண்ணீர் அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்!
சித்து மூஸ் வாலாவை நினைவுகூறும் வகையில் டைம்ஸ் சதுக்கத்தில் அவரது பாடல் ஒளிபரப்பப்பட்ட நிலையில் அங்கு கூடியிருந்த அவரது ஏராளமான ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக அவரது பாடலை இணைந்து பாடி அஞ்சலி செலுத்தினர்
சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் பாடல் நியூயார்க்கின் பிரபல டைம்ஸ் சதுக்கத்தில் ஒளிபரப்பப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
டைம்ஸ் சதுக்கத்தில் ஒலித்த சித்து மூஸ்வாலா
தன் 28ஆம் வயதில் சுட்டுக்கொல்லப்பட்ட பஞ்சாப் பாடகர் சித்து மூஸ் வாலாவின் பிறந்த நாள் முன்னதாக ஜூன் 11ஆம் தேதி கொண்டாடப்பட்டது.
இந்நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு சித்து மூஸ் வாலாவை நினைவுகூறும் வகையில் டைம்ஸ் சதுக்கத்தில் சித்து மூஸ் வாலாவின் பாடல் ஒளிபரப்பப்பட்டது. அப்போது அங்கு கூடியிருந்த அவரது ஏராளமான ரசிகர்கள் உணர்வுப்பூர்வமாக அவரது பாடலை இணைந்து பாடி அஞ்சலி செலுத்தினர்.
Sidhu Moose Wala made the billboards in Times Square on his birthday... CHK Fer.... ❤️🕊🤍#sidhumoosewala #SidhuMooseWala𓃵 #Moosewala #JusticeForSidhuMooseWala #NewYork #TimesSquare #missyoubrother pic.twitter.com/HMojnCouFq
— Sandy ( ਸੰਦੀਪ ) (@thelastride5911) June 12, 2022
ட்விட்டரில் வைரல்
இது குறித்த வீடியோவை சித்து மூஸ்வாலாவின் ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் மூஸ்வாலா அவரது தாயுடன் இருக்கும் புகைப்படம் டைம்ஸ் சதுக்கத்தில் திரையில் மிளிர்ந்தபோது அங்கு கூடியிருந்த ஏராளமான ரசிகர்கள் ஆரவாரம் செய்தும், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
சுப்தீப் சிங் சித்து மூஸ் கொலை வழக்கில் லாரன்ஸ் பிஷ்னோய் தான் மூளையாக செயல்பட்டதாக டெல்லி காவல் துறை முன்னதாகத் தெரிவித்துள்ளது. மேலும், சித்து மூஸ் வாலாவை கொன்றதாக சந்தேகிக்கப்பட்ட 8 நபர்களில் 6 பேர் அடையாளம் காணப்பட்டு, இருவர் தற்போது விசாரணையில் எடுக்கப்பட்டுள்ளனர்.
கேங்வார் கொலை?
மேலும் இக்கொலையை ’கேங் வார்’ காரணமாக நடந்தேறிய படுகொலை என்று காவல் துறை முன்னதாகக் கருதிய நிலையில், இப்போது அதையும் காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். மேலும், கொலைக்கான நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை என்றும், இப்போதைய சூழலில் கூடுதல் தகவல்களைக் கூற முடியாது என்றும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
28 வயது நிரம்பிய பஞ்சாப் பாடகரும், காங்கிரஸ் கட்சித் தலைவருமான சித்து மூஸ்வாலா, தன் பாடல்களில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வரிகளால் பெரிதும் பேசப்பட்டவர்.
பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு காங்கிரசில் இணைந்த பிரபல சித்து மூஸ்வாலா, கடந்த மே.29ஆம் தேதி மான்சா மாவட்டத்தில் உள்ள ஜவஹர்கே கிராமத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து அவர் உயிரிழந்த செய்தியை மான்சா மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் ரஞ்சீத் ராய் உறுதிப்படுத்தினார்.
விசாரணை கமிஷன்
முன்னதாக, சித்து மூஸ்வாலா உட்பட முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகள் உட்பட 420க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை வாபஸ் பெறுமாறு நேற்றுமுன்தினம் பஞ்சாப் காவல்துறை உத்தரவிட்டது. பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்ட ஒருநாள் கழித்து சித்து மூஸ்வாலா சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
சித்து மூஸ் வாலாவின் மறைவு குறித்து விரிவான விசாரணைக்கு முதல்வர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார். பஞ்சாப் சண்டிகர் நீதிமன்றத்தின் அமர்வு நீதிபதி தலைமையிலான விசாரணைக் கமிஷன் அமைத்தும் முதலமைச்சர் பகவந்த் மான் உத்தரவிட்டுள்ளார்.