Munish Raja: ‛பிசினஸூடன் 50 லட்சத்தில் வீடு...’ ராஜ்கிரணை வெறுப்பேற்றும் முனீஸ்ராஜா!
ராஜ்கிரண் மகளை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் முனீஸ்ராஜா புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ராஜ்கிரண் மகளை காதல் திருமணம் செய்து கொண்ட நடிகர் முனீஸ்ராஜா தனது மனைவிக்காக வீடு ஒன்றை கட்டி வருவதாக கூறி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
சன் டிவியில் ஒளிபரப்பான இயக்குநர் திருமுருகன் இயக்கிய நாதஸ்வரம் சீரியலில் சம்பந்தம் என்கிற கேரக்டரில் நடித்தன் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் முனீஸ்ராஜா. இவர் பிரபல நடிகர் சண்முகராஜனின் உடன் பிறந்த தம்பியாவார். அந்த சீரியலில் முனீஸ்ராஜாவின் நடிப்பும்,ஸ்டைலான நடையும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த சீரியல் மூலம் பிரபலமான அவர், ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ என்ற தொடரில் ஹீரோவாக நடித்தார்.
இதற்கிடையில் சீரியலைத் தொடர்ந்து தேவராட்டம் உள்ளிட்ட சில திரைப்படங்களிலும் முனீஸ்ராஜா நடித்தார். மேலும் கடந்தாண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பழனி தொகுதியில் சுயேச்சை உறுப்பினராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனையடுத்து பிரபல நடிகர் ராஜ்கிரணின் மகள் ஜீனத் பிரியாவுக்கும் இவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. பேஸ்புக் மூலம் இந்த காதல் மலர்ந்ததாகவும், பார்த்தவுடன் பிடித்து விட்டதாகவும் முனீஸ்ராஜா தெரிவித்திருந்தார்.
மேலும் விஷயம் வீட்டுக்கு தெரிந்ததும் ஆரம்பத்தில் இரண்டு பேர் வீட்டிலும் சில விஷயங்களை காரணம் காட்டி இந்தக் காதலை ஏற்கவில்லை எனவும், இதனால் காதல் ஜோடிகள் இருவரும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் முனீஸ்ராஜா வீட்டில் காதலை ஏற்றுக்கொண்ட நிலையில், ராஜ்கிரண் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி முனீஸ்ராஜா பிரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் பதிவு திருமணம் நடந்து கொண்டது உண்மைதான் என்றும், ஊடகங்களில் தவறான தகவல்கள் வந்ததால் வீடியோ வெளியிட வேண்டிய நிலைமை வந்ததாகவும் தெரிவித்தார். மேலும் விரைவில் இருவீட்டார் சம்மதத்துடன் வரவேற்பு நடக்கும் எனவும் தெரிவித்தார். இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் நடிகர் ராஜ் கிரண் தனது பேஸ்புக்கில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில், ஜீனத் பிரியா தனது வளர்ப்பு மகள் என்றும் முனீஸ்ராஜா பணம் பறிப்பதற்காகவும், தனது பெயரை பயன்படுத்தி சினிமாவில் வாய்ப்புகளை பெறுவதற்காகவுமே இப்படியான செயலில் இறங்கியுள்ளதாகவும், இனிமேல் அவர்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தற்போது முனிஸ்ராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில், “ முந்தைய வீடியோவில் எங்களது திருமண வரவேற்புக்கு அழைக்கிறேன் என்று கூறியிருந்தேன். ஆனால் அதற்கு முன்னால் எனது மனைவி ஆசைப்படி அவருக்கு ஒரு பிசினஸ் ஆரம்பித்து கொடுக்கலாம் என்று நினைக்கிறேன்.
அது தொடர்பான நிகழ்ச்சி இந்த மாதம் இறுதியில் நடக்க இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இது மட்டுமல்லாமல் என்னுடைய மனைவிக்காக எனது சொந்த ஊரில் 50 லட்சம் பட்ஜெட்டில் வீடு ஒன்றை கட்டி வருகிறேன். அதன் பணியும் இந்த மாத இறுதிக்குள் முடிவடைந்து விடும். அந்த திறப்பு விழாவும் எனது சொந்தபந்தங்களின் ஆசீர்வாதத்துடன் நடக்கும்.” என்று பேசியிருக்கிறார்.