HBD Sid Sriram : கேட்க கேட்க பரவசம்... மெழுகை போல உருக வைக்கும் குரல்... உணர்வுகளின் உச்சரிப்பு சித் ஸ்ரீராம்!
போட்டிகள் நிறைந்த இந்த இசை உலகில் வயது வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை தனக்கென சேகரித்தனர் பின்னணி பாடகர் சித் ஸ்ரீராமுக்கு இன்று பிறந்தநாள்.
இந்த பாட்டை யாருப்பா பாடியிருக்கா... சித் ஸ்ரீராமா அப்போ சொல்லவே தேவையில்லை பாட்டு சூப்பர் ஹிட் தான். இது ஒரு அசட்டுத்தனமாக இருந்தாலும் இது தான் உண்மை. சித் ஸ்ரீராம் பாடிய பாடல் என்றால் கண்ணை மூடி கொண்டு பாடலை கேட்காமலேயே சொல்லி விடலாம் அது ஒரு சூப்பர் ஹிட் பாடலாக அமையப்போகிறது என்பதை. இத்தகைய பெருமையை கொண்ட வசீகரமான குரலோனுக்கு இன்று 33 வது பிறந்தநாள்.
அடியேய் அடியேய்... என 'கடல்' படத்தில் இடம்பெற்ற பாடல் மூலம் சிறகடிக்க தொடங்கிய சித் ஸ்ரீராம் மேலும் மேலும் உச்சத்திற்கு சென்று தனது உருக வைக்கும் இனிமையான குரலால் கேட்போரை பரவசப்படுத்தி வருகிறார். சரியான உச்சரிப்பு, பாடலுக்கேற்ற உணர்வு என பாடலுக்கு தனது குரலால் அழகு சேர்பவர் சித் ஸ்ரீராம். போட்டிகள் நிறைந்த இந்த இசை உலகில் வயது வரம்புகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தனி ரசிகர் பட்டாளத்தை தனக்கென சேகரித்துள்ளார்.
கர்நாடக சங்கீத கலைஞன் :
சென்னையில் பிறந்த சிங்கக்குட்டி என்றாலும் படித்தது எல்லாம் அமெரிக்கா மாகாணத்தில் உள்ள கலிஃபோர்னியாவில். கர்நாடக சங்கீத மேதையின் மானாக இருந்து தாயின் வழியே கர்நாடக சங்கீதம் மீது தீராத காதல் கொண்டவர். பாஸ்டனில் உள்ள பெர்க்லி இசைக் கல்லூரியில் பட்டம் பெற்ற இந்த இசை கலைஞன் அவ்வப்போது மார்கழி மகா உற்சவத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்து ரசிகர்களை தனது சங்கீதத்தால் ஈர்த்தவர்.
எண்ணற்ற ஹிட்ஸ் :
கர்நாடக சங்கீத மேதையாக இருந்தவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய பெருமை இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானையே சேரும். 2013ம் ஆண்டு அறிமுகமானவர் 10 ஆண்டுகளில் எண்ணற்ற ஹிட் பாடல்களை பாடியுள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் மட்டுமின்றி இளையராஜா, டி. இமான், யுவன் ஷங்கர் ராஜா, அனிருத் என அனைத்து முன்னணி இசையமைப்பாளர்களின் இசையிலும் பாடியுள்ளார். என்னோடு நீ இருந்தால், தள்ளி போகாதே, மறுவார்த்தை பேசாதே, குறும்பா, இதுவும் கடந்து போகும், கஞ்சா பூவு கண்ணால, என்னை விட்டு உயிர் போனாலும், தாரமே தாரமே, யார் அழைப்பது, உன்ன நெனச்சு நெனச்சு, விசிறி, கண்ணான கண்ணே, இன்கேம் இன்கேம் இன்கேம் காவாலே என அடுக்கி கொண்டே போகும் அளவிற்கு எக்கச்சக்கமான ஹிட்ஸ். சித் ஸ்ரீராம் பாடல்கள் தான் பலரின் ரிங்க் டோனாகவே இருக்கிறது என்றால் அது மிகையல்ல.
ஒரு சிறந்த பாடகராக மட்டுமின்றி ஒரு இசையமைப்பாளராகவும் தனது தடம் பதித்தார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான வானம் கொட்டட்டும் திரைப்படத்திற்கு இசை அமைத்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். இந்த இளம் வயதிலேயே இசை துறையில் மிக முக்கியமான பிரபலமாக லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்று வலம் வரும் சித் ஸ்ரீராம் மேலும் பல சாதனைகளை புரிய வாழ்த்துக்கள்!