Ved | ஹேப்பி தாத்து.. `அண்ணாத்த’ படம் பார்த்துவிட்டு ரஜினியைக் கட்டியணைத்த பேரன் வேத்!
கடந்த அக்டோபர் 28 அன்று, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது `ஹூட்’ அக்கவுண்டில் `அண்ணாத்த’ திரைப்படத்தைத் தனது குடும்பத்தினருடன் பார்வையிட்டது குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் 28 அன்று, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது `ஹூட்’ அக்கவுண்டில் `அண்ணாத்த’ திரைப்படத்தைத் தனது குடும்பத்தினருடன் பார்வையிட்டது குறித்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் `ஹூட்’ என்ற சமூக வலைத்தள செயலியை அறிமுகம் செய்து வைத்தார். இந்த செயலியின் அறிமுக விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தனது முதல் பதிவை இந்த செயலியில் வெளியிட்டு, பலரையும் இந்த செயலியைப் பயன்படுத்துமாறு வரவேற்பு விடுத்தார். பிற சமூக வலைத்தளங்களைப் போலவே இருந்தாலும், `ஹூட்’ செயலியில் குரல் வழியிலான பதிவுகளை மட்டுமே மேற்கொள்ள முடியும். இதன்மூலம் மக்கள் தாங்கள் சொல்ல விரும்புவதைக் குரல் வழியாகப் பதிவு செய்து, `ஹூட்’ செயலியில் பதிவேற்றலாம்.
இந்நிலையில், வரும் நவம்பர் 4 அன்று, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரஜினிகாந்த் நடிப்பில் `அண்ணாத்த’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. `அண்ணாத்த’ திரைப்படம் வெளியாவதை முன்னிட்டு, சிறப்புக் காட்சியாக சென்னையிலுள்ள ப்ரிவ்யூ தியேட்டர் ஒன்றில் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் `அண்ணாத்த’ திரைப்படத்தைப் பார்வையிட்டுள்ளார். படம் முடிவடைந்த பின், படம் குறித்த தனது நெகிழ்ச்சியான அனுபவத்தைத் தனது மகள் புதிதாக வெளியிட்டுள்ள `ஹூட்’ செயலியில் பதிவிட்டுள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
தனது உருக்கமான குரலில் பேசியுள்ள ரஜினிகாந்த், ``அண்ணாத்த’ திரைப்படத்தை லதா, ஐஷ்வர்யா, சௌந்தர்யா, விசாகன், வேத் ஆகியோருடனும், எனது உறவினர்களான வணங்காமுடி, உஷா வணங்காமுடி ஆகியோருடனும் பார்த்தேன். படத்தை என் அருகில் அமர்ந்து பார்க்க வேண்டும் என வேத் மிகவும் விரும்பினான். படம் பார்த்து முடித்தபின், வேத் என்னை அழுத்தமாகக் கட்டியணைத்து, சுமார் 3, 4 நிமிடங்களுக்குப் பிறகு, `நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன் தாத்து!’ என்று கூறினார். மகிழ்ச்சியான உணர்வில் இருந்தால் வேத் என்னைத் `தாத்து’ என்றே அழைப்பான். மேலும், நாங்கள் அனைவரும் ஒரு திரைப்படத்தை ஒன்றாக அமர்ந்து பார்ப்பது இதுவே முதல் முறை. வேத்திடம் நன்றி தெரிவித்துவிட்டு, திரையரங்கை விட்டு வெளியில் வந்த போது, எனக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாகத் தயாரிப்பாளர் கலாநிதி மாறம் வெளியில் நின்றுகொண்டிருந்ததோடு, என்னைப் புன்னகையுடன் வரவேற்றார். தனது பரபரப்பான பணிகளுக்கு இடையில் அவர் அங்கு வந்து நின்றது எனக்கு மேலும் நெகிழ்ச்சியைத் தந்துள்ளது’ என்று பதிவிட்டுள்ளார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள `அண்ணாத்த’ திரைப்படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ரஜினியுடன், நயன்தாரா, குஷ்பூ, மீனா, கீர்த்தி சுரேஷ், ஜெகபதி பாபு, சதீஷ், சூரி முதலான பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரைலர் நேற்று வெளியிடப்பட்டது.