45 years of Allauddinum Athbudha Vilakkum : 'ஆலம்பனா நான் உங்கள் அடிமை' : அலாவுதீனும் அற்புத விளக்கும்' திரைப்படம் வெளியான நாள்...
45 years of Allauddinum Athbudha Vilakkum : நடிகர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இணைந்து நடித்த படங்களில் மிகவும் வித்தியாசமான படமான 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படம் வெளியான நாள் இன்று.
தமிழ் சினிமாவின் இரு பெரும் ஜாம்பவான்களான ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரும் இணைந்து நடித்த அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, பதினாறு வயதினிலே, அவள் அப்படித்தான், நினைத்தாலே இனிக்கும், ஆடு புலி ஆட்டம், தப்பு தாளங்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள மற்றொரு திரைப்படம் 1979ம் ஆண்டு வெளியான 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' திரைப்படம்.
இதில் அலாவுதீனாக கமல்ஹாசனும் கமருதீனாக ரஜினிகாந்தும் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
ஐ.வி. சசி இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயபாரதி, அசோகன், சாவித்ரி, ஸ்ரீப்ரியா, ஜெமினி கணேசன், வி.எஸ். ராகவன், பி.ஏஸ். வீரப்பா, ஆர்.எஸ். மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். சிறு வயது முதலே புத்தகங்களில் விரும்பி வாசித்த ஒரு கதையை கொஞ்சம் திரைக்கதைக்கு ஏற்றபடி ஆக்ஷன், காதல் கலந்து உருவாக்கப்பட்டு இருந்தது. இப்படத்தில் மிகவும் ரசிக்க கூடிய விஷயம் என்றால் விளக்கை தேய்த்ததும் அதில் இருந்து பெரிய பூதமாக நடிகர் அசோகன் வெளிவந்து 'ஆலம்பனா நான் உங்கள் அடிமை' என படம் முழுக்க சொல்லும் அந்த வசனமே.
ஈராக்கின் பாக்தாத் நகரத்தில் நடப்பது போன்ற திரைக்கதை என்பதால் படத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் போல உடை அணிந்து கொள்வது, உணவுகளை உண்பது போல சித்தரிக்கப்பட்டு இருந்தது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியால் கிராபிக்ஸ் காட்சிகளை படமாக்குவது எளிதாக இருக்கலாம் ஆனால் அன்றைய காலகட்டத்திலேயே அப்படத்தின் மாயாஜால காட்சிகள் மிகவும் அற்புதமாக பிரமாண்டமாக படமாக்கப்பட்டு இருப்பது ஆச்சரியத்தை அளித்தது.
இப்படம் வெளியாகி 45 ஆண்டுகளை கடந்தாலுமே இன்றும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்க கூடிய படமாக 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படம் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. தமிழ் மற்றும் மலையாளம் இரு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
1957ம் ஆண்டில் ரகுநாத் இயக்கத்தில் நடிகர் நாகேஸ்வர ராவ். அஞ்சலி தேவி, ரங்காராவ், டி.எஸ். பாலைய்யாவின் நடிப்பில் வெளியான 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' படத்தை மைய கருவாக வைத்து எடுக்கப்பட்டது. அப்படம் வெளியாகி 22 ஆண்டுகளுக்கு பிறகு மலையாள இயக்குநர் ஐ.வி சசி இதை மலையாளம் மற்றும் தமிழில் ஒரே நேரத்தில் உருவாக்கி வெளியிட்டார்.