4 Years Of Sivappu Manjal Pachai : மலையேறினாலும் மச்சான் துணை..4 ஆண்டுகளை நிறைவு செய்யும் “சிவப்பு மஞ்சள் பச்சை” படம்..!
சித்தார்த் , ஜி. வி பிரகாஷ் நடித்து வெளியான “சிவப்பு மஞ்சள் பச்சை” திரைப்படம் வெளியாகி இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் நடித்து வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் வெளியாகி இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்றன,
சிவப்பு மஞ்சள் பச்சை
சித்தார்த், ஜி.வி. பிரகாஷ் குமார், லிஜோமோல் ஜோஸ், கஷ்மீரா உள்ளிட்டவர்கள் நடித்து சசி இயக்கியத் திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. சித்து குமார் இந்தப் படத்திற்கு இசையமைத்து அபிஷேக் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்தது.
மாமன் மச்சான் உறவு
சிவப்பு மஞ்சள் பச்சை படத்தை பற்றி நேர்காணல் ஒன்றில் படத்தின் இயக்குநர் சசி இப்படி குறிப்பிடுகிறார் “ தூத்துக்குடியில் ஆழ்கடலில் முத்துக்குளிக்கச் செல்வார்கள். அப்போது மச்சான் மேலே இருந்து கயிற்றை பிடித்திருக்கும் நிலையில், அவரை நம்பி ஆழ்கடலுக்குள் செல்வார் மாமன். இப்படியான ஒரு உறவைப் பற்றிய ஒரு படத்தை தான் நான் எடுக்க நினைத்தேன் “ .
சின்ன வயதில் இருந்து தங்களது பெற்றோர்களை இழந்து தங்களது அத்தையின் வளர்ப்பில் வளர்கிறார்கள் ராஜலட்ஷ்மி (லிஜோமோல் ஜோஸ் ) மற்றும் மதன் (ஜி.வி.பிரகாஷ்). பைக் ரேஸில் ஆர்வம் கொண்ட மதன் ரேஸ் ஓட்டும்போது ட்ராஃபிக் இன்ஸ்பெக்ட்ரான ராஜசேகர் ( சித்தார்த்) இடம் மாட்டிக்கொள்கிறான். அவனை அவமானப்படுத்துவதற்காக அவனை பெண்களின் ஆடையை அணிவித்து தெருவில் இழுத்துச் செல்கிறார் ராஜசேகர். இதன் காரணத்தினால் இருவருக்கு இடையில் பகை உருவாகிறது.
எத்தனையோ மாப்பிள்ளைகளை பார்த்தும் பிடிக்காமல் கடைசியில் ராஜசேகரிடம் காதல் கொள்கிறார் ராஜி. இதனால் தனது அக்காவிடம் கோபப் பட்டு அவரிடம் இருந்து விலகி செல்கிறான் மதன். சந்தர்ப்ப சூழ்நிலைகள் மதன் மற்றும் ராஜசேகருக்கு இடையில் இருக்கும் பகையை எப்படி ஒரு அழகான உறவாக மாற்றுகிறது என்பதே இந்தப் படத்தின் கதை.
அழகான குடும்பப் படம்
இயக்குநர் சசி மாமன் மச்சானுக்கு இடையிலான உறவைப் பற்றிய படம் இது என்று சொன்னாலும் சிவப்பு மஞ்சள் பச்சை கணவன் மற்றும் தம்பி என இரண்டு ஆண்களுக்கு நடுவில் சிக்கித் தவிக்கும் ஒரு பெண்ணின் கதையாகவும் இருக்கிறது. அன்பு பாசத்தின் பெயரால் கட்டுப்பட்டு பெண்களின் உணர்வுகளை தங்களையே அறியாமல் ஆண்கள் எப்படி சுரண்டுகிறார்கள் என்கிற ஒரு மெல்லிய விமர்சனமும் இந்தப் படத்தில் இருக்கிறது.
குறிப்பாக எவ்வளவுதான் படித்த முற்போக்கான ஒரு ஆணாக இருந்தாலும் தன்னையும் அறியாமல் அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்கும் பெண்களைப் பற்றிய முன் தீர்மானங்களை சுட்டிக்காட்டுகிறது இந்தப் படம்.
குடும்ப பின்னணியில் அமைக்கப் பட்ட இந்தப் படம் பல ஆழமான கருத்துக்களை போதனைகளாக இல்லாமல் மிக அழகான உணர்ச்சிகளாக பேசியது. தமிழ் சினிமாவில் நல்ல ஃபேமிலி டிராமா வகை திரைப்படங்கள் மிக அரிதாகி வருகின்றன. 19 வயது இளைஞனாக நடித்திருந்த ஜி.வி பிரகாஷ் தனது கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாகவே நடித்திருந்தார். ஜி.வி மற்றும் லிஜோமோல் ஜோஸ் அக்கா தம்பியாக மிக கச்சிதமாக பொருந்தியும் இருந்தார்கள். மேலும் படத்திற்கு இசையமைத்த சித்து குமாரின் இசையில் உருவான பாடல்கள் எந்த மூத்த இசையமைப்பாளர்களின் சாயலும் இல்லாமல் புது வகையான ஒரு அனுபவத்தை வழங்கின, இன்றுடன் 4 ஆண்டுகளை நிறைவு செய்கிறது சிவப்பு மஞ்சள் பச்சை