`எப்போது திருமணம்?’ - ரன்பீர் கபூர், ஆலியா பட் கல்யாணம் லேட்டாக இதுவா காரணம்?
தற்போது ரன்பீர் கபீரும், ஆலியா பட்டும் தங்கள் திருமணத்திற்கான தேதியை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் புதிதாக வெளியாகியுள்ளன.
பாலிவுட் உலகின் தற்போதைய ஹாட் டாபிக், ரன்பிர் கபூர் - ஆலியா பட் திருமணம். விக்கி கௌஷல் - கத்ரினா கைஃப் ஜோடிக்கு நிகராகத் திருமண நாளை எதிர்கொண்டு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் இடையிலான காதல் குறித்த தகவல்கள் வெளியாகியவுடன், ரசிகர்கள் இந்த இருவரின் திருமணம் குறித்த செய்திகளுக்காக ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த ஆண்டின் இறுதியில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியான நிலையில், தற்போது ரன்பீர் கபீரும், ஆலியா பட்டும் தங்கள் திருமணத்திற்கான தேதியை அடுத்த ஆண்டுக்கு ஒத்தி வைத்துள்ளதாகத் தகவல்கள் புதிதாக வெளியாகியுள்ளன.
ரன்பீர் கபூர் - ஆலியா பட் தம்பதியினர் தங்கள் திருமணத் தேதியை ஒரு ஆண்டுக்குப் பிறகு வைத்துக் கொள்ள முடிவெடுத்துள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. இருவரின் தேதிகளும் முழுவதுமாக நிரம்பி இருப்பதாலும், இருவரும் டெஸ்டினேஷன் வெட்டிங் என்ற ஆடம்பரத் திருமண நிகழ்வைத் திட்டமிடுவதால் அதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
`இருவரும் பல்வேறு முக்கிய திரைப்படங்களில் நடித்து வருவதால், இருவரின் தேதிகளும் எப்போதும் பிஸியாகவே இருக்கிறது. தற்போது டிசம்பர் வந்திருப்பதால், அடுத்த ஆண்டுக்கான தயாரிப்பில் இருவருமே இருக்கப் போவதாகத் தெரிகிறது. மேலும், இருவரும் இந்தியாவுக்கு வெளியில் ஆடம்பரமாக டெஸ்டினேஷன் வெட்டிங் குறித்து திட்டமிட்டிருப்பதால், அதன் பணிகள் மேலும் நேரம் கோருபவையாக இருக்கின்றன. மேலும் இருவரும் திருமணத்திற்கு முன்பு, பின்பும் பெரிய இடைவெளி ஒன்றை எடுக்க இருக்கின்றனர்’ என்றும் ரன்பீர் கபூர், ஆலியா பட் ஆகியோருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
`மூன்றாவது முக்கிய காரணமாக இருப்பது, இருவரும் இணைந்து நடிக்கவுள்ள `பிரம்மாஸ்திரா’ திரைப்படம். ரன்பீர் கபூர், ஆலியா பட் உள்பட படக் குழுவினர் அனைவரும் இருவரும் திருமணம் முடிந்து கணவன் மனைவியாக மாறும் முன்பே, `பிரம்மாஸ்திரா’ திரைப்படம் வெளியாக வேண்டும் என நினைக்கின்றனர். வரும் 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் `பிரம்மாஸ்திரா’ திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே படம் வெளியான பிறகு, 2022ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2023ஆம் ஆண்டின் தொடக்கத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன’ என்றும் இந்தத் தகவல்களுடன் தொடர்ச்சியாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் மும்பையில் இன்னும் முழுமையாக கட்டப்படாத வீட்டிற்கு ரன்பீர் கபூரும் ஆலியா பட்டும் வருகை தந்தது பலரின் கண்களுக்கும் தென்பட்டது. இருவரும் திருமணத்திற்குப் பிறகு, இந்தப் புதிய வீட்டிற்குக் குடியேறும் திட்டத்துடன் இருவரும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.