ஷாருக்கான் சரக்குதான் உலகத்துலேயே பெஸ்ட் விஸ்கி! என்ன பிராண்ட்? என்ன விலை?
உலகின் சிறந்த விஸ்கிக்கான விருதை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் நிறுவனம் வென்றுள்ளது.
உலகில் அதிகளவு வர்த்தகத்தை கொண்ட வியாபாரங்களில் ஒன்றாக மது வியாபாரமும் உள்ளது. மதுவில் விஸ்கி, பிராந்தி, பீர், ரம் என்று பல ரகங்கள் உள்ளது. இதில் பெரும் பணக்காரர்கள், மிகப்பெரிய சொகுசு விடுதிகளில் அதிகளவு விற்பனையாகும் மது வகைகளில் விஸ்கி முதன்மையானதாக உள்ளது.
ஷாருக்கானின் விஸ்கி நிறுவனம்:
ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு வகை பிரிவிலும் சிறந்த மதுவிற்கு விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் உலகின் சிறந்த விஸ்கிக்கான விருதை ஷாருக்கானின் நிறுவனம் வென்றுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூயார்க் வேர்ல்ட் ஸ்பிரிட்ஸ் காம்பெடிஷன் நிறுவனம் நடப்பாண்டிற்கான சிறந்த விஸ்கிக்கான போட்டியை நடத்தியது.
இதில், ஷாருக்கானின் நிறுவனமான டி யாவோல் இன்செப்ஷன்ஸ் என்ற விஸ்கி நிறுவனமும் பங்கேற்றது. இந்த நிறுவனத்தின் உரிமையாளராக ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் உள்ளார். உலகின் பல நாடுகளின் முன்னணி விஸ்கி நிறுவனங்கள் பங்கேற்ற இந்த போட்டியில் ஷாருக்கானின் நிறுவனம் வெற்றி பெற்று உலகின் சிறந்த விஸ்கிக்கான என்ற விருதை வென்றது. சுவை, தயாரிப்பு, பயன்படுத்தப்படும் பொருட்கள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த விருதுக்கு விஸ்கி தேர்வு செய்யப்படுகிறது.
பல விருதுகள்:
2023ம் ஆண்டு இந்த டியாவல் இன்செப்ஷன்ஸ் நிறுவனம் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது முதலே சர்வதேச அளவிலான ஒயின் மற்றும் மது வகைகளுக்கான தங்கப்பதக்கம், நியூயார்க் வேர்ல்ட் ஸ்பிரிட்ஸ் போட்டியில் இரட்டை தங்கம், ஆசிய சர்வதேச மது போட்டிகளுக்கான விருது ஆகியவற்றை ஷாருக்கானின் நிறுவனம் வென்றுள்ளது.
சர்வதேச அளவில் சிறந்த விஸ்கி விருதை வென்றுள்ள ஷாருக்கான் நிறுவனத்தின் டியாவல் விஸ்கி (750 மில்லி) மகாராஷ்ட்ராவில் 9 ஆயிரத்து 800 ஆகவும், கோவாவில் ரூபாய் 9 ஆயிரத்திற்கும், கர்நாடகாவில் ரூபாய் 9 ஆயிரத்து 500க்கும் விற்கப்படுகிறது. தற்போது இந்தியாவில் இந்த மூன்று மாநிலங்களில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. விரைவில் டெல்லி, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஹரியானா மற்றும் தெலங்கானா மாநிலத்திலும் விற்பனைக்கு வர உள்ளது.
ஷாருக்கானின் இந்த நிறுவனம் நெதர்லாந்தை பூர்வீகமாக் கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய நடிகரான ஷாருக்கான் நடிகராக மட்டுமின்றி மிகப்பெரிய தொழில் முனைவோராகவும் உலா வருகிறார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் உரிமையாளராக உள்ளார். மேலும், பாலிவுட்டில் ரெட் சில்லீஸ் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதுதவிர பல்வேறு தொழில்களிலும் அவர் முதலீடு செய்து வருகிறார்.