(Source: ECI/ABP News/ABP Majha)
RRR Re-Release: 200 தியேட்டரில் ஆர்.ஆர்.ஆர். மீண்டும் ரிலீஸ்..! மிரட்டலான புது டிரெய்லர்...!
உலகெங்கிலும் 200 திரையரங்குகளில் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது.
சர்வதேச அளவில் அங்கீகாரமும் வரவேற்பையும் பெற்றுள்ளது எஸ்.எஸ். ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம். ஆஸ்கார் விருதுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட இப்படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
வசூலில் சாதனை :
பாகுபலி எனும் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு ராஜமெளலி இயக்கத்தில் கடந்த மார்ச் மாதம் வெளியான திரைப்படம் ஆர்.ஆர்.ஆர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர் கதாநாயகர்களாக நடித்த இப்படத்தில் ஆலியா பட், ஸ்ரேயா சரண், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உலகெங்கிலும் 1,100 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது.
ஆஸ்கர் விருதுகளில் ஆர்.ஆர்.ஆர் :
ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் ஆங்கில மொழி இல்லாத படத்திற்கான பிரிவிலும், சிறந்த பாடல் பிரிவில் நாட்டு நாட்டு பாடலும் கோல்டன் குளோப் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இரண்டு பிரிவுகளில் இடம் பெற்றிருந்தது. அந்த வகையில் நாட்டு நாட்டு பாடல் சிறந்த பாடலுக்கான கோல்டன் குளோப் விருதை கைப்பற்றியது. மேலும் இப்படம் சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த துணை நடிகர், சிறந்த பின்னணி இசை மற்றும் பல பிரிவுகளின் கீழ் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர்.ஆர்.ஆர் :
மேலும் வரவிருக்கும் ஆஸ்கார் விருதுகளில் சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் போட்டியிடும் ஆர்.ஆர்.ஆர் படத்தை மீண்டும் அமெரிக்காவின் திரையரங்குகளில் வெளியிட முடிவெடுத்துள்ளனர் தயாரிப்பாளர்கள். எஸ்.எஸ். ராஜமௌலியின் இயக்கத்தில் உருவான இப்படம் உலகெங்கிலும் 200 திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படவுள்ளது. அமெரிக்காவில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ள வேரியன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் இதற்கான அறிவிப்பை டிரெய்லருடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது.
தெறிக்கவிடும் புதிய டிரெய்லர்:
இந்த புதிய டிரெய்லரில் பாலம் காட்சி, நாட்டு நாட்டுப் பாடல் மற்றும் கிளைமாக்ஸ் காட்சிகள் போல படத்தில் சில சிறந்த காட்சிகள் இடம்பெற்றுள்ளன. நாட்டு நாட்டு பாடலை மிக்ஸ் செய்து பின்னணி இசை அமைத்துள்ளது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளது. ஜேம்ஸ் கேமரூன் ("ஒரு ட்ரையம்ப் நான் ஆச்சரியப்பட்டேன்") மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ("அசாதாரணம். என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை") மற்றும் எட்கர் ரைட் ("என்ன ஒரு முழுமையான ப்ளாஸ்ட்) போன்ற ஹாலிவுட் ஐகான்களின் பாராட்டு வார்த்தைகள் உட்பட, சர்வதேச அளவில் படம் பெற்ற அனைத்து பாராட்டுகளையும் புதிய விளம்பரத்தில் சேர்த்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் அமெரிக்காவில் மார்ச் 3ம் தேதி வெளியிடப்படவுள்ளது.