Actor Sairam: புற்றுநோய் பாதிப்பால் அவதி... பிரபல நடிகர் சாய்ராமின் அறியப்படாத சோகக்கதை
Actor Sairam : கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு உடல் எடை பாதியாக குறைந்து இனி நடிக்கவோ அல்லது பாடவோ முடியாத சூழலில் இருந்து மீண்ட சின்னத்திரை நடிகர் சாய்ராம்.
சின்னத்திரை நடிகர், பாடகர் என பன்முகம் திறமை கொண்டவராக பிரபலமானவர் நடிகர் சாய்ராம். சன் டிவியில் ஒளிபரப்பான ஆடுகிறான் கண்ணன், அனுபல்லவி, செல்லமே உள்ளிட்ட ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். சின்னத்திரை மட்டுமின்றி வெள்ளித்திரையிலும் ராதா ரவி, டெல்லி கணேஷ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். ஜீ தமிழில் ஒளிபரப்பான 'நீ தானே என் பொன்வசந்தம்' சீரியலில் நடித்திருந்தார். சமீபத்தில் அவர் கலந்து கொண்ட நேர்காணலில் அவரின் நடிப்பு அனுபவம் பற்றியும் அவரின் கடந்த காலம் பற்றியும் பகிர்ந்து இருந்தார்.
கச்சேரியில் மிகவும் பிஸியாக இருந்த சாய்ராமுக்கு ஒரு நடிகராக வேண்டும் என்பதில் பெரிய அளவில் ஈடுபாடு எல்லாம் இருந்தில்லையாம். தன்னுடைய நெருங்கிய நண்பரான நடிகர் பாஸ்கி மூலம் தான் நடிகனாக என்ட்ரி கொடுத்துள்ளார். "திரு திரு மாயாண்டி" என்ற பெயரில் குழந்தைகளுக்கான நிகழ்ச்சி ஒன்றை பிளான் செய்து இருந்தார்கள். அதன் ஆடிஷனுக்கு சென்று தேர்ந்து எடுக்கப்பட்டதால் 52 வாரங்களுக்கு அந்த தொடர் ஒளிபரப்பாக முடிவு செய்யப்பட்டது. கச்சேரி ஒரு பக்கமும், நடிப்பு ஒரு பக்கமும் பிஸியாக இருந்ததால் வேலையை விட்டு நின்றுள்ளார். அந்த சீரியல் நல்ல ஒரு வரவேற்பையும் அடையாளத்தையும் பெற்று கொடுத்தது.
அதன் மூலம் ஏ.வி. எம் நிறுவனத்தின் பல சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இயக்குநர் கே. பாலசந்தர் சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மட்டும்மல்லாமல் அவரை வைத்து 'நினைத்தாலே இனிக்கும்' என்ற பெயரில் நிகழ்ச்சி எல்லாம் செய்துள்ளார். அதை தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியமாக ஆஸ்கர் விருது வாங்கியது போல என கூறியிருந்தார்.
2012ம் ஆண்டு நடிகர் சாய்ராம் கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு மாறினார். அது பற்றி அவர் வெளியில் பெரிய அளவுக்கு பேசியதில்லை. உடல் எடை பாதியாக குறைந்து இனி நடிக்கவோ அல்லது பாடவோ முடியாத சூழல் ஏற்பட்டது. கடனை அடைக்க வேண்டும், குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் இப்படி குடும்ப சூழ்நிலை காரணமாக வேலை செய்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
தன்னுடைய தங்கை மற்றும் தங்கை கணவர் மூலம் உதவி இயக்குநராக இருக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. கிரியா யோகா பயிற்சி கொஞ்சம் கைகொடுத்துள்ளது. சாய்ராம் மீண்டும் மீண்டு வருவதற்கு மிகவும் முக்கிய காரணமாக இருந்தவர்கள் அவரின் குடும்பம், உறவினர்கள், மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் தான். அவர்களின் ஊக்கத்துடன் புற்றுநோயை எதிர்த்து மீண்டு வந்துள்ளார். இன்றும் அவர் கேன்சர் சர்வைவராக தான் இருக்கிறார்.
சினிமாவில் காட்டுவதை எல்லாம் பார்த்து புற்றுநோய் என்றாலே பலரும் அச்சப்படுகிறார்கள், அது ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறிந்துவிட்டால் அதில் இருந்து மீள்வது சாத்தியம்.