Shahrukh khan 56th birthday : உணர்வுகளின் நாயகன் ஷாருக்..!
அமிதாப் பச்சனின் சினிமா உலகம் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது, ஷாருக்கானின் உலகம் தாராளமய கொள்கை கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது.
பாலிவுட் திரைப்பட நடிகர் ஷாருக்கானின் 56-வது பிறந்தநாளை உலகம் முழுவதிலும் உள்ள அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.1980-களில் அமிதாப் பச்சன் என்ற உச்சபட்ச நட்சத்திர நாயகன் வணிக ரீதியாக தோல்வியைச் சந்தித்து வந்த நிலையில், ஷாருக்கான், ஆமீர் கான், சல்மான் கான் என்ற மூன்று நட்சத்திரங்கள் இந்தி சினிமாவில் உதிக்கத் தொடங்கியது. இவர்களின் வருகை இந்தி சினிமா உலகில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.
60-களின் பிற்பகுதியில் திரையில் அறிமுகமான அமிதாப் பச்சன், திரையில் மகா கோபம் கொண்ட மனிதனாக காட்சியளித்தார். 60களில் நேருவின் சோசியலிஷ பொருளாதாரக் கொள்கையின் வெளிப்பாடாக அமிதாப் பச்சன் கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டது. கனரக இயந்திரங்கள் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்ட காலமது. நகர்ப்புறங்களில் தனித்து விடப்பட்ட விளிம்புநிலை மக்களுக்கு நியாயம் கேட்கும் மனிதனாகவும், பெரும் முதலாளிகளின் சுரண்டல்களைத் தட்டிக் கேட்கும் ராபின் வூட்டாகவும் வலம் வந்தார்.
90-களில் பொருளாதார மாற்றத்தின் உச்சத்தில் இந்தியா இருந்தது. அந்நிய நேரடி முதலீட்டைத் திறத்தல், வணிகம் செய்வதை எளிதாக்குதல் போன்ற சீர்த்திருத்த நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டன. பொதுத்துறைகள் ஓரங்கட்டப்பட்டு தனியார் துறையும் பொருளாதாரத்தில் முக்கிய பங்கை எடுக்கத் தொடங்கின. 'இந்தியாவைப் பற்றிய கற்பனை உலகளவில் மாறத் தொடங்கின. இந்த சூழலில் தான் ஷாருக்கானின் திரை வாசம் தொடங்கியது. அம்பிதாப் பச்சனின் சினிமா உலகம் கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது, ஷாருக்கானின் உலகம் தாராளமயக் கொள்கை கண்ணோட்டத்துடன் பார்க்கப்பட்டது.
கதாநாயகன் பிம்பத்தை மாற்றியமைத்த ஷாருக்கான்:
பொதுவாக,திரைப்படங்களில் வரும் கதாநாயகன் திமிரான, ஆண்தன்மையின் குறியீடாக காட்சியமைக்கப்படுகிறது. நாடு, தேசியம், அரசு, மக்கள், ஜனநாயகம், நியாயம், உண்மை, வளர்ச்சிப் போன்ற பொதுமைப்பட்ட கருத்தாக்கங்களை கதாநாயகன் பேசுவார். ரஜினி, எம்.ஜி.ஆர், அமிதாப்பச்சன், என்.டி.ராமா ராவ், ராஜ்குமார் போன்றவர்களின் படங்களில் இதை நம்மால் உணர முடியும். கோபம், பாசம், பயம் போன்ற உணர்வுகளை வெளிபடுத்தும் போது க்ளோஸ் - அப் ஷாட்கள் கூட வைக்கப்படாது.
ஆனால், ஷாருக் கான் இந்த போக்கை மாற்றியமைத்தார். ஷாருக் கான் கதாப்பாத்திரத்தில் ஒரு பெண்மை உணர்வுநிலை எப்பவுமே கடைபிடிக்கப்படும். பொதுக் கருத்தாங்களைத் தாண்டி ஷாருக்கானின் அநேக திரைப்படங்களில் தனிமனிதன் பற்றிய கவலைகளை அதிகம் இடம் பிடித்திருக்கும். நட்பு,காதல் குறித்தான காட்சிகளில் நடுக்கத்துடன், பதற்றத்துடன் வெளிப்படுத்தியிருப்பார். ஹேராம்,உயிரே, ரப்னே பனா டி ஜோடி, சக் தே இந்தியா உள்ளிட்ட ஷாருக்கான் பெரும்பாலான திரைப்படங்களில், ஷாருக்கான் அழுகும் க்ளோஸ் அப் ஷாட்கள் தான் படத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தன.
உண்மையில், ஷாருக்கானின் திரைப்படங்களில் மனித அனுபவங்கள் வலுவாக காலூன்றி நிற்கும். மனித இயலாமைகளை திரையில் காட்டியவர் அவர். அறிவு யதார்த்தப்பூர்வமானது என்ற காலகட்டத்தில், மனித யதார்த்தங்கள் அறிவுப்பூர்வமானது என்று மெய்பித்துக் காட்டியவர் ஷாருக். சுருங்கச்சொன்னால், ஷாருக்கான் திரையில் காட்டிய உலகம், நம்மால் வாழப்பட்ட/வாழும்/ வாழப்போகிற உலகம்.