23 years of Kushi : கெமிஸ்ட்ரி இல்லா காதல் படம்... ஈகோ வைத்து எஸ்.ஜே. சூர்யா ஜமாய்த்த குஷி இன்றுடன் 23 ஆண்டுகள் நிறைவு
காதல் படம் என்றாலே ஹீரோ - ஹீரோயினுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி தான் ஒர்க் அவுட் ஆகும் ஆனால் குஷி படத்தில் இருவருக்கும் இடையில் இருந்த ஈகோ தான் படத்தின் சாரம்சம்.
தமிழ் சினிமாவில் பார்க்காமல் காதல், பேசாமல் காதல், சொல்லாத காதல், ஏமாந்த காதல் என எத்தனையோ காதல் படங்கள் வெளியாகி இருந்தாலும் ஒரு சில காதல் திரைப்படங்கள் நெஞ்சை விட்டு நீங்காமல் அப்படியே இன்று பார்த்தது போல பசுமையாக இருக்கும். அப்படி வெளியான ஒரு ஈகோ காதல் படம் தான் 'குஷி'. இப்படம் வெளியாகி 23 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன என்றால் நம்ப முடியவில்லை. பாரு வயதில் ரசித்த ஒரு படம் இத்தனை ஆண்டுகளை கடந்து விட்டதா நமக்கு அவ்வளவு வயதாகி விட்டதா என்ற எண்ணம் அப்போது தான் தலை தூக்குகிறது. இருப்பினும் அதன் நினைவுகள் நம்மை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் புதுப்பித்து கொண்டே இருக்கும்.
விஜய்யின் அட்டகாசமான நடிப்பு, உடல்மொழி, ஜோதிகாவின் குறும்புத்தனமான துறுதுறுப்பான ரியாக்ஷன், விவேக் காமெடி, விஜயகுமார் வெகுளித்தனம், தேவாவின் இசை, எஸ்.ஜே. சூர்யாவின் திரைக்கதை என அனைத்தும் ஒன்று சேர்ந்து ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து இன்றளவும் அதை நினைவுகளில் கூட ரசிக்க சிரிக்க வைக்கிறது. ஈகோ என்ற ஒற்றை வார்த்தையை வைத்துக் கொண்டு இத்தனை அழகாக எண்டர்டெயின்மெண்ட் கலந்து ஒரு கதைக்களத்தை உருவாக்க முடியுமா என பிரமிக்க வைத்தவர் எஸ்.ஜே. சூர்யா. அவரை இன்றைய தலைமுறையினருக்கு ஒரு சிறப்பான, வில்லத்தனமான நடிகராகவே தெரியும் ஆனால் அவர் ஒரு தரமான இயக்குநர் என்பதை நிரூபித்த ஒரு படம் குஷி.
ஒரு சில வசனங்கள் தான் இருந்தாலும் அவை அனைத்தும் ஆளை தூக்கும் அளவிற்கு பிரமாதமாக அமைந்தது. எக்ஸ்பிரஷன் வைத்தே படத்தை தூள் கிளப்பிய ஜோதிகா, விஜய் நடிப்பு அபாரம். கல்லூரி வாழ்க்கை, ப்ரெண்ட்ஸ், காதல், ஈகோ, சமரசம் என இளவட்டங்களின் சராசரி வாழ்க்கையில் இடம்பெறும் அத்தனை அம்சங்களையும் ஒன்று சேர மாலையை தொடுத்து கொடுத்து இருந்தார் எஸ்.ஜே. சூர்யா. படத்தின் திரைக்கதைக்கு ஹைலைட்டாக அமைந்தது தேவாவின் இசை. இன்றளவும் குஷி படத்தின் பாடல்கள் அனைத்தும் பிரபலமான பாடல்களாகவே இருக்கின்றன என்பது தான் அதற்கு சாட்சி.
காதல் படம் என்றாலே ஹீரோ - ஹீரோயினுக்கு இடையே இருக்கும் கெமிஸ்ட்ரி தான் ஒர்க் அவுட் ஆகும். ஆனால் குஷி படத்தில் இருவருக்கும் இடையில் இருந்த ஈகோ தான் படத்தின் சாரம்சம். இன்றளவும் நீ என்னோட இடுப்ப பாத்தியா என்ற காட்சி, வாக்குவாதம் மறக்கமுடியாத ஒன்று. ஒரு சில காட்சிகளில் மட்டுமே நடிகை மும்தாஜ் வந்தாலும் கவர்ச்சியை கஞ்சத்தனம் இல்லாமல் வாரி வழங்கிவிட்டு போனார். யாராவது கட்டிப்புடி கட்டிப்புடி டா பாடலை மறக்க முடியுமா என்ன?
தமிழ் சினிமாவில் எத்தனையோ படங்கள் வெளியாகின்றன. அதில் பாதிக்கும் மேற்பட்ட படங்களின் பெயர்கள் கூட நினைவில் இருப்பதில்லை. அப்படியிருக்கையில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஒரு படமான 'குஷி' பெயரை கேட்டவுடன் காட்சிகள் அப்படியே கண் முன்னே வெளிச்சம் போட்டு காட்டுவது தான் அப்படத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்.