Animal: இடைவேளைக் காட்சி அப்பட்டமான காப்பி.. ‘அனிமல்’ படத்தை துவம்சம் செய்யும் நெட்டிசன்கள்!
ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் படத்தின் இடைவேளைக் காட்சி காப்பியடிக்கப் பட்டதாக இணையவாசிகள் கூறுகிறார்கள்!
அனிமல்
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்துள்ள அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். அனிமல் திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.
தன் தந்தையின் மீது அதீத அன்பு வைத்திருக்கும் கதாநாயகன் தொடர்ச்சியாக அவரால் நிராகரிக்கப்படுகிறார். அதே தந்தையின் உயிருக்கு ஆபத்து வரும்போது கதாநாயகன் எந்த எல்லைவரை செல்கிறார் என்பதே அனிமல் படத்தின் கதை. உணர்ச்சிவசமான ஒரு கதையை பின்னணியாக வைத்துக் கொண்டு கேங்ஸ்டர் படமாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா. மேலும் அவரது முந்தையப் படமான அர்ஜூன் ரெட்டியைப் போல் அனிமல் படமும் பலவிதமான சர்ச்சைக்குரிய விஷயங்களை உள்ளடக்கி இருப்பதால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
படத்தை விமர்சிக்கும் பிரபலங்கள்
அனுராக் கஷ்யப், ராம் கோபால் வர்மா போன்ற இயக்குநர்கள் அனிமல் படத்திற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்துள்ள நிலையில், மறுபக்கம் பல்வேறு பிரபலங்கள் அனிமல் படத்தை விமர்சித்துள்ளார்கள். குறிப்பாக இந்திய கிரிக்கெட் பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனட்கட் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும், நாடாளுமன்ற வரை சென்றுள்ளது அனிமல் பட சர்ச்சை. மாநிலங்களவையில் பேசிய காங்கிரஸ் எம்பி ரஞ்சீத் ரஞ்சன், "பெண்கள் மீதான வெறுப்பை இந்த படம் நியாயப்படுத்துகிறது.
சினிமா என்பது சமூகத்தின் கண்ணாடி. நாம் சினிமா பார்த்து வளர்ந்தவர்கள். அது இளைஞர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும். முதலில் கபீர் சிங், புஷ்பா போன்ற படங்கள் வந்தது. இப்போது அனிமல் வந்திருக்கிறது. என் மகள் தன் கல்லூரி நண்பர்களுடன் படம் பார்க்கச் சென்றாள். அழுகையை நிறுத்த முடியாமல் படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறினாள்.
படத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் காட்டப்படுகிறது. இது இளைஞர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். கபீர் சிங்கைப் பாருங்கள், அவர் தனது மனைவி, மக்கள் மற்றும் சமூகத்தை எவ்வாறு நடத்துகிறார். மேலும் திரைப்படம் அந்த செயல்களை நியாயப்படுத்துகிறது. இளைஞர்கள், அவரை ஒரு முன்மாதிரியாகக் கருதத் தொடங்குகின்றனர். திரைப்படங்களில் நாம் பார்ப்பதால், சமூகத்திலும் இதுபோன்ற வன்முறைகளைப் பார்க்கிறோம்" எனப் பேசியுள்ளார்.
காப்பியா அனிமல்
In the whole #Animal movie the only theatrical worth scene was the interval fight scene....looks like that was also copied !!pic.twitter.com/mHRG9eI9jc
— AmuthaBharathi (@CinemaWithAB) December 11, 2023
அனிமல் படத்தின் இடைவேளைக் காட்சி வெகுஜன ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது இந்தக் காட்சியும் முன்பே வெளியான ஒரு படத்தில் இருக்கும் காட்சியைப் போலவே இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். மேலும், “படத்தில் அந்த ஒரு காட்சிதான் உருப்படியாக இருந்தது, இப்போது அதுவும் காப்பி என்று தெரிந்துள்ளது” என்று நெட்டிசன்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.