Pathaan : பதான் பார்க்க முடியலன்னா தற்கொலை பண்ணிக்குவேன்... மிரட்டல் விடுக்கும் ஷாருக்கான் ரசிகர்... அங்கலாய்க்கும் ரசிகர்கள்!
ஷாருக்கானை திரையில் பட ரிலீஸ் நாளில் பார்க்க முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என ஏரி முன்பு நின்றவாறு மிரட்டல் விடுக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
பாலிவுட் தாண்டி உலக அரங்கில் எண்ணற்ற மக்களை ஈர்த்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் ‘கிங் கான்’, எனக் கொண்டாடப்படும் ஷாருக்கான்.
4 ஆண்டுகளுக்கு வெளியாகும் ஷாருக் படம்
திரையில் தொடங்கி ஆஃப் ஸ்க்ரீன் வரை பிறரை காந்தமென ஈர்த்திழுக்கும் குணாதிசயங்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கான், 30 ஆண்டுகளுக்கும் மேலாக பாலிவுட்டின் பாட்ஷாவாகக் கோலோச்சி வருகிறார். 1990ல் தொடங்கி தற்போது வரை நிரந்தர பாட்ஷாவாகக் கோலோச்சி வரும் ஷாருக், கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஃபேன் படத்துக்குப் பிறகு ஹீரோவாக வேறு படத்தில் நடிக்கவில்லை.
கிட்டத்தட்ட 4 ஆண்டுகளுக்குப் பிறகு வரும் ஜனவரி 25ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் வெளியாகிறது. சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பான் இந்தியா திரைப்படமாக தயாராகியுள்ள இப்படத்தில் தீபிகா படுகோன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
தற்கொலை மிரட்டல் விடுக்கும் ரசிகர்
இந்நிலையில் பதான் பட வெளியீட்டைத் தொடர்ந்து அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில், பதான் படத்தை ரிலீஸ் நாளில் பார்க்கவில்லை என்றால் தான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வேன் என ரசிகர் ஒருவர் மிரட்டல் விடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பதான் படத்தின் பேஷரம் ரங் பாடல் வெளியானது முதல் பெரும் சர்ச்சையைக் கிளப்பி எதிர்ப்புகளைப் பெற்று வந்தது. இந்த பாடல் முழுவதும் தீபிகா படுகோன் காவி நிறத்திலான பிகினி உடை அணிந்திருப்பதற்கு வலதுசாரி அமைப்புகள், அரசியல்வாதிகள்,இந்துத்துவவாதிகள் என பலரும் பெரும் கண்டனங்களை எழுப்பினர்; உருவப்படங்களை எரிப்பது, திரையிட கூடாது என மிரட்டல் விடுவதுமாக கலவரம் வெடித்தது.
இதனிடையே வழக்கம் போல் பாய்காட் பாலிவுட் பிரச்சாரமும் பதான் படத்துக்கு எதிராக எழுப்பப்பட்டது. இவற்றுக்கு மத்தியில் மத்திய திரைப்பட தணிக்கை வாரியத்தின் தலைவர் பிரசூன் ஜோஷி சில பாடல் காட்சிகளில் சில மாற்றங்களை அமல்படுத்த உத்தரவிட்ட நிலையில், சர்ச்சைகள் ஓய்ந்து வரும் ஜனவரி 25ஆம் தேதி பாடல் ரிலீசாகிறது.
தொடரும் சர்ச்சை
இந்நிலையில் ரியான் எனும் ஷாருக்கானின் ரசிகர் தன்னிடம் ஷாருக்கான் படம் பார்க்க பணமில்லை என்றும் தனக்கு பதான் படம் பார்க்க உதவுமாறும், ஷாருக்கானை திரையில் பட ரிலீஸ் நாளில் பார்க்க முடியாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் எனவும் ஏரி முன்பு நின்றவாறு மிரட்டல் விடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் இருந்து வீடியோக்கள் பகிரும் இந்நபர் தொடர்ந்து தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். பதான் பட சர்ச்சைகள் ஓய்ந்துள்ள சுமூகமாக வெளியாக உள்ள நிலையில், மிரட்டல் விடுக்கும் ஷாருக்கான் ரசிகரின் இந்த வீடியோ மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி வருகிறது.
Suicidal Trigger Warning.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)