(Source: ECI/ABP News/ABP Majha)
Sengalam: தமிழக அரசியல் தலைவர்களை தவறாகக் காட்டியுள்ளேனா? ’செங்களம்’ இயக்குனர் எஸ்.ஆர். பிரபாகரன் விளக்கம்..!
மாநில அரசியலை முழுமையாக சொல்ல முடியாது. அதனால் மாவட்ட அரசியலை சொல்லி உள்ளேன். நான் பார்த்த அரசியலை இக்கதையில் சொல்லியுள்ளேன் என இயக்குநர் எஸ்.ஆர். பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
சசிகுமார் நடித்த 'சுந்தரபாண்டியன்' திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன். தொடர்ந்து ’இது கதிர்வேலன் காதல்’, ’சத்ரியன்’ உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
செங்களம்
தற்போது முதன்முறையாக ’செங்களம்’ என்ற இணையத்தொடரை இயக்கியுள்ளார். இதில் கலையரசன், விஜி சந்திரசேகர், டேனியல், பிரேம், வாணி போஜன், ஷாலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தரண் குமார் இசை அமைத்துள்ளார்.
ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்த செங்களம் இணையத்தொடர் முன்னதாக செய்தியாளர்களுக்கு சிறப்புக்காட்சியாக திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த செய்தியாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் விஜி சந்திரசேகர், பிரேம், டேனியல், ஷாலி , வாணி போஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது படக்குழுவினர் பேசியதாவது:
விஜி சந்திரசேகர்
”எனக்கு நன்றி சொல்ல வார்த்தையே இல்லை. எனது குடும்பம் போல தான் உங்களைப் பார்க்கிறேன். பார்க்கும் போது மிரட்டலாக இருந்தது மிக்க நன்றி. என்னை எப்படி இந்த கதாபாத்திரத்திற்கு தேர்வு செய்தீர்கள் என்று தெரியவில்லை. படத்திற்கு இசை மிகப்பெரிய பலம். அயலியை எப்படி நீங்கள் தூக்கிச் சென்றீர்கள், அது போல இதையும் செய்ய வேண்டும்” என்றார்.
எஸ்ஆர் பிரபாகரன்
”மிரட்டல் வந்தால் பரவாயில்லை. அரசியல் என்றால் என்ன என்பதை உண்மையாகக் காட்டியுள்ளோம். இது என்னுடைய 5ஆவது படைப்பு. சுந்தரபாண்டியன் படம் வரும்போது இருந்த பதட்டம் தற்போது இருந்தது. இதை நீங்கள் தான் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த செங்களம் சுடச்சுட ஒரு அரசியல் களம். இதை பார்க்கும் போது உங்களுக்கு எந்த அரசியல் தலைவர் தோன்றுகிறாரோ அதை அப்படியே மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். உள்ளதை உள்ளபடி எடுத்துள்ளேன், அதை அப்படியே எடுத்துள்ளேன். மிரட்டல் வந்தால் பார்த்து கொள்ளலாம்.
ஜெ., சசிகலா, ராமதாஸ்:
மாநில அரசியலை முழுமையாக சொல்ல முடியாது அதனால் மாவட்ட அரசியலை சொல்லி உள்ளேன். நான் பார்த்த அரசியலை இக்கதையில் சொல்லியுள்ளேன். நமக்கு தெரிந்தது சசிகலா, ஜெயலலிதா என்பதால் இதை பார்க்கும் போது அப்படி தெரியலாம். நிறைய அரசியல்வாதிகள் குறித்து இதில் உள்ளது.
வயதான தலைவர்கள் நிறைய பேர் உள்ளனர். ஆளும் கட்சியைச் சார்ந்தவர் என்று சொல்லவில்லை. ராமதாஸ் கூட சில நேரங்களில் நாற்காலியில் இருப்பார். வயதானவர் என்று காட்ட வேண்டும் என்பதற்காக தான் அப்படி வைத்தேன்” என்றார்.
தொடர்ந்து இந்தப் படத்தில் கருணாநிதி குறித்து தவறாகக் காண்பித்துள்ளதாகக் கேள்வி எழுப்பினர். மேலும் ஜெயலலிதா, சசிகலா கதாபாத்திரங்களைப் போன்று இதில் கதாபாத்திரங்கள் வருகின்றன. இதுகுறித்தும் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த இயக்குனர் நான் பார்த்த அரசியல் நிகழ்வுகள் குறித்து மட்டுமே இதில் சொல்லியுள்ளேன், வேறு எந்த உள்நோக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.